ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால்
பான் கீ மூனுக்கு நெத்தியடி
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

ஐ.நா செயலர் பான் கி மூன் தலைத்துவமேந்த அருகதை இல்லாதவர், மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடத் தெரியாதவர், கோபக்காரர் என பல குற்றங்களை ஐ.நா வுக்கான நோர்வே தூதுவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நோர்வே ஒஸ்லோ பத்திரிகை ஆஃப்டன்போஸ்டன் கூறியுள்ளது. நோர்வே தூதுவரான மோனா ஜூல், ஜ.நாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மற்றும் சர்வதேச தலையீடுகள் தேவைப்பட்ட சந்தர்ப்பத்திலெல்லாம் பான் கி மூன் அமைதியாக இருந்துள்ளார். பான் கீ மூன் ஒரு தகுதியில்லாத செயலர் என்ற கோணத்தில் அவருடைய பதவி நோக்கப்படுவதற்கு இலங்கை ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு படை நடவடிக்கையில் நடைபெற்ற பாரதூரமான மானித அவலங்களை அவர் நேரடியாகச் சென்று பார்த்தும் கூட அதுபற்றி எதுவித அக்கறையும் மகிந்த அரசுக்குக் காண்பிக்கவில்லை.

இது போல படு மோசமான அராஜக இராணுவ ஆட்சி நடந்து வருகின்ற மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ குயி வீட்டுக்காவலில் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க பான் கி மூன் தவறியுள்ளார் என இக்கடிதத்தில் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கடிதத்தின் ஆங்கீகாரம் பற்றி, நோர்வே வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். நோர்வே மொழியில் உள்ள இக்கடிதமானது, பான் கி மூன் நோர்வேக்கு வருகின்ற 31 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல பாகிஸ்தான், டார்பர், சோமாலியா, சிம்பாவே மற்றும் மிகச் சமீபமாக கொங்கொ நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும் பான் கி மூன் ஒருவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இவரோடு சர்வதேச விவகாரங்களை பேச முடியாதுள்ளதாகவும், எப்படி உலக விவகாரத்தை கையாள்வது என்ற தொழில் நுட்பம் தெரியாத ஒருவராகவும், பேசும்போது கோபமாக சகலதையும் நிராகரிப்பவராகவும் இவர் இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் கூறப்படுகிறது. இவ்வாறான குற்றச் சாட்டுகளால் பான் கி மூனின் நோர்வே விஜயம் ரத்துச் செய்யப்படுமா என்று கேட்டபோது அவ்விஜயம் திட்டமிட்டபடி நடக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஐ.நா ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக