வியாழன், 27 ஆகஸ்ட், 2009

சரத் பொன்சேகாவின் சமையற்காரர் புலிகளின் உளவுத்துறையைச் சேர்ந்தவர்
பிரசுரித்த திகதி : 26 Aug 2009

ஏப்பிரல் 25, 2006 இல் சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கான உளவு வேலைகள் அனைத்தையும் பார்த்து புலிகளுக்கு அறிவித்தது அவரது சமையற்காரர் சித்திக் எனத் தெரியவந்துள்ளது. டெய்லி நியூஸ் செய்தியின்படி, அன்றைய தினம், சரத் பொன்சேகா மதிய உணவுக்காக அலுவலகத்தை விட்டு வெளியேறிச் சென்றதை தற்கொலைதாரி பெண்ணிடம் தொலை பேசி மூலம் அறிவித்தவர் இந்த சித்திக் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 இல் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அவரிடம் சமையற்காரராக இருந்த சித்திக்கை, தாம் 2004 இல் கொழும்புக்கு வந்தபோது கூட்டிவந்து கொழும்பு அலுவலக சமையலுக்காக வைத்திருந்ததாகவும், அவர் சமையற்கலை தவிர, தமது தலைமையலுவலகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தவிருந்த பெண்ணுக்கு தகவல் பரிமாறி, தலைமை அலுவலகத்துக்குள் அப்பெண் ஊடுருவி தம்மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு உளவுத்துறை வேலையைச் செய்துள்ளார் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

சரத் பொன்சேகா 2004 டிசம்பரில் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சித்திக் விபத்து ஒன்றில் அகப்பட்டு ராணுவ தலைமையலுவலகத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயத்தில், குறித்த தற்கொலைக் குண்டுதாரி, தாம் சித்திக்கின் உறவினர் எனக் கூறி 4 அல்லது 5 தடவைகள் அங்கு சென்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது. அங்கு வைத்தே தலைமைக் காரியாலய தற்கொலைத் தாக்குதல் பற்றியும், சரத் பொன்சேகாவைப் பின் தொடர்வது பற்றியும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதோடு அந்த மருத்துவமனைக்கு தாமும் சென்று வந்துள்ளதாக பொன்சேகா கூறியுள்ளார். சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தி கொல்வதற்கான இலக்கு 1991 முதலே அரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் 2006 தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொன்சேகா உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

இரு கிழமைகளுக்கு முன்னர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சித்திக், சிறையில் தமது ஷேர்ட்டைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக