திங்கள், 20 ஜூலை, 2009

சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை பாதுகாக்க கோரி சென்னையில் ஜூலை 24 இல் ஆர்ப்பாட்டம்
[திங்கட்கிழமை, ௨௦ யூலை ௨௦௦௯, ௦௫:௨௯ மு.ப ஈழம்] [வி.நவராஜன்]
சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் சிக்கி தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.07.09) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் நேற்று ஆலேசானைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் தலைமை உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் கடந்த ஆறு மாத காலத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் தவறிவிட்டன. தற்போது, மூன்று லட்சம் தமிழர்கள் மின்வேலி கொண்டு அமைக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உணவு, மருந்து, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அதில், நாளாந்தம் 200 பேர் பரிதாபமாக செத்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் தமிழ்நாட்டு கிராம மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழர் பிரச்சினை உலகத் தமிழர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், நகரங்களை விட கிராம மக்களிடையே தாக்கம் குறைவாகத்தான் காணப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியினர் நகர பகுதிகளில் எல்லாம் தோல்வியை கண்டனர். இதற்கு ஈழத் தமிழர் பிரச்சினைதான் காரணம்.

இலங்கை தமிழர் பிரச்சினையை கிராம மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், அதற்கான குறுந்தகடுகள் சென்றடைய வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும். ராஜபக்சவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

- இலங்கையில் மின்வேலி முகாம்களில் மாட்டியுள்ள மூன்று லட்சம் தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இம்மாதம் 24 ஆம் நாள் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

- ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்தி, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடுவது.

- 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை, இலங்கை தமிழர் பிரச்சினையில் முழமையான அரசியல் தீர்வு கண்டபிறகே திருப்பி அனுப்ப வேண்டும்.

- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்வதை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக