ஞாயிறு, 19 ஜூலை, 2009

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்: ராஜபட்சவிடம் மன்மோகன் உறுதி



கொழும்பு, ஜூலை 18: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சவிடம் உறுதியளித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவரிடம் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.எகிப்தில் அண்மையில் நடைபெற்ற அணி சாரா இயக்க உச்ச மாநாட்டில் கலந்து கொண்டபோது மன்மோகன் சிங்கும், ராஜபட்சவும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.இது குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை முறியடிக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை புரிந்து கொண்டு செயல்பட்டதற்காக ராஜபட்ச, மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை செய்து வந்த உதவிகளுக்கும், இனி மேல் செய்யவுள்ள உதவிகளுக்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்பது குறித்தும் தனது மகிழ்ச்சியை ராஜபட்ச தெரிவித்துக் கொண்டார்.அப்போது ராஜபட்சவின் திறமையின் மூலம் தான் இலங்கையின் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக மன்மோகன் சிங் பாராட்டுத் தெரிவித்தார். போர் முடிந்த பின் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் திறமையாக சமாளித்து முழு அமைதி ஏற்பட்டு அனைவரும் ஒற்றமையுடன் வாழ நடவடிக்கை எடுங்கள் என்றும் மன்மோகன் சிங் அவரிடம் கூறினார்.இன்னும் 6 மாதங்களுக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று புதுவாழ்வைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ராஜபட்ச கூறினார்.மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையைத் தீர்ப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்பிரச்னையைத் தீர்க்க மனிதாபிமானரீதியில் செயல்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

எரிகுண்டுகளுடனும் கொத்துக் குண்டுகளுடனும் கொன்றது போதாது என்று உயிருடனும் புதைத்த கூட்டாளிகள் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதில வியப்பில்லை. 'வினை விதைத்தவர் வினை அறுப்பார்' 'தெய்வம் நின்று கொல்லும்' என்பனவற்றையும் மறுப்பதற்கில்லை. காலம் விரைவில் மாறும்! ஈழம் அப்பொழுது உயிர்த்தெழும்! இன்று மக்களைக் கொன்று வாழ்வோர் அன்று வீழ்வர்! மனித நேயம் வெல்லும்! தமிழ் ஈழம் அதனைச சொல்லும்! பேரினப் படுகொலை உடந்தையாளர்களை அவர்களின் மனமே கொல்லும்! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2009 4:12:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக