செவ்வாய், 21 ஜூலை, 2009

ஆங்கிலத்தில் அமைச்சர் பதில்: மாநிலங்களவையில் அமளி



புது தில்லி, ஜூலை 20: மாநிலங்களவையில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் பதில் அளித்ததால் பெரும் அமளி ஏற்பட்டது. ஹிந்தி மொழியை அவர் அவமதிப்பதாகக் கூறி பாஜக மற்றும் சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தனர். திங்கள்கிழமை மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, தனது துறை சம்பந்தமான துணைக் கேள்விக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் பதில் கூறினார். உடனே பாஜக உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா, அமைச்சருக்கு ஹிந்தி நன்றாக தெரிந்திருந்தும் ஆங்கிலத்தில் பதில் அளிப்பது ஏன் என்று கேட்டார். ""உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா, உங்களுக்கு முலாயம் சிங் யாதவிடமிருந்து இந்த வியாதி தொற்றிக் கொண்டு விட்டது என்று தோன்றுகிறது,'' என்று ஹிந்தியிலேயே பதில் கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் ஆத்திரமடைந்த பாஜக மற்றும் சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் ஹிந்தி மொழியை அமைச்சர் வியாதி என்று குறிப்பிடுகிறார். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளது என்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். ஆனால் இந்த பதிலால் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. உடனே தேவையற்ற பிரச்னையைக் கிளப்பி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என்று உறுப்பினர்களை அன்சாரி கேட்டுக் கொண்டார். அத்துடன் மூலக் கேள்வி ஆங்கிலத்திலேயே கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அமைச்சர் ஆங்கிலத்தில் பதில் அளித்ததில் தவறில்லை என்றார். ஆனால் இந்த பதிலைக் கேட்ட பின்னரும், உறுப்பினர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். ஹிந்தி மொழி குறித்து அமைச்சர் கூறிய அனைத்து வாசகங்களும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமைச்சருக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால் ஆங்கிலத்தில் பதில் அளிப்பதை ஏற்க முடியும் என பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா கூறினார். அவைக்கு தேவையற்ற இடையூறாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அன்சாரி, அவையின் முந்தைய ஆவணங்களைப் பார்த்து, ஹிந்தி மொழியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தால் அது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று உறுதிபடக் கூறினார். இதையடுத்து கேள்விநேரம் தொடர்ந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கரண் சிங்கின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஹிந்தியிலேயே பதில் அளித்தார். அத்துடன் ஹிந்தி மொழியை அவமதிக்கும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் மக்களவையில் இதே பிரச்னையை முலாயம் சிங் யாதவ் எழுப்பினார் என்றும் குறிப்பிட்டார். கேள்வி நேரம் முடிந்தவுடன், தேவையற்ற விவாதத்தால் அவையின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது, இது தேவைதானா? என்பதை உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவைத் தலைவர் அன்சாரி கூறினார்.
கருத்துக்கள்

இந்தி வெறியர்கள், இந்தியாவை உருப்பட விடமாட்டார்கள் போலும்! இந்தி தெரியாதவர்கள் பெரும்பான்மையராக இருக்கும்பொழுது - மொழி பெயர்ப்புவசதியும் இருக்கும் பொழுது - ஆங்கிலத்தில் விடையிறுத்தது சரிதான். தேவையற்று மொழிச் சிக்கலைக் கிளப்பினால் 'ஏக இந்தி என்று எம்மொழியை மாய்ப்பின் சாக இந்தி என்று சாற்றிடுவோம்' என ஒவ்வொரு மொழியினரும் புறப்படுவர். அது நம் நாட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இப்போக்கை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2009 3:43:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக