செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

தமிழகமெங்கும் நாளை(26.08.09)
”தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” போராட்டங்கள்
பிரசுரித்த திகதி : 25 Aug 2009

தமிழகமெங்கும் நாளை 26.08.09 அன்று ”தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்படுகி்ன்றது. இந்நாளில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ”தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ”தமிழ்த் தேசிய எழுச்சி நாளா”க கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தமிழக இழந்த உரிமைகளை மீட்கவும், ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது.

அதன்படி நாளை தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்நாளில் போராட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன.

தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடக்கவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார்.

சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார். இதில், திரைப்படப்பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தமிழ் வெப்துனியா இணையத்தின் ஆசிரியர் அய்யநாதன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், வழக்கறிஞர் இளவரசன், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் உரை வீச்சு நிகழ்த்துகின்றனர்.

ஈரோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்குகிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோடு பொறுப்பாளர் மோகன்ராசு, பெரியார் திராவிடர் கழகம் குமரகுருபரன், சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் பேரணி - தெருமுனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்நிகழ்விற்கு, இளந்தமிழர் இயக்கம் ஆத்தூர் பொறுப்பாளர் க.ஆனந்த் தலைமை தாங்குகிறார். குடந்தைத் தமிழர் கழகம் அமைப்பாளர் ச.பேகன், பெரியார் திராவிடர் கழக ஆத்தூர் பொறுப்பாளர் சோ.மு.சண்முகம், கவிஞர் ஆலா, ஓவியர்கள் கார்த்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதே போன்று நிகழ்ச்சிகள் ஈரோடு, சிதம்பரம், ஓசூர், மதுரை, திருத்துறைப்புண்டி, திருச்செந்தூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், கருத்தரங்கம் என நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக