புதன், 22 ஜூலை, 2009

தலையங்கம்::எதிர்க்கட்சிக்கு அழகல்ல!



அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் புறக்கணிப்புக்கு, ஆளும் கட்சியின் அராஜகம், வாக்குப் பதிவில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்கள் பணத்தால் விலைபேசப்படுவது என்று பல காரணங்கள் அதிமுக செயற்குழுவால் கூறப்பட்டுள்ளது.மக்களாட்சியில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமையே, இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்பதும் தடுப்பதும்தானே? ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள்மன்றத்தில் எடுத்துக்கூறி, அவர்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டி, தேர்தல் தில்லுமுல்லுகள் நடைபெறுவதைத் தனது தொண்டர் பலத்தால் தடுத்து, ஜனநாயகத்தைப் பேணிக் காக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. தவறு நடக்கிறது, நடக்கப் போகிறது என்று காரணம் காட்டி தேர்தலைப் புறக்கணிப்பது என்பது புறமுதுகு காட்டி ஓடுவதற்கு ஒப்பான விஷயமல்லவா?நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக கூட்டணி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. மொத்த வாக்குகளை எடுத்துக்கொண்டால் ஆளும் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசம் 2009 மக்களவைத் தேர்தலில் 16 லட்சம் மட்டுமே. அதிமுக கூட்டணியில் தொண்டர்கள் பல இடங்களில் விலைபோகாமல் இருந்திருந்தால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்திருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளரே பொதுக்குழுவில் கூறியிருப்பதையும் இங்கே நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மதிமுகவையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தனது தோழமைக் கட்சிகளாகக் கொண்டிருந்த அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள். இளையான்குடி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் இப்போது அதிமுகவில் இணைந்துவிட்டிருக்கிறார். காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த ஸ்ரீவைகுண்டம் தவிர, ஏனைய நான்கு தொகுதிகளிலும் அதிமுக அணி வெற்றி பெற எல்லா சாத்தியங்களும் இருந்தும் தேர்தலைப் புறக்கணிப்பது என்று அதிமுக முடிவெடுத்திருப்பதும், அதை அந்த அணியிலுள்ள ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் மக்களின் அதிருப்தி உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது. அரிசி விலை மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரம்பை மீறி கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கும் நிலைமை.இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கி, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து மக்கள் மன்றத்தில் ஆதரவு கோர வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, தேர்தல் தில்லுமுல்லுகள், வாக்குகள் விலை பேசப்படுதல் போன்றவற்றை மக்கள் ஆதரவுடனும், தொண்டர்களின் ஆதரவுடனும் தடுத்து நிறுத்தும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, போட்டிக்கு முன்பே பந்தயத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அந்தக் கட்சி செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறதா இல்லை கட்சித் தலைமையின் அசிரத்தையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.வன்முறை, அராஜகம் போன்றவற்றைக் காரணம் காட்டி சென்னை மாநகராட்சித் தேர்தலை அதிமுக புறக்கணித்ததால் யாருக்கு என்ன லாபம் ஏற்பட்டது? தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் இதுபோன்ற அமைப்புகளில் என்ன நடக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வளர்ச்சிக்கு சென்னை மாநகராட்சித் தேர்தல் உதவியது என்றால், அந்தக் கட்சியை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்த இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு உதவும் என்பதில் என்ன சந்தேகம்? தேமுதிகவை அரவணைத்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமைப்பது அல்லவா அதிமுகவின் ராஜதந்திரமாக இருந்திருக்க வேண்டும்?தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாவிட்டால், மதிமுகவுக்கு அவர்கள் வென்ற தொண்டமுத்தூர் மற்றும் கம்பம் தொகுதிகளில் போட்டியிட்டுத் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பையாவது அதிமுக தந்திருக்க வேண்டும். பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று தனது மக்களவைத் தேர்தல் தோல்வியை ஈடுகட்ட பாமக தயாராக இருந்திருக்கும். இளையான்குடியில் கண்ணப்பன் மீண்டும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் சிந்திக்காமல் புறக்கணிக்கிறோம் என்று பின்வாங்கினால், மக்கள் அதிமுகவைப் புறக்கணித்துவிட மாட்டார்களா?தேர்தலில் போட்டியிடாமல் போனால் தொண்டர்களும் சோர்வடைந்து விடுவார்கள், மக்களும் மறந்து விடுவார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு பொறுப்பான எதிர்க்கட்சிக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல! அதிமுக தலைமை தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அந்தக் கட்சிக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது.
கருத்துக்கள்

உண்மைதான். ஆனால், பண வலிமையாலும் பிற தகா முறைகளாலும் வெற்றி மாலை யாருக்கு வலுக்கட்டாயமாகச் சூடப்படும் என்று அறிந்தபின் எதற்கு நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும் என அதிமுக கூட்டணி கருதுகிறது. ஆனால், 1961 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபொழுது இடைத்தேர்தல் பரப்புரையில் ஆளுங்கட்சி ஈடுபட்டதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்டித்ததை நினைவில் இருத்தி அதே வழியில் ஈழத்தில் இந்திய அரசினாலும் தமிழக அரசின் பாராமுகத்தாலும் நடைபெற்ற பேரவலங்களைக் கண்டித்துத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கலாம்.அல்லது திமுக வின் சாதனைகள் மக்களை ஈர்த்திருந்தாலும் கடந்த தேர்தல் முடிவின் பொழுது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது; இதனை அடிப்படையாகக் கொண்டாவது தேர்தலைச் சந்திருக்கலாம். வெற்றி அல்லது பெறப்போகும் கூடுதல் வாக்குகள் ஆளுங்கட்சியின் போக்குகளுக்குத தடை கல்லாக விளங்கும் என்ற நம்பிக்கையிலாவது போட்டியிடலாம். தினமணி வேண்டியவாறு மறுமுடிவு எடுக்கட்டும் எதிர்க்கட்சிகள்!

-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2009 3:53:00 AM

JAYA WILL NEVER EVER ACCEPT ANY VALID SUGGESTIONS OR ADVISE. SHE IS ARROGANT, ADAMENT, NEVER LISTEN TO OTHERS. SO, THERE IS NO POINT IN WASTING TIME IN EXPLAINING HER. SHE WILL FOCUS ONLY ON 2011 ASSEMBLY POLLS SINCE SHE IS VERY MUCH FEED UP WITH BY -ELECTIONS. SHE KNOWS VERY WELL THAT IN ALL 5 CONSTITENCY DMK WILL WIN WITH MORE THAN 25,000 VOTES. AGREED. DMK WILL PROVIDE MONEY, GIFTS, USE MUSCLE POWER, ALL OPTIONS TO WIN THE ELECTION. BUT REMEMBER THAT EVEN JAYA DID THE SAME FOR ALL BY-ELECTIONS FROM 2001 TO 2006. BUT DMK NEVER WITHDRAW FROM ELECTIONS. EVEN THOUGH DMK WAS WELL AWARE THAT DMK WILL LOOSE DURING THAT TIME, DMK FOUGHT ELECTIONS WHICH IS WHAT DEMOCRACY IS ALL ABOUT. ANWAY, JAYA CANNOT ACCEPT ALL THESE SUGGESTIONS SINCE BY BIRTH SHE IS A ARROGRNAT LADY. SHE CANNOT CHANGE HER CHARACTER AND ATTITUDE. HENCE SHE WILL KEEP ON LOOSING ELECTIONS AFTER ELECTIONS. ONLY IF KARUNA DIES, SHE WILL HAVE AN OPPURTUNITY TO GAIN CM POST. SO, JAYA CAN ONLY PRAY AND HOPE HIS WISH COMES TRU

By SATEESH
7/22/2009 3:50:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக