ஞாயிறு, 19 ஜூலை, 2009

ஞாயிறு கொண்டாட்டம்
மலை அரசிக்கு மகுடம் சூட்டியவர்!



இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் சலிவன் நீலகிரியில் பல அற்புதங்களை உருவாக்கிவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். ஆனால், அவரது இறப்புக்கு பின்னர் அவரது கல்லறை எங்குள்ளது என்ற விபரம் வெளியுலகுக்கு இத்தனை நாள் தெரியாமலே இருந்தது. இதைக் கண்டறியும் முயற்சியில் நீலகிரி ஆவண காப்பகம் கடந்த 15 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது.கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் இக்கல்லறை லண்டன் "ஹீத்ரு' விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தொலைவிலுள்ள "அப்டன்' என்ற பகுதியில் புனித லாரன்ஸ் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தேவாலயத்தில் அவரைக் கெüரவிக்கும் வகையில் "கெம்ப் விண்டோ' என்ற சாளரமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கல்லறையைக் கண்டுபிடிப்பதற்கு காரணகர்த்தா நீலகிரி ஆவண காப்பகத்தின் தலைவரான உதகையைச் சேர்ந்த தர்மலிங்கம் வேணுகோபால் (57) ஆவார். இவர் கோவையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொருளாதார நிபுணராக உள்ளார். லண்டனிலுள்ள பல்வேறு சரித்திர ஆராய்ச்சிக் குழுக்களின் உதவியுடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது இங்கிலாந்தில் பெரும்பாலான சரித்திர நிகழ்வுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் இந்த முயற்சியில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளார்.இது குறித்து தர்மலிங்கம் வேணுகோபாலிடம் பேசியபோது, சிலிவன் குறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.""ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நீலகிரியும் செயல்பட்டுவந்தபோது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலிவன் 1819ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு குதிரையில் வந்தார். அவர் வரும் வழியில் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு என்ற பகுதியை மே மாதத்தில் வந்தடைந்தார். அங்குதான் தங்குவதற்காக ஒரு மாளிகையைக் கட்டினார். அந்த மாளிகையை அப்போது கட்டுவதற்கு அவருக்கு ஆன செலவு வெறும் ரூ.20 மட்டுமே. இப்படி பல ஆச்சர்யங்கள் இருக்கின்றன.அதன்பின்னர் 1821ம் ஆண்டில் உதகைக்கு வந்து சேர்ந்தார். உதகையில் ஸ்டோன் ஹவுஸ் என்ற கல் பங்களாவை முதன் முதலில் கட்டினார். தொடர்ந்து உதகையில் 1828ம் ஆண்டில் ஆங்கில ராணுவத்தின் படைப்பிரிவு மையம் தொடங்கப்பட்டது. இதனால், உதகை கன்டோன்மென்ட் பகுதியாக மாறியது. இதன் தலைவராக மேஜர் கெல்சோ இருந்தார். ஆனால், உதகை நகரம் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் 1840- ல் ராணுவ மையம் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது.உதகையிலிருந்து ராணுவ மையம் மாற்றப்பட்டு விட்டதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து காய்கறி வரத்து குறைந்து போனது. இங்குள்ளவர்களின் காய்கறி தேவைகளைச் சமாளிப்பதற்காக சலிவன் உருவாக்கிய காய்கறித் தோட்டம்தான் இன்றைய அரசினர் தாவரவியல் பூங்கா. அந்தக் காலத்தில் உதகை ஏரி சேரிங் கிராஸ் வரை பரவியிருந்ததால் முதல் நகராட்சி சந்தை காந்தல் பகுதியில் உருவாக்கப்பட்டது.தொடர்ந்து நீலகிரியின் வளர்ச்சிக்காகவும், அதை சுற்றியுள்ள கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும் ஜான் சலிவன் பல அற்புத திட்டங்களைத் தீட்டினார். பல்வேறு நீர்மின் திட்டங்களும் தொடங்கப்பட்டதால் கோவை பகுதி தொழில் நகராக மாறியது.உதகை ஏரியிலிருந்து ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் ஜான் சலிவன் உருவாக்கினார். ஆனால், அதற்கு ரூ.2,200 செலவாகுமெனவும், இது அதிகப்படியான தொகை எனவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கனவின் விளைவே 1950- ல் கட்டப்பட்ட இன்றைய பவானிசாகர் அணையாகும்.நீலகிரியின் மேம்பாட்டுக்காக அற்புதமான திட்டங்களை உருவாக்கிய ஜான் சலிவன் லண்டனில் 15.6.1788- ல் உயரிய குடும்பத்தில் பிறந்தவராவார். இவரது தந்தை ஸ்டீபன் ஜான் சலிவன் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் தஞ்சை நீதிமன்றத்தில் பெர்ஷியன் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். இதனால், தனது 15- வது வயதிலேயே ஜான் 1804- ல் சலிவனும் கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். தொடர்ந்து 1807- ல் ரகசிய காப்பு, வெளி விவகாரம் மற்றும் அரசியல் துறைக்கு உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றவுடன் மைசூர் சமஸ்தானத்தின் தலைமைக்குத் துணையாளராகவும் பணியாற்றினார்.தொடர்ந்து 1815- ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியரானார். பின்னர் 1821- ல் கோவை மாகாணத்தின் முதன்மை ஆட்சியராகவும், 1835- ல் வருவாய் கோட்டத்தின் மூத்த உறுப்பினராகவும், 1839- ல் அப்போதைய கவர்னரின் அமைச்சகத்தில் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றினார். நீலகிரியை கண்டறிந்த ஜான் சலிவன் இப்பகுதியை இங்கிலாந்திலுள்ள தொழில் நகரான யார்க்ஷையர் பகுதியைப்போல மாற்ற முயற்சிகளை மேற்கொண்டார்.1820- ல் தனது 32- வது வயதில் ஹென்றியாட்டா என்பவரை ஜான் சலிவன் மணந்தார். இவர்களுக்கு 9 குழந்தைகள் பிறந்தன. சலிவனின் மனைவி ஹென்றியாட்டா தனது 35- வது வயதில் காலமானார். இதற்கிடையே சலிவனின் இரு குழந்தைகளும் உதகையில் இறந்தனர். இதனால் மனமுடைந்த ஜான் சலிவன் நீலகிரியின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு தனது 7 குழந்தைகளுடன் 1841- ல் லண்டன் திரும்பினார். அங்கு 1855- ம் ஆண்டில் இறந்தார்.ஜான் சலிவனின் தந்தை ஸ்டீபன் சலிவன் தஞ்சையில் பணியாற்றி வந்தபோது அவரது தந்தையும், கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றியவருமான லாரன்ஸ் சலிவனின் உதவியுடன் முற்போக்கு சிந்தனையுடன் ஆங்கில வழிக்கல்வி பயில பல பள்ளிகளை நிறுவினார். அப்போது அவரது உதவியாளராக இருந்த வள்ளல் பச்சையப்பாவும் அவரது கொள்கைகளையே பின்பற்றினார். ஜான் சலிவனின் மகனான ஹென்றி எட்வர்டு சலிவனும் 1869- ல் கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவராவார்'' என்றார் தர்மலிங்கம் வேணுகோபால். இவ்வளவு பெருமைகளைக் கொண்ட ஜான் சலிவனின் கல்லறை தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக நீலகிரி ஆவண காப்பகத் தலைவர் தர்மலிங்கம் வேணுகோபால் பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் லண்டன் செல்கிறார். நீலகிரியைக் கண்டறிந்த ஜான் சலிவனுக்கு நீலகிரி மாவட்ட மக்களின் சார்பில் அஞ்சலி செலுத்தும் முதல் நபர் வேணுகோபாலேயாவார். இதையொட்டி அப்டன் நகரில் இம்மாதம் 14- ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்தது.இன்று நீலகிரியிலுள்ள பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் மக்களுக்கு அதை ஏற்படுத்தி தந்த ஜான் சலிவனின் கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த வாய்ப்பில்லாவிட்டாலும், தர்மலிங்கம் வேணுகோபாலின் மூலம் நீலகிரி மக்களின் நன்றிகள் அந்த கல்லறையை என்றென்றும் சூழ்ந்து கொண்டிருக்கும் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக