திங்கள், 20 ஜூலை, 2009

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்

திருக்கோவிலூர், ஜூலை 19: "தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்' என்று பாரதி கண்ட கனவை நாம் அனைவரும் நனவாக்க வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார்.திருக்கோவிலூரில் கபிலர் விழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இவ் விழாவில் பாராட்டு மன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அரசின் ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் என்.விட்டலுக்கு "நேர்மையின் சிகரம்' விருதையும், அன்பு பாலம் நிறுவனத் தலைவர் பா.கல்யாணசுந்தரத்துக்கு "சேவையின் சிகரம்' விருதையும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியது:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு இணையான ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் ஆணையர் பதவியை வகித்தவர் என்.விட்டல். இந்த மண்ணின் மைந்தரான இவருக்கு வழங்கப்படும் "நேர்மையின் சிகரம்' விருது மற்றும் பாராட்டு திருக்கோவிலூர் மக்களுக்கே வழங்கப்படும் பாராட்டு. இந்த விருதை வழங்க வாய்ப்பளித்த திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்துக்கு மனமார்ந்த நன்றி.தியாகம், தொண்டு என்ற வார்த்தைக்கு தமிழர்கள் அகராதியில் புதிய விளக்கம் பாலம் கல்யாணசுந்தரம். இவரது சேவைக்காக வழங்கப்படும் "சேவையின் சிகரம்' விருது திருக்கோவிலூர் மக்களுக்கே வழங்கப்படும் விருது.இதுபோன்ற இலக்கிய விழாக்கள் பள்ளி, கல்லூரிகள்தோறும் நடத்தப்பட வேண்டும், தமிழ் இலக்கிய அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று நான் முந்தைய விழாக்களில் பேசி வந்தேன். திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இது போன்ற விழாக்கள் ஊர்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்களை நடத்தி முத்தமிழை வளர்ப்பதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறையிடம் தமிழ் சீர்குலையாமல் சென்றடையும்.தினமணி முன்னாள் ஆசிரியர்கள் ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக விழாவுக்கு வந்துள்ளனர். அந்தப் பாரம்பரியம் தற்போது என் காலத்திலும் தொடர்வது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது."தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்' என்று பாரதி கண்ட கனவை நனவாக்க வேண்டும். இதற்கு திருக்கோவிலூர் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்துவதுபோல் பல்வேறு இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் என்.விட்டல் பேசும்போது, "இந்த விருது எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் பதவியில் இருந்தபோது என்னிடம் பலர் ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்டனர். அவர்களிடம் நான் முடியும் என்று கூறினேன். ஊழலை ஒழிக்க ஒரே வழி வெளிப்படையான நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும்' என்றார்.பா.கல்யாணசுந்தரம் பேசும்போது, "ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது, அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைகள் அதிகம் கிடைக்கும். அதில் ஒரு சதவீதத்தை அவர்கள் சேவைக்காகச் செலவிட்டால் கல்வியில் தன்னிறைவு அடைய முடியும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு சேவைகள் செய்ய வேண்டும்' என்றார்.சென்னை டாக்டர் சாமிநாதன் தனது பாராட்டுரையில் "இந்த விருதுகள் மிகச் சரியானவர்களுக்கு, மிகச் சரியான முறையில் வழங்கப்படுகிறது. தினமணி ஆசிரியர் பங்கேற்று விருதுகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.விருது பெற்ற என்.விட்டல் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக இருந்தவர். இந்திய நிர்வாகத் துறையிலும், தொழில் துறை மேலாண்மையிலும் 42 ஆண்டுகள் பணி புரிந்தவர். இவரது நேர்மைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.பா.கல்யாணசுந்தரம் தனது 14 வயதில் சேமிப்பு தொகையைக் கொண்டு கல்வி மேம்பாட்டுக்கான சங்கம் அமைத்தார். தனது ஊதியம், ஓய்வூதியப் பயன் ஆகியவற்றையும் கல்வி மேம்பாட்டுக்கு நன்கொடையாக வழங்கியவர். அன்பு பாலம் என்ற பத்திரிக்கை நடத்தி வருகிறார்.இந் நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கவிஞர்கள் சி.உதயன், பாலகிருஷ்ணன், மூர்த்தி, நடராஜன், அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவுக்கு முன் சேலம் காயத்ரி வெங்கடேசன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்

நாளைய தலைமுறையினரிடம் தமிழ் சீர்குலையாமல் சென்றடைய வேண்டும் என்னும் நல்ல கருத்தைத் தினமணி ஆசிரியர் தெரிவித்துள்ளமை அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். அவர் பேசியவாறு பாரதிகனவை நனவாக்கத் தெருவெல்லாம் தமிழ் முழங்கச் செய்ய அரசியல்வாதிகளும் பிற ஊடகத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் படித்தவர்கள் உண்மையிலேயே தமிழ் மீது ஈடுபாடு காட்டி ஊர்கள் தோறும் தமிழ விழாக்கள் நடைபெற வழிகாட்ட வேண்டும். திருக்கோவிலூர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்திற்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 2:53:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக