திங்கள், 24 ஆகஸ்ட், 2009

சூரிய ஒளியில் இயங்கும் விளக்கு,
மின்விசிறி தயாரிக்க புதிய திட்டம்



மும்பை, ஆக. 23: கோடை காலத்தில் ஆண்டு இறுதித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் இனி மின்சார வெட்டு குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தடையின்றி படிக்க சூரிய ஒளியில் செயல்படும் மின்சார விளக்குகளையும், மின் விசிறிகளையும் தயாரிக்கும் திட்டம் உருவாகிவருகிறது. இந்த விளக்கு வித்யா ஜோதி என்று அழைக்கப்படும். மின் ஆற்றலை மிகவும் திறமையான வகையில் தயாரிப்பதற்கான சிறப்புப் பிரிவும் மரபுசாரா எரிசக்தி உற்பத்திப் பிரிவும் இணைந்து இவ்விரு சாதனங்களை மாணவர்களை மனத்தில் வைத்து தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதைத் தயாரிக்கப் போவது யார் என்பது வெகு விரைவில் இறுதி செய்யப்படும். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து இப்போது வீடுகளில் வென்னீர் போடுகிறார்கள். அதே அடிப்படையில் விளக்குகளை எரியவிடவும் ஃபேன்களை இயக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனங்களைத் தயாரிக்க ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை செலவாகும் என்றாலும் இதைப் பெரிதும் பயன்படுத்தப்போவது மாணவர்கள்தான் என்பதால் இதன் விலையை ஆயிரம் ரூபாய்க்கும் அடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். லட்சக்கணக்கில் இவை தயாரிக்கப்பட்டால் உற்பத்தி விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு உண்டு. இந்த வகைச் சாதனங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அணுகப்படும். ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விளக்கும் மின் விசிறியும் மிகவும் பயன்படும். நாளடைவில் இது வீடுகளில் மற்றவர்களுக்கும் பயன்படும். இதனால் நாட்டில் கணிசமான மின்சாரம் மிச்சப்படும். இத் தகவல்களை மரபுசாரா எரிசக்தி அறக்கட்டளைத் தலைவர் அனில் ராஸ்தான் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக