கட்டுரைகள்
புத்தளத்திற்கு வடக்கே பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் முன்பே கண்டோம். மதுரையில் சங்கம் நடத்தியபோது பூதன் தேவனார் ஈழத்திலிருந்து வந்ததையும், பாடல்கள் பாடியதையும் சங்கப் பாடல்கள் அகநானூறு (88,231,307), குறுந்தொகை (189,343,360), நற்றிணை (365) தெளிவுபடுத்துகின்றன. வேதாரணியம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் யாழ்ப்பாணத்தை அடுத்த தென்கணரவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், "பசுக்கறி' கேட்ட போர்த்துக்கீசியருக்கு போக்குக் காட்டி, சிதம்பரம் வந்து சேர்ந்ததுடன் அங்கு திருக்குளம் வெட்டி திருப்பணி செய்தவர் ஞானப்பிரகாசர் என்றும், முப்பதுக்குமேற்பட்ட அரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்து சென்னை மற்றும் சிதம்பரத்தில் அச்சகம், பாடசாலை நடத்தி அச்சொத்துக்களை இங்கேயே விட்டுச் சென்றவர் ஆறுமுகநாவலர் என்றும், சென்னைப் பல்கலையின் முதல் பட்டதாரிகளானவர்கள் கரோல் விசுவநாதப் பிள்ளையும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் என்றும், சென்னை மாகாணத்தில் பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடித்த அரிய நூல்களைப் பதிப்பித்ததுடன், உ.வே. சாமிநாதய்யருடன் சேர்ந்து செயல்பட்டவர் ஈழத்தின் சிறுப்பிட்டியைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும், தாகூரின், மகாத்மா காந்தியின், தனிச் செயலாளராக இருந்து, அடிப்படைக் கல்வி முறையை செயல்படுத்திய டாக்டர் அரியநாயகம், ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த சிவகுருநாதன், தஞ்சையில் பிறந்து, வாழ்ந்து யாழ்ப்பாணம் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை காங்கேயன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், மூனப்புதூரில் பிறந்து மலையக் தமிழர்களின் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனவர் தொண்டமான் என்றும், இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர் சுவாமி விபுலானந்தர் என்ற காரணத்தால், அவரையே முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் செய்து அண்ணாமலை அரசர் கவுரவித்தார் என்றும், 1927-இல் சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில்-எழும்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் யாழ்ப்பாணத்துக் கலைப்புலவர் நவரத்தினத்தின் மாமியார் மங்களம்மாள் (மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் பெரிய அம்மா) என்றும், தமிழறிஞர் தண்டபாணி தேசிகரின் குரு யாழ்ப்பாணம் மட்டுவில் க.வேற்பிள்ளை என்றும், யாழ்ப்பாணப் புறநகர் பாஷையூரில் பிறந்து, வளர்ந்து தமிழகத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியானவர் ஏ.சி.சி. அந்தோணிப்பிள்ளை என்றும், தமிழகத்தின் புகழ்பெற்ற தவில் கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் வசித்தது யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலடி என்றும், யாழ்ப்பாணத்திற்குத் தாய்த் தமிழகத்திடம் இருந்த தொடர்புக்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் கூறமுடியும். வரலாற்று ரீதியாக, வழிபாட்டு ரீதியாக உரிமைகளும், பண்பாட்டுப் பாரம்பரிய முறைகளும், பழமைகளும், உறவுகளும் பின்னிப் பிணைந்த வரலாறு, ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான வரலாறு. அதேபோன்று, தமிழர் இசைமரபில் இலங்கைத் தமிழருடைய இசை மரபு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இலங்கை நாதஸ்வர தவில் இசை மரபு வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் தவில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், நாதஸ்வர சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் இலங்கையில் வாசித்து புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்கள் ஆவார்கள். அதுபோன்று, இலங்கையிலும் நாதஸ்வரத்தில் அளவெட்டி பத்மநாபன், தவில் வாசிப்பதில் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் சின்னராஜா, தட்டாரத்தெரு கருப்பையா போன்றோர்கள் முக்கியமானவர்கள். அளவெட்டி பத்மநாபன் தமிழகத்தில் பந்தநல்லூர் நாதஸ்வரக் கலைஞர் தெட்சிணாமூர்த்தியை குருவாக ஏற்று அவர் வழியில் வாசித்து இலங்கையில் பெருமை பெற்றார். யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி, வாசித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவருடன் இணைந்து தவில் வாசித்தவர்களுள் வளையப்பட்டி சுப்பிரமணியன், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு, நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி, பருத்தியப்பர் கோயில் செüந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் வருவாய் குன்றியதால் ஈழம் சென்று தங்கியிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, வருவாய் ஈட்டிப் பெரும் செல்வரானபின் அதே காரணத்தால் அங்கு வந்த கே.பி.சுந்தராம்பாளை அங்கு வைத்தே திருமணம் செய்து பின் இருவரும் தமிழகம் திரும்பினர், கும்பகோணம் தங்கவேல் பிள்ளையை, யாழ்ப்பாணத்தில் கோயில் விழாவிற்கு காரில் அழைத்து வரும்போது அவரைப் பார்ப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் மொய்த்துவிடும் என்று நினைவு கூர்கின்றனர், தற்போது வாழ்ந்து வரும் இசை மேதைகள். திருமெய்ஞானம் நடராஜசுந்தரம், திருவெண்காடு சுப்பிரமணியம், திருவிடைமருதூர் பி.கே.மகாலிங்கம், ராமலிங்கம், வேதாரண்யம் வேதமூர்த்தி, வல்லம் கிருஷ்ணன் போன்ற தமிழக இசை மேதைகள் இலங்கையில் வாசித்து பெருமை பெற்ற மாமேதைகள் ஆவார்கள். தவில் மேதைகளான திருமுல்லை வாசல் முத்துவீர சாமி, திருநகரி நடேசன், வடபாதிமங்கலம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருச்சேறை முத்துகுமாரசாமி, சுவாமிமலை கோவிந்தராஜ் ஆகியோருக்கு ரசிகர் கூட்டம் அங்கு நிறைய உண்டு. இலங்கை வானொலி இம்மேதைகள் வாசிப்பதை பயன்படுத்தி கொண்டு தனது அலைவரிசைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒளிப்பரப்புவார்கள். தமிழக சினிமா பாடல்களில் உள்ள ராகங்கள், கீர்த்தனைகள், அதன் வடிவ அழகு, பாடலாசிரியர்கள் முதலியவற்றோடு ஒழுங்குபடுத்தி ரசிகர்களுக்கு வழங்கும் முறை இலங்கை தமிழ் வானொலியிடமிருந்து நம்மிடம் வந்த ஒன்றாகும். (கலைவிமர்சகர் தேனுகாவிடம் நேர்காணல்) இவ்வாறு உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்ட தொப்புள்கொடி உறவுகளின் துன்பத்துக்கு தாய்த் தமிழகம் அளித்த பங்கு என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக