மண்டபம்:எல்லை தாண்டி பிடிப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டு சித்ரவதை செய்யப்படும் நிலையில், இந்தியா கடல் எல்லையில் பிடிப்படும் இலங்கை மீனவர்கள் ராஜ மரியாதையுடன் ஓட்டலில் தங்கவைக்கப் படுகின்றனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப் படும் தமிழக மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் ஜெயிலில் அடைக்கின்றனர்.
அங்கு தமிழக மீனவர்களை, சிங்கள போலீசார் குற்றவாளியை விட கேவலமாக நடத்துகின்றனர். ஆனால், எல்லை தாண்டியதாக இந்திய கடலோர காவல்படையினரிடம் பிடிபடும் இலங்கை மீனவர்கள் ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் எல்லைதாண்டி பிடிபட்ட இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் மண்டபம் தமிழ்நாடு ஓட்டலில் போலீஸ் பதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு கூட பதியப்படவில்லை.
இவர்களோ வெளியில் மீன், கறிகளை வாங்கி தாங்களே சமைத்து உண்கின்றனர். இவர்களிடம் கைப்பற்றப்படும் மீன்கள் ஏலம் விடப்பட்டு அவர்களிடமே அதற்கான பணமும் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பணத்தில் இவர்களோ, பகலில் சீட்டு விளையாட்டு, இரவில் மது அருந்தியும் ஏதோ பிக்னிக் வந்ததுபோல் மகிழ்ச்சியில் உள்ளனர்.இலங்கை அனுராதபுரம் சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் கூறுகையில்,இலங்கையில் எங்களை தமிழன்தானடா எனக்கூறி மிக தரக்குறைவாக நடத்துகின்றனர்.
கழிப்பறை, குளியலறையில் சிங்கள கைதிகளுக்குத்தான் முன்னுரிமை. அவர்கள் உபயோகப்படுத்திய பிறகு தான் நாங்கள் உபயோகிக்க முடியும். எங்கள் மீது இலங்கை அரசு வழக்கு பதிவு செய்கிறது. மீன்களையும் பறித்துவிடுகிறது. ஆனால் இந்திய அரசோ எல்லைதாண்டி பிடிப்படும் இலங்கை மீனவர்கள் மீது வழக்கு பதிவதில்லை. தமிழக மீனவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக கூறும் அரசியல்வாதிகளும் இதைப்பற்றி வாய்திறப்பதில்லை'' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக