தி.மு.க.வின் முகவை மாநாட்டின் கட்சித் தலைவர் மு.கருணாநிதி ஆற்றிய எழுச்சி உரை இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான பதிவு என்று சொல்ல வேண்டும். ""1950-ஆம் ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டிப்பதற்காகத் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்கள். அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை சற்றேறக் குறைய இருபத்து ஐந்து ஆண்டு காலமாக இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மொழி உரிமைக்காக, தங்களுடைய இன உரிமைக்காக, தங்களுடைய பாதுகாப்பிற்காகப் போராடி, போராடி வேறு வழியில்லாமல் 1975 அல்லது 76-ஆம் ஆண்டுகளில் தங்களைக் காத்துக்கொள்ள தமிழர்களைக் காத்துக்கொள்ள, இனத்தைக் காத்துக்கொள்ள, இனி வேறு வழி கிடையாது - நாமும் ஆயுதத்தைதத் தாங்கித்தான் தீரவேண்டும் என்று படைக்கலம் ஏந்துகின்ற பட்டாளத்துப் பெருமகனாக மாறினான். 1975 வரையில் பொறுத்துப் பார்த்தான். சகித்துக் கொண்டான். தாய்மார்கள் கற்பழிக்கப்பட்டதை, அவனுடைய சகோதரிகள் நடுவீதியில் வைத்து மானபங்கப் படுத்தப்பட்டதை அவன் சகித்துக் கொண்டே வந்தான். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்ற காரணத்தால் அந்தப் பொறுமை எல்லை தாண்டுகிற அளவுக்குப் பொல்லாத செயல்கள் இலங்கையில் சிங்கள வெறியர்களால் நடத்தப்பட்ட காரணத்தால் ஆயுதம் தாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது'' என்று இன்றைய விடுதலைப் போராளிகளின் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கான காரணத்தைப் படம் பிடித்துக் காட்டினார் கருணாநிதி. அனைத்துக் கட்சிகளும் மாநில அரசும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு ஆகஸ்ட் 2-இல் நடைபெற்றது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. தண்ணீர் கொண்டு வரும் லாரிகள், ஆம்புலன்ஸ் வண்டிகள், காவல் துறை, பத்திரிகைத் துறை வாகனங்கள் தவிர வேறு வாகனங்களைச் சாலையில் பார்க்க முடியவில்லை. சென்னை விமான நிலையமும் மூடப்பட்டது. துறைமுகத்திலும் வேலையில்லை. மாணவர்கள் ஆங்காங்கே ஜெயவர்த்தனவின் அடக்குமுறையை எதிர்த்துக் கொடும்பாவி கொளுத்திக் கண்டன ஊர்வலங்களையும் நடத்தினர். ரயில் நிறுத்தப் போராட்டத்தைத் தி.மு.கழகம் அறிவித்ததும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று மத்திய அரசு அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இலங்கைக் கொடுமையைக் கண்டித்து கூட்டம் ஒன்று நடத்தினர். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கலந்துகொண்டார். அவர் தனது பேச்சில் "ஜெனோசைட்' என்று அழைக்கப்படும் இனப்படுகொலை இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக வழக்கறிஞர் சமுதாயம் பாடுபட வேண்டும். அறைகூவல் விடுத்தார். இந்தக் காட்டுமிராண்டிச் சம்பவங்களுக்கு எதிராக உலக அரங்கின் கருத்தைத் திரட்ட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ்ச்சகோதர, சகோதரிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உலகம் தழுவிய சட்டபூர்வமான கிளர்ச்சியைத் துவக்கி மக்களின் உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது என்றாலும் "இப்பிரச்னையை' மனித உரிமைகள் என்ற கோணத்தில் நோக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற வன்முறை வெடிப்பு, ஒருபிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களைத் தாக்கிய நிகழ்ச்சி அல்ல. அங்கே அரசே ராணுவத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. அல்லது அந்த ராணுவம் தமிழர் என்று சொல்லப்படுவோரைக் கொன்று குவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இது எஉசஞஇஐஈஉ என்று சொல்லப்படுகிற ஓர் இனப்படுகொலையே ஆகும். ஆகையால், இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களையும், தமிழ் வம்சாவளியினரையும் காப்பாற்ற வேண்டிய கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அரசு எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போது, ""தலையிடக் கூடாது'' என்ற வாதத்தில் அர்த்தமில்லை'' என்றார் கிருஷ்ணய்யர். தி.மு.கழக செயற்குழு மீண்டும் ஆகஸ்ட் 7-இல் கூடியது. ஆங்கிலப் படிவத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை இரண்டு கோடிக் கையொப்பங்கள் முகவரியுடன் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்புவது என்று தீர்மானம் போட்டது. அது போலவே ஆகஸ்ட் 4-இல் இயற்றிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் சட்டத்தை நகல் எடுத்து பட்டிதொட்டியெங்கும் எரிப்பது என்றும் தீர்மானித்தார்கள். காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் ஆறாயிரம் பேருடன், படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழருக்கு உதவிட மதுரையிலிருந்து ராமேசுவரம் வரை நடை பயணமாகச் சென்று கடலில் கட்டுமரத்தில் ஏறி இலங்கை செல்லும் தியாகப் பயணம் மேற்கொண்டார். அவர் தமிழக அரசால் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். மத்திய - மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்னையில் போதிய கவனம் எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து மு.கருணாநிதியும், க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை 10.8.83 அன்று துறந்தனர். ஜி.பார்த்தசாரதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தூதராக இலங்கை செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழகத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு 26.8.83 அன்று இலங்கைக்குச் சென்றார். 1984 ஏப்ரல் 9-இல் சர்வகட்சித் தலைவர்களுடன் இணைந்து கண்டனப் பேரணி நடத்திய பிறகு, அமெரிக்க நாட்டின் கைப்பாவையாக உள்ள இஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை மேலும் வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ப.மாணிக்கம், வி.பி.சிந்தன், காஜாமொய்தீன், இராம.அரங்கண்ணல், தி.சு. கிள்ளிவளவன், இரா.குலசேகரன், கோ.கலிவரதன், வேணுகோபால், அன்பு வேதாசலம், தெள்ளூர் தர்மராசன், ஜெய்லானி, எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி, அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர் மாநாடு ஒன்று நியூயார்க், நான்வெட் நகரில் கூட்டப்பட்டது. மாநாட்டில் தலைமை ஏற்று காமராஜ் காங்கிரஸ் தலைவர் ப.நெடுமாறன் உரையாற்றினார். அந்த உரையில், ""ஈழ மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிரான கண்டனக் குரலை உலகம் முழுமையுள்ள பல்வேறு நாடுகளின் அரசுகளை, இலங்கை அரசின் இனவெறி ஆட்சியைக் கண்டிக்கும்படியான கவனத்தைத் திருப்பவேண்டும். புது தில்லியில் நடக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் சுதந்திர நாடுகள் மட்டுமன்றி, விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், தென் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இயக்கம், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், அகில ஆப்பிரிக்கக் காங்கிரஸ், மியோடிரிக்கா நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி, இஸ்லாமிய மாநாடு போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அதே போன்று தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். திருகோணமலையில் எந்த அந்நிய நாட்டின் ராணுவ தளமும் அமைய விடக்கூடாது. அது இந்தியாவிற்குப் பேராபத்தை உருவாக்கும்'' என்றார். ""தமிழர்களை அருகில் இருந்து காக்க ஐ.நா. மன்றத்தின் சார்பில் அமைதிகாக்கும் படை அனுப்ப வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் பிளவுபட்டுக் கிடப்பது தமிழர்களின் சாபக்கேடாகும். பொது எதிரியான ஜப்பானியர்களையும், ஜெர்மானியர்களையும் எதிர்க்கப் பரமவைரியான மா-சே-துங்கும் ஷியாங்கே சேக்கும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். நாஜிகளை ஒழிக்க ஸ்டாலினும், ரூஸ்வெல்ட்டும் ஒன்று சேர்ந்தார்கள். அப்படி இருக்கும்போது ஏன் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான தமிழ் இளைஞர்கள் ஒன்று படக் கூடாது'' என்று அதே மாநாட்டில் கேள்வி எழுப்பினார் வை.கோபால்சாமி எம்.பி. இந்த மாநாட்டில் கி. வீரமணி, செஞ்சி இராமச்சந்திரன், மலேஷியா திராவிடர் கழகச் செயலாளர் கே.ஆர்.இராமசாமி, இரா.செழியன், டாக்டர் ஜெய்னுதீன், செ.யோகேஸ்வரன், கரிகாலன், ஈழவேந்தன், வைகுந்தவாசன் (லண்டன்), மணவைத்தம்பி முதலியோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை டாக்டர் வின்சென்ட் பஞ்சாட்சரம், வழக்கறிஞர் முதலானோர் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக