புதன், 22 ஜூலை, 2009

கதிரொளி மறைப்பு -சூரிய கிரகணம்

ஜூலை 22,2009,00:00 IST





விண்வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் எப்போதுமே, நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அது கிரகணமாக இருந்தாலும் சரி, வால் நட்சத்திரமாக இருந்தாலும் சரி. கடந்த இரு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி, முந்தைய கால நம்பிக்கைகளுக்கு மாறான, பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பாக, கடவுளாலோ அல்லது தீயசக்திகளாலோதான் இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று நம்பப்பட்டது.



சீனாதான் முதன்முறையாக சூரிய கிரகணத்தைப் பற்றி அறிந்து கொண்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு., 2,134ம் ஆண்டில் வாழ்ந்த அந்நாட்டின் சக்கரவர்த்தி, கிரகணத்தை முன்னரே கணிக்காத அரசவை ஜோதிடர்கள்

இருவரின் தலைகளை வெட்டி கொன்றார். இதையடுத்து அந்நாட்டு மக்கள் கிரகணத்தைப் பற்றி புதிதாக தெரிந்து கொண்டனர். பாபிலோனில் (ஈராக்) வசித்தவர்கள்தான், முதன் முதலாக கிரகணம் எப்போதெல்லாம் வரும் என்பதை கணித்தவர்கள். முதன்முறையாக "எக்ளியாப்சிஸ்' என்று கிரேக்கர்கள்தான் கிரகணத்துக்கு பெயரிட்டனர். இதுவே ஆங்கிலத்தில் பின்னர் "எக்ளிப்ஸ்' என்று அழைக்கப்பட்டது.



டிராகன் விலங்கு, சூரியனை விழுங்கும் நிகழ்ச்சிதான் சூரிய கிரகணம் என்று சீன மக்கள் நம்பினர். கிரகணத்தின் போது பெருத்த சத்தத்தை எழுப்புவார்கள். அதன் மூலம் அது சூரியனை விடுவித்துவிடும் என்று கருதினர். இந்தியாவில், இந்து புராணங்களின் படி, ராகுவும் கேதுவும் சூரியனை விழுங்குவதாக கருதினர். அந்நேரத்தை தோஷ நேரமாக கருதினர். சாப்பிடுவதில் துவங்கி எந்த ஒரு சுப காரியங்களையும் செய்வதை தவிர்த்தார்கள். புனித நதிகளில் நீராடி தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டனர். பைபிளிலும், சூரிய கிரகணத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. "அந்த நாளில்... நண்பகலில் நான் சூரியனை போகச் சொல்வேன். பகல் பொழுதில் இரவை வரவழைப்பேன்' என்கிறது வாசகங்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாள் கி.மு., 763 ஜூன் 15 என்று கூறப்படுகிறது.



கி.மு. 585 மே 28ம் தேதி, மத்திய கிழக்கு நாடுகளில், முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகள் போர் புரிந்து கொண்டிருந்தன. பகல் பொழுதில் திடீரென இருள் சூழ்ந்ததால், பயந்து போன இரு தரப்பு படையினரும் போரை நிறுத்திவிட்டனர். சூரிய கிரகணத்தால் 5 ஆண்டு நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது. தாலஸ் எனும் தத்துவஞானி, போர் நடந்த நாளன்று தோன்றிய இந்த கிரகணத்தை முன் கூட்டியே கணித்ததாக சொல்லப்படுகிறது. இதுதான் முதலில் கணிக்கப்பட்ட கிரகணம். கிரகண சமயத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் சில இயற்கை சீற்றங்கள் கிரகணத்துடன் காலப் போக்கில் தொடர்பு படுத்தப்பட்டன. ஆகவே கிரகணம் வந்தால் இவையெல்லாம் வரும் என்ற நம்பிக்கை வழிவழியாக தொடர்ந்தது.



கிரகண நேரத்தில், பகலில் திடீரென இருள் சூழ்வதால், பறவைகள் தங்கள் கூட்டுக்கு திரும்ப முயற்சி செய்கின்றன. அப்போது அவை ஏற்படுத்தும் சத்தம், விலங்குகளிடம் ஏற்பட்ட மிரட்சி ஆகியன, மக்களிடையே அறிமுகமில்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தின. இதுவே, கிரகணத்தை ஒரு கெட்ட விஷயமாக கருதும் பழக்கம் ஏற்பட காரணமாக அமைந்தது. விழிப்புணர்வு அதிகமில்லாத அந்த காலத்தில், மக்கள் நடந்து கொண்டதற்கும், இன்று தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் காலத்தில் மக்கள் நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காலத்தில், கிரகண நாளில் சீன மக்கள் பயந்து கத்தினர், தெருக்களில் அலறி அடித்து ஓடினர். இன்று, ஒவ்வொரு நகரத்திலும், கிரகணத்தன்று சிறப்பு அறிவியல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றனர்.



கிரகணம் ஏற்பட்டால் கெட்ட செய்தி வரும் என்று அந்த காலத்தில் சீனர்கள் நம்பினர். இன்று கிரகணம் செல்லும் பாதையில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளை மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியுள்ளனர். அந்த காலத்தில், கிரகணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உள்ள வழி, மறைவான இடங்களில் பதுங்குவதும், வீட்டுக்குள்ளேயே இருப்பதும் என்று மக்கள் நினைத்தனர். கண்களை கெடுத்துக் கொள்ளாமல், (சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுக்கும்) கண்ணாடிகளை அணிந்து கிரகணத்தை பார்ப்பதுதான் பாதுகாப்பு என்று மக்கள் புரிந்து கொண்டனர்.



கிரகண நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய மூடப்பழக்க வழக்கங்களை போக்கியதில் இந்தியாவைவிட சீனாதான் இன்று முன்னணியில் உள்ளது. இந்தியாவில் விமானத்தின் மூலம் சென்று கிரகணத்தை கண்டு களிக்கும் வழக்கமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழமை மாறாமல், புனித ஆறுகளில் நீராடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. விண்வெளியில், பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின், அறிவியல் உண்மைகளால் புரிந்து கொண்டால், பழங்கால நம்பிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களும் அறியாமையின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம். நம் வாழும் காலத்தில் நடக்கும் இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகளை, முழுமையாக ரசிக்க வேண்டும். பழமையை மூடை கட்டி வைத்துவிட்டு, குழந்தைகளுக்கும் மாணவர்

களுக்கும், நம் சூரிய குடும்பத்தைப் பற்றி விளக்குவதற்கு இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும்.



இன்றைய "ஸ்பெஷல்': சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் இன்று காலையில் (6.21 மணி) ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரிய கிரகணம் ஏற்படும் நிகழ்ச்சி நடக்கிறது. சந்திரனின் வட்டு சூரியனை முழுமையாக மறைக்கும் நிலையை முழு சூரிய கிரகணம் என்கிறோம். சில இடங்களில் ஏற்படும் கோண வித்தியாசங்களால், சூரியன் முழுமையாக மறையாது. அங்கு சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்படும் அந்நிலையை பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.



கிரகணத்தை பார்க்கலாமா?: கிரகணத்தை நேரடியாக பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும். சூரியனை நாம் வெறும் கண்களால் எப்படி பார்க்கக் கூடாதோ அதே போல், கிரகணத்தன்றும், வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது. கிரகணத்தை பார்க்க வேண்டுமானால் அதற்கென உள்ள புறஊதா கதிர்களை தடுக்கும் கண்ணாடியை பொருத்திப் பார்க்க வேண்டும். போட்டோ பிலிம், புகையில் காட்டப்பட்ட கண்ணாடி உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கக்கூடாது. இவற்றுக்கு கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் சக்தி இல்லை.



எந்த நேரத்தில் தெரியும்: காலை 5.28க்கு அரபிக்கடலில் கிரணம் ஆரம்பம். காலை 10.42க்கு பசிபிக் கடலில் முடிகிறது. இந்தியாவில் காலை 6.21க்கு குஜராத்தில் கிரகணம் துவங்கி, 7.41க்கு அருணாச்சலில் முடிகிறது. 205 கி.மீ, அகல நிலப்பரப்பில் உள்ளவர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை ரசிக்க முடியும். இந்தியாவின் மத்தியில் செல்லும் கிரகணம், நேபாளம், மே.வங்கம், சிக்கிம், பூடான் வழியாக, அசாம், அருணாச்சல் வழியாக சென்று, மியான்மர் வழியாக சீனாவை அடைகிறது. பின் பசிபிக் கடலில் மறைகிறது.



பீகாருக்கு திடீர் புகழ்: பீகாரில் உள்ள தரேகானா எனும் இடம்தான் இந்த ஆண்டு கிரகணத்தைப் பார்க்க சிறந்த இடம் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து இந்த ஊருக்கு திடீர் புகழ் வந்துவிட்டது. இந்த ஊர் பாட்னாவிலிருந்து 35 கி.மீ., தொலைவிலுள்ளது. இங்குதான் இந்தியாவிலேயே அதிக நேரம் (மூன்று நிமிடங்கள் 38 வினாடிகள்) சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்திருக்கும் முழு சூரிய கிரகணம் தெரியும் என்பதால் சுற்றுலா பயணிகள், உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள், போட்டோகிராபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குவித்துள்ளனர். இந்தியாவின் கணித மேதை ஆர்யபட்டர் இங்குதான் வானியல் ஆய்வு மையத்தை நிறுவினார். அங்கு சூரியனார் கோயிலும் உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு கிரகணத்தைப் பார்ப்பதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சூரிய கிரகணத்தின் போது இங்கு செல்கிறார்.



அதிர்ஷ்ட மாணவர்கள்: சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து 10 மாணவர்கள் சீனா செல்ல தேர்வாகி உள்ளனர். சீனாவின் அன்கிங் எனும் இடம்தான் இந்த சூரிய கிரகணத்தின் போது சீனாவிலேயே நீண்ட நேரம் (6 நிமிடங்கள் 44 வினாடிகள்) கிரகணம் தெரியக்கூடிய இடம். ஆகவே மாணவர்கள் 8 நாள் பயணமாக இங்கு செல்வார்கள். இந்த மாணவர்கள் அனைவரும் 6-8ம் வகுப்புவரை படிக்கிறார்கள்.



123 ஆண்டுக்கு பின்...: ஒவ்வொரு முழு சூரிய கிரகணத்தின் போதும், உலகின் ஏதாவது ஓர் இடத்தில், கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும். அவ்வகையில், 1991 ஜூலை 11ம் தேதி நடந்த முழு சூரிய கிரகணம் பசிபிக் கடலில் 6 நிமிடம் 53 வினாடிகள் நீடித்தது. இக்கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. அதற்குப்பின் இன்றைய கிரகணமும் பசிபிக் கடலில் 6 நிமிடங்கள் 38 வினாடிகள் நீடிக்கும். இதற்குப் பின் 123 ஆண்டுக்குப் பின்னர்தான் 6 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் முழு சூரிய கிரகணம் தோன்றும். ஆகவே இதுதான் இந்நூற்றாண்டின் கடைசி நீண்ட நேர கிரகணம்.



அடுத்த முழு சூரிய கிரகணம்
2010 ஜூலை 11 - நியூசிலாந்து, பசிபிக் கடல், தென் அமெரிக்கா
2012 நவ.13 - தெற்கு பசிபிக் மற்றும் தென் அமெரிக்கா
2015 மார்ச் 20 - ஸ்காட்லாந்து, பிரிட்டிஷ் அய்ல்ஸ்
2016 மார்ச் 9 - இந்திய பெருங்கடல், பசிபிக் வட அமெரிக்கா
2017 ஆக.21 - அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல்.
2019 ஜூலை 2 - பசிபிக் கடல், சிலி, அர்ஜென்டினா
2020 டிச.14 - அட்லாண்டிக், சிலி, அர்ஜென்டினா



கிரகணங்கள் பலவிதம்: சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன விண்வெளியில் இருக்கும் கோணம், இடம் ஆகியவற்றைப் பொறுத்து கிரகண நிலைகள் மாறுகின்றன. இம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்து, சந்திரன் சூரியனை முழுமையாக, சில நிமிடங்களோ அல்லது சில வினாடிகளோ மறைப்பதை முழு சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். சில நேரங்களில், சூரியனை முழுமையாக மறைக்காமல் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து சென்றால், அது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.



சந்திரனால் சூரியனை மறைத்த போதிலும் கூட, சந்திரனின் வட்டுப் பகுதி சூரியனை முற்றிலுமாக மறைக்காமல் போய்விடுகிறது. இதனால் சந்திரனின் விளிம்பு பகுதியில் ஓர் வளையம் தோன்றும். இதுதான் வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. கிரகண நிகழ்ச்சியில் இது ஓர் அரிதான நிகழ்ச்சி. சூரியனை விட்டு சந்திரன் விலகும் போது, சூரியனின் ஒளி ஒரு புறத்திலிருந்து பீறிட்டு வெளியேறும். இது பார்க்க வைரமோதிரம் போன்று காட்சி அளிக்கும். இதை வைரமோதிர நிகழ்ச்சி என்று அழைக்கிறார்கள்.



தமிழகத்தில் அடுத்த கிரகணம்: 2010 ஜனவரி 15ல் இந்தியாவின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் "வளைய' சூரிய கிரகணம் தெரியும். முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனை

முழுமையாக மறைக்கும். வளைய சூரிய கிரகண நிகழ்ச்சியின் போது, சந்திரன் விளிம்பை சுற்றி வளையம் தோன்றும். 2019 டிச. 26ம் தேதியன்று மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரியும்.


அமாவாசை கிரகணம்: சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் அமாவாசை தினத்தில்தான் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. ஆனால் எல்லா அமாவாசையிலும் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை. அதற்கு காரணம், நிலவு 5 டிகிரி சாய்வான ஒரு சுற்றுவட்டப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. ஆகவே பெரும்பாலான அமாவாசை தினங்களில் சந்திரனின் நிழல் பூமியை நெருங்குவதில்லை. இதனாலேயே கிரகணம் ஏற்படுவதில்லை. இதே காரணத்தால்தான் எல்லா சூரிய கிரகணங்களும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.



பகலில் இரவு: முழு சூரிய கிரகணத்தின் போது, சில நிமிடங்கள் பகல் இரவு போல் மாறும். அதாவது பகலில் சூரியனை கரும் மேகங்கள் மறைத்தால் எப்படி உணர்வீர்களோ அதுபோல்தான் மத்திய இந்திய பகுதிகளில் உள்ளவர்கள் உணர்வார்கள். கிரகண நேரத்தில் மேகங் கள் வந்தால், மேகங்களால் சூரியன் மறைந்ததா... அல்லது சந்திரன் மறைத்ததா என்ற சந்தேகம் எழும். ஆகவே தெளிவான வானிலை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த 1999ம் ஆண்டு ஆக. 11ம் தேதி நடந்த முழு சூரிய கிரகணத்துக்குப் பின், இந்தியாவில் தற்போதுதான் முழு சூரிய கிரகணம் நடக்கிறது.



-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக