திங்கள், 20 ஜூலை, 2009

"தமிழை வழக்கு மொழியாக்குவது எளிதல்ல': அமைச்சர் வீரப்ப மொய்லி



சென்னை, ஜூலை 19: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கொண்டு வருவது எளிதான காரியமல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:"நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையை மாற்ற 125 நாட்களில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போபாலில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மத்திய அரசின் செயல் திட்டமாக அறிவிக்கப்படும்.நீதிபதிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்ய தனிச் சட்டம்: நீதிபதிகள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது. நீதிபதிகள் மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும். சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் நீதிபதிகளின் ஆலோசனைப்படி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்.உயர் நீதிமன்றத்தில் தமிழ்... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னிடம் வலியுறுத்தியுள்ளார்.இதே போன்று நாட்டின் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியை வழக்கு மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மாநில மொழிகளை வழக்கு மொழியாக்குவது என்பது எளிதான காரியமல்ல. இது குறித்து நீதித்துறையும், மத்திய அரசும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்.ஓரினச் சேர்க்கை... ஓரினச் சேர்க்கை குறித்து தில்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்துபேசி அவர்களிடம் அறிக்கை பெறப்படும். இந்தியாவின் கலாசாரம் மற்றும் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.ஆட்சியில் பங்கு... தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் இடையிலான உறவு சுமுகமாக உள்ளது. ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டங்களாகப் பேசி வருகின்றனர். இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர்தான் என்றார் வீரப்ப மொய்லி.காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

மாநில மொழிகளெல்லாம் தேசிய மொழிகளே. அனைத்தும் அந்தந்த மாநிலங்களின் நீதிமன்ற மொழியாக ஆவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மொழிகளின் நிலை அதற்கேற்றவாறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்கு எல்லாத் தகுதியும் உள்ளது. தமிழும் சட்டமும் அறிந்தவர்கள்தாம் இயலாமை இருப்பின் அதனை நீக்க வழிவகை காண வேண்டுமே தவிர பிற மொழியாளர்கள் - அவர்கள் எத்தகைய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் - கருத்து கூறுவதற்குத் தகுதியானவர்கள் அல்லர். வங்காள மொழியும் இந்தி மொழியும் நீதி மன்ற மொழிகளாக ஆக்கப்பட்டிருக்கையில் அவற்றிற்கும் பிற மொழிகள் அனைத்திற்கும் தாயாய் விளங்கும் தமிழில் முடியாது என்னும் பொருள் தொனிக்கப் பேசுவது சரியல்ல. விரைவில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழில் வாதாடக்கூடிய நிலை வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 3:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக