வியாழன், 23 ஜூலை, 2009

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 60 அகதிகள் உண்ணாவிரதம்



செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 60 பேர் புதன்கிழமையிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முகாமில் மொத்தம் 85 பேர் பல்வேறு வழக்குகளில் க்யூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இம்முகாமில் உள்ள செல்வக்குமார், ஜெயதாசன், சத்யசீலன் ஆகிய 3 பேர் கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று பேருடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் மேலும் முகாமில் உள்ள 60 பேர் புதன்கிழமையில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமில் சுதந்திரமாக வைக்கவும், தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக் கோரியும், வழக்குகளை துரிதப்படுத்தி விரைவில் தங்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வழக்கிலிருந்து விடுத்து தங்கள் குடும்பத்துடனும், உறவினர்களுடன் சேர்த்து வைக்கக் கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். போலீஸ் டிஸ்பி பாலசுப்ரமணியம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் வில்சன், க்யூ பிரிவு டிஸ்பி விஸ்நாதன் உள்ளிட்ட போலீஸôரும் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துக்கள்

. . . . . எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இச்சிக்கலில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் மூலமாக நீதி கிடைக்க உடனே உதவ வேண்டும்.

அப்பாவிகளின் துயர நிலை கண்டு வருந்தும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:33:00 AM

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டு இருப்பின் வழக்கு தொடுத்து நீதி மன்ற உசாவல் மேற்கொண்டு தீர்ப்பிற்கேற்ப தண்டனை அல்லது விடுதலை வழங்க வேண்டும். தண்டனை வழங்கப்பட்டால் தண்டனைக் காலம் முடிந்தால் விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் கால வரையறையின்றி இங்கு அடைத்து வைப்பது முறையன்று. இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவும் சிலர் உள்ளனர்; தண்டனைக் காலம் முடிந்த பின்னும் சிலர் உள்ளனர்; விசாரணை மேற்கொள்ளப்படாமலேயே சிலர் உள்ளனர். ஆயுள் தண்டனை என்றாலேயே 20 ஆண்டுகள் என வரையறை செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் குழு மூலம் விடுதலை செய்யும் தமிழக அரசு இவர்களை மட்டும் தொடர்ந்து வதைமுகாம்களில் அடைத்து வைப்பது முறையன்று. தமிழக ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிப்பதாக எண்ணிக் கொண்டு இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு அறமற்ற முறைகளில் தடுத்து வைப்பது முறைதானா? இலங்கைத் தமிழரர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைப் பொருள்களை வழங்கியதைக் கூடக் கடுங்குற்றமாகக் கருதி வதைப்பது முறைதானா? . . .-

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக