திங்கள், 20 ஜூலை, 2009




கொழும்பு, ஜூலை 19: இலங்கை ராணுவத்துக்கு எதிராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியை அளித்திருக்கிறார்.இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் அழகான தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டே தந்திருக்கிறார் பிரபாகரன்.இவை மட்டும் அன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தன. இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கொண்டு எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.வெள்ளமுள்ளிவாய்க்காலில் 3 பெரிய பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் ஏராளமான ஆவணங்களை விடுதலைப் புலிகள் நிரப்பி மூடி வைத்திருந்தனர். அவற்றையும் மண்ணில் அவர்கள் புதைத்திருந்த ஆயுதங்களையும் இதர தளவாடங்களையும் இலங்கை ராணுவமும் போலீஸýம் இப்போது தோண்டி வெளியே எடுத்துக் கொண்டிருக்கின்றன. பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அவற்றில் அடக்கம்.வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழப்பகுதிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன. ஒரு நிலையான ராணுவத்துக்கு உரிய கட்டுக்கோப்புடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தனியொரு மனிதனாக அவர் நடத்தியிருப்பதை இலங்கை ராணுவமும் போலீஸ் அதிகாரிகளும் இதிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர். அவற்றையும் பூமியிலிருந்து தோண்டி எடுத்தனர் ராணுவத்தினர்.அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அந்த ஆவணங்களில் இருக்கிறது.விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட ஒரு புலியின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்போல் 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' என்று வாய்ப்பேச்சு பேசிக் காலத்தைக் கடததாமல் ஈழ அரசில் முழுமையும் தமிழையே ஆட்சிமொழியாக்கி நீதிமன்ற மொழியாகவும் அறிவியல் துறை மொழியாகவும் படைத்துறை மொழியாகவும் என எலலாத் துறைகளிலும் 'துறைதோறும் துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்த பெருமகனார் ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். உலக நாடுகளிடம் நடுநிலை இன்மையால் பிற நாடுகள் துணையுடன் கடும் போராட்டத்தால் விடுதலை பெற்ற நாடுகள் கூட, தமிழீழ அரசிற்கு எதிராகக் கூட்டுப் போரை நடத்திய போதும்கூட, உலகிலேயே முதன்முறையாகத் தனித்து நின்று வெற்றிப்படையை வழி நடத்தியவர் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். பொறாமையாலும வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும்தான் அவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனரே தவிர வீரத்தால் வீழ்ச்சி அடையவில்லை. உலகிற்கு உண்மை வரைவில் புரியும்! பன்னாட்டு மன்றத்தில் தமிழ் ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்!

வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 4:03:00 AM


தேசிய தலைவர் போராளிகளுக்கு ஆங்கில நூல்களின் அறிவுரைகளை வழங்கியுள்ளார்
பிரசுரித்த திகதி : 19 Jul 2009

தேசிய தலைவர் போராட்டக் காலங்களில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்கள் பற்றிய அறிவை போராளிகளுக்கு ஊட்டியுள்ளார் என சிங்கள நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. போலீஸ் திணைக்கள உயரதிகாரியான அனுரா சேனநாயக்கவை ஆதாரம் காட்டி எழுதப்பட்டுள்ள அச் செய்தியில், கடந்த 6 நாட்களாக வன்னியில் நடாத்தப்பட்ட பாரிய தேடுதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய தலைவரின் மெய்பாதுகாப்பாளர்களில் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த பிளாஸ்டிக் கலனில் கடந்த 30 வருடப்போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாகவும், பிரத்தியேகமாக அவை தலைவருக்காக மொழிபெயர்க்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவற்றை நன்கு கற்றறிந்த தலைவர் அது தொடர்பாக பல முறை போராளிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும், சொல்லப்படுகிறது. போராட்டத் திறன், இலங்கை இராணுவத்திடம் போரிடும் முறை என்பன குறித்து தேசிய தலைவரால் போராளிகளுக்கு விழங்கப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. கடல்வழிப் பயணப் பாதைகள், வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு தொடர்பான அறிக்கைகள் மற்றும் இராணுவ தலைமைப் பீட அதிகாரிகள் தொடர்பான விபரங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தவிர விமான எதிர்ப்பு ஏவுகணை என்று அழைக்கப்படும் ஸ்ரிங்கர் ரக ஏவுகணைகளின் உதிரிப்பாகங்களும் இந்தக் கலனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல அரியவகை ஆங்கில நூல்களும், இராணுவ ஆராட்சிப் புத்தகங்கள் பலவும், மிகத் திறம்பட தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதும், இராணுவ உயரதிகாரிகளின் தனிப்பட்ட விடையங்கள் பல நேர்த்தியாக ஆவணப்படுத்தப்பட்டிருப்பதும், அதிர்ச்சியளிப்பதாக அனுரா சேனநாயக்க தெரிவித்துள்ளதாக அதிர்வின் கொழும்பு நிருபர் அறியத்தருகிறார்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக