கொழும்பு, ஜூலை 20: இலங்கை அரசின் உத்தரவை அடுத்து தமிழர் பகுதிகளில் இருந்த நான்கு அலுவலகங்களை மூடிவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவந்தது. மேலும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை முடிவுக்கு வந்துவிட்டதால் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிவாரண அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து திருகோணமலை, அக்கரைபட்டு, மட்டக்களப்பு மற்றும் முட்டூர் ஆகிய இடங்களில் இருந்த அலுவலகங்களை மூடிவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்
விடுதலைப் புலிகளைத்தான் ஒழித்து விட்டதாகக் கூறுகிறார்களே! பிறகு அவர்கள் யாருக்கு உதவப் போகிறார்கள்? மக்களுக்குத்தானே! மனித நேய உதவியின்றி மடியட்டும் தமிழர்கள் எனச் சிங்கள அரசு திட்டமிடுகிறது. அதற்கு அடிபணிகின்றன உலக அமைப்புகள்! செயல்படா ஊக்கியாக - கிரியா ஊக்கியாக - இருந்து இந்தியா வேடிக்கை பார்க்கிறது. என்றைக்கு முடிவிற்கு வரும் இந்த அட்டூழியங்கள்? என்றைக்கு விடிவினைக் காண்பர் எந்தமிழர்? வேதனையுடன்
இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2009 3:58:00 AM