வியாழன், 27 ஆகஸ்ட், 2009



பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றுக் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா!

சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், "வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்று பலித கோஹனா கூறியுள்ளார்.

இப்படிக் கூறியதின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரில் சிறிலங்க அரசும், அதன் படைகளும் போர் குற்றம் புரிந்தன என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அப்படிபபட்ட போர் குற்றங்களை இழைத்ததற்காக எங்களை யாரும் தண்டிக்க முடியாது என்று பெளத்த சிங்கள மேலாதிக்கத் திமிருடனேயே அவர் பேசியுள்ளார்.

"போரில் வெற்றி பெற்றவர்களையும் அக்குற்றத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றால் அதனை துவக்க வேண்டிய இடம் வேறொங்கோ உள்ளது" என்று கூறியவர், அது எந்த இடம் எது என்பதையும் சுட்டிக்காட்டாமல் விடவில்லை.
போரின் போது நாங்கள் அணு குண்டைப் போடவில்லை, நகரங்களை அழிக்கவில்லை" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கோஹனா. அதாவது தமிழ் மக்களை அழித்தது உண்மை, ஆனால் அணு குண்டை போட்டு பெரிய அழிவை ஏற்படுத்தவில்லை. மக்களை அழித்தோம், அவர்களின் இல்லங்களை நிர்மூலமாக்கினோம், ஆனால் அவர்கள் வாழ்ந்த இடங்கள் அப்படியே இருக்கின்றன. அமெரிக்காவைப் போல் நாங்கள் அணு குண்டையா போட்டோம், நாகசாகி, யூரோஷிமா ஆகியவற்றை அழித்தது போல நகரங்களையா அழித்து நிர்மூலமாக்கினோம்? என்று பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டி, அதற்கு அமெரிக்காவை தண்டிக்க தவறிய சர்வதேசம், அப்படி எதையும் செய்யாத எங்களை தண்டித்து விடுமா என்ன? என்று கேட்டுள்ளார் பலித கோஹனா.
அணு குண்டைப் போடவில்லை, ஆனால் தமிழர்களுக்கு எதிரான பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தின சிறிலங்கப் படைகள். மக்களையும், மரம் செடி கொடிகளையும் எரித்துப் பொசுக்கும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், விண்ணிலேயே வெடித்து பல குண்டுகளாகி பரவலான வெடிக்கும் கொத்துக் குண்டுகளை (Cluster Bombs) வீசி தமிழர்களை கொன்று குவித்தன சிறிலங்கப் படைகள். இவை யாவும் அணு ஆயுதத்தை ஒத்த அழிவில் ஒரு சிறிபகுதியிலாவது ஏற்படுத்தினவா இல்லையா என்பதை சர்வதேச சமூகம் கேட்க வேண்டும்.

பலித கோஹனாவின் பேட்டியில் இருந்து மற்றொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது உலகப் போரில் இரண்டரைக் கோடி யூதர்களை கொன்று குவித்தது ஹிட்லரின் நாஜி அரசு. ஆனால் அது தோற்றதால்தான் தண்டனைக்குள்ளாக்கப்பட்டதே தவிர, யூதர்களை இனப் படுகொலை செய்ததால் அல்ல என்று ஒரு காட்மிராண்டித்தனமான தர்க்கத்தை மறைமுகமாக வைக்கிறார் கோஹனா.


ஐ.நா.வும், அதன் மனித உரிமை மன்றமும் முன்மொழிந்து உலக நாடுகளின் ஆதரவுடன் ஏற்க்கப்பட்ட இனப் படுகொலைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை, அந்த உடன்படிக்கைக்கு ஏற்பளித்த ஒரு நாட்டின் ஐ.நா.விற்கான தூதர், ‘தோற்றதால்தான் இனப் படுகொலைக் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனர்’ என்று கூறுவதில் இருந்து தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் பெளத்த சிங்கள இனவாத மனப்பாங்கை இதற்கு மேலாகவாவது உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.


பலித கோஹனா மட்டுமல்ல, ராஜபக்சவும் இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழின் ஆசிரியருக்கு அளித்த பேட்டியில் மகிந்த ராஜபக்ச தெரிவித்த உண்மையையும் சர்வதேச சமூகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

அந்தப் பேட்டியில் மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டத் தாக்குதலே என்று ராஜபக்ச கூறியிருந்தார். அவர் ஆங்கிலத்தில் கூறியது இதுதான்:

The No-Fire Zones were all announced by the armed forces. After Kilinochchi, they were saying: "No-Fire Zones, so go there." So all of them [the LTTE leaders and fighters] went there. These were not areas demarcated by the U.N. or somebody else; they were demarcated by our armed forces. The whole thing was planned by our forces to corner them.


"விடுதலைப் புலிகளை சுற்றி வளைக்கவே பாதுக்காப்பு வலயங்களை (No Fire Zone) உருவாக்கினோம். அதன் மீது தாக்குதல் நடக்காது என்று நினைத்து விடுதலைப் புலிகளின் தலைவர்களும், போராளிகளும் சென்றனர். இப்பகுதியை உருவாக்கியது ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ அல்ல, எங்களது இராணுவம்தான். அவர்களை சுற்றி வளைக்கவே இவ்வாறு திட்டமிட்டோம்" என்று ராஜபக்ச கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளை சுற்றி வளைக்க பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியதாகக் கூறுகிறார். ஆனால் அங்கு சென்று தஞ்சமடைந்தவர்கள் நிராயுதபாணியான பொதுமக்கள்தான் என்பதும், அதனை அறிந்திருந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் போர் குற்றம் அல்லவா?

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் அனைவரும் (3,30,000 பேர்) விடுதலைப் புலிகள் என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று அந்தப் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கவில்லை, ஏனென்றால் அவர் ராஜபக்சயின் விசுவாசி.
ஆக பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த மக்கள் அனைவரையும் சிறிலங்கத் தரப்பு விடுதலைப் புலிகள் என்றே கருதியது, அதனால்தான் அங்குள்ள மருத்துவமனைகளைக் கூட சட்டப்பூர்வமான இராணுவ இலக்கு (legitimate military target) என்று கோத்தபய ராஜபக்ச கூறினார்.

எனவே ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமில்லை, சிறிலங்க அரசின் அதிகார வர்க்கமும் அவர்களுக்குள்ள அதே பெளத்த சிங்கள மேலாதிக்க வெறித்தனத்துடன்தான் தமிழின இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது பலித கோஹனாவின் பேட்டியில் இருந்து உறுதியாகிறது.
அரசியல் தீர்வை மறுக்கும் ஆணவம்!

"தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டியதற்கு என்ன தர்க்க அடிப்படை உள்ளது என்பது தனக்கு விளங்கவில்லை" என்றும் அப்பேட்டியில் கூறியுள்ள பலித கோஹனா, "இலங்கையில் வாழும் தமிழர்களில் 54 விழுக்காட்டினர் கொழும்புவைச் சுற்றித்தான் வாழ்கின்றனர். வடக்கில் ஒட்டு மொத்தமாக ஏழரை இலட்சம் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். இவர்களில் வன்னியில் மூன்று இலட்சம் பேர் உள்ளனர், அவர்களும் முகாம்களில் உள்ளனர். வன்னிக்கு வெளியே ஒருவரும் இல்லை. மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே இவர்களுக்காக அரசியல் தீர்வு எதுவும் தேவையில்லை" என்கிறார் பலித கோஹனா.

பலித கோஹனாவின் பேட்டியைப் படிக்கும் தமிழரல்லாதவர் எவரும் கூட அவர் கூறுவது நியாயம்தானோ என்றே எண்ணத் தோன்றும். இவர் கூறும் கணக்கு இன்றைய கணக்கு! 1948ஆம் ஆண்டில் இலங்கை வெள்ளையனிடமிருந்து விடுதலைப் பெற்றதே அப்போது எவ்வளவு தமிழர்கள் எங்கெங்கு இருந்தார்கள், அவர்களின் மக்கட் தொகை எவ்வளவு? சிங்களவர்களின் எண்ணிக்கை என்ன, அவர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள்? என்பதைப் பார்த்தால் தெரியும், அரசியல் தீர்விற்கான அவசியம்.


கூட்டுப் பண்ணைத் திட்டம் என்று கூறி சிங்களர்களைக் கொண்டு வந்து தமிழர்கள் பகுதியில் குடியேற்றியது, தமிழர்கள் பகுதியில் கலவரங்களைத் தூண்டி விட்டு தமிழினப் படுகொலையை திட்டமிட்டு தொடர்ந்தது. தமிழர்களின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் விமானங்களைக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக குண்டு வீசி கொன்றது, அங்கு வாழ்ந்து வந்த பல இலட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்து வாழ வழி தேடி உலகெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டது என்று ஒரு நேரத்தில் இலங்கையின் மக்கட் தொகையில் சற்றேறக்குறைய 45 விழுக்காடு இருந்த தமிழர்கள் இன்று 16 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு நேர் எதிராக சிங்கள மக்கட் தொகை பெருகி இன்று 66 விழுக்காட்டினர் அவர்களே என்ற நிலை ஏற்பட்டுள்ளது! மக்கட் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் சிங்களப் பகுதியிலேயே பெருகியது. இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எப்படி வளர்ந்தது(?) என்பதை கவனித்தால் இந்த இன அழிப்பின் அடிப்படை புரியும்.

பெளத்த சிங்களர்களை பெரும்பான்மையாக்கி, அதன் மூலம் இலங்கையை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தின் கீழ்தான் தமிழர் இனப் படுகொலை நடத்தப்படுகிறது என்பது உலக நாடுகளுக்கு புரியாமல் இருக்கலாம். இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளுக்கு அந்த உண்மை தெரிந்திரிந்தும் கண்களை மூடிக்கொண்டு தங்களின் ‘அரச நலனை’ காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை. வரலாற்றாளர்கள் அறிந்த உண்மை.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வடக்கில் போர் நடத்தி ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்துவிட்டு, இப்போது மக்கட் தொகை கணக்கெடுப்பை முடுக்கி விட்டுள்ளது சிங்கள ராஜபக்ச அரசு. இந்த மக்கட் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தெரியும், தமிழர்களின் அரசியல் பலம் எவ்வளவு விஞ்சுகிறது என்பது.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ இவருக்கு மட்டுமே தர்க்கவாதம் தெரியும் என்பதுபோல, கொழும்புவைச் சுற்றிலும் 54 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள் என்று பேசுகிறார் பலித கோஹனா! தமிழர்கள் வாழும் பகுதிகள் மீதெல்லாம் குண்டு வீசிகிறீர்கள், கொழும்புவில் உள்ள தமிழர் பகுதிகளில் அப்படி குண்டுகள் வீசிவீர்களா? முடியாது. ஏனென்றால் அது சிங்களவன் தலையிலும் விழுமே, அதனால்தான் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கொழும்புவில் வந்து வாழ்கிறான் தமிழன். அப்படிப்பட்டவனையும் காலி செய்து அனுப்ப நடத்தப்பட்டதுதானே 1983 உட்பட பல முறை நடந்தேறிய இனக் கலவரங்கள்?
வடக்கில் தமிழர்கள் மீது இனப் படுகொலைப் போர் நடந்துகொண்டிருந்தபோது கொழும்புவில் வாழந்துவரும் தமிழர்களை பாதுகாப்பு காரணங்களுக்கான என்று கூறி வெளியேற்ற முயற்சித்ததே சிறிலங்க அரசு? மறுக்க முடியுமா? அந்த நடவடிக்கையை மற்ற நாடுகள் கடுமையாக கண்டித்ததால் நிறுத்திக் கொண்டது.

இன்றும் தொடரும் இனப் பாகுபாடு (Racial Discrimination)!

போர் முடிந்துவிட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்று கூறும் சிறிலங்க அரசு, இன்றும் தனது தமிழின விரோத நடவடிக்கையை கைவிடவில்லை என்பதற்கு இன்றும் பல உதாரணங்கள் உள்ளன.

கொழும்புவில் உள்ள தமிழ் வாணிகர்களை அவர்கள் செய்யும் வாணிகத்திலிருந்தே விரட்ட, சி்ங்கள வாணிகர்களுக்கு வரிச் சலுகையும், தீர்வைச் சலுகையும் வழங்க சிறிலங்க அரசு முடிவெடுத்துள்ளது.

சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட இனவாத சதிகளை உணர்ந்த தமிழ் வாணிகர்கள் கொழும்புவில் இருந்து வெளியேறுக்கின்றனர் என்றும், அவர்கள் வெளியேறுவதையே சிறிலங்க சிங்கள இன வெறி அரசு விரும்புகிறது என்றும் அங்கிருந்தும் வரும் செய்திகள் கூறுகின்றன.

சர்வதேசம் விழித்தெழ வேண்டும்!
இப்படிப்பட்ட இன வெறி அரசை, அது தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலைக்காகவும், போர் குற்றத்திற்காகவும், அவர்களின் அடிப்படை உரிமையற்றவர்களாக்கி வதைத்த மானுடத்திற்கு எதிராக குற்றச் செயல்களுக்காகவும், சொந்த நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பை தட்டிக் கழித்த குற்றத்திற்காகவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அந்த விசாரணையில், சாட்சிகளற்ற போர் என்று வர்ணிக்கப்படும் தமிழர் இனப் படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளாக தற்பொழுது முகாம்களில் முடங்கிக் கிடக்கும் மக்களை விசாரிக்க வேண்டும். உண்மை வெளிவர உலக நாடுகள் ஒன்றிணைந்த செயலாற்ற வேண்டு்ம்.

அவ்வாறு செய்யத் தவறினால் பலித கோஹனா கூறியது போல வெற்றி பெற்றவனை தண்டிக்க திராணியற்றது சர்வதேசம் என்ற கருத்து உண்மையாகும். அதுமட்டுமல்ல, முள்வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் தடயமின்றி அழித்தொழித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக