ம.தி.மு.க. நடைப்பயணத்தில் குடி விரும்பிகளுக்குத் தடை
ம.தி.மு.க.,வில் "சரக்கு பார்ட்டி'களுக்கு "தடா!'
"மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற, கோரிக்கையை வலியுறுத்தி,
அடுத்த மாதம், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் நடைபெறவுள்ள, நடை
பயணத்தில், மது, சிகரெட், பீடி பழக்கம் இல்லாதவர்களை கண்டுபிடித்து,
பங்கேற்க வைக்க, அக்கட்சியில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு,
மாவட்ட வாரியாகச் சென்று, இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணியிலிருந்து,
1,800 பேரை தேர்வு செய்கின்றனர். வரும் நவம்பர் மாதம், 12ம் தேதி,
திருநெல்வேலி மாவட்டம், உவரி என்ற ஊரிலிருந்து, ம.தி.மு.க., பொதுச் செயலர்
வைகோ தலைமையில், இந்த நடை பயணம் துவங்குகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி,
தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அடங்கிய கிராமங்கள்
வழியாக நடை பயணம், 25ம் தேதி, மதுரையில் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, 13
நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தில், தினமும், 30 கி.மீ., நடக்கத்
திட்டமிட்டுள்ளனர். மது ஒழிப்பு பிரசாரத்தை வலியுறுத்தி, நடை பயணம்
மேற்கொள்ளப்படுவதால், அதில் பங்கேற்கும் கட்சியினர், குடித்து விடக் கூடாது
என்பதால், மது வாசனை தெரியாதவர்கள், பீடி, சிகரெட் பிடிக்காமல்
இருப்பவர்கள் மட்டும் நடை பயணத்தில் பங்கேற்க வேண்டும் என, வைகோ
உத்தரவிட்டுள்ளார். துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, மாவட்டச் செயலர்
ஜீவன், செந்தில் அதிபன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் இதற்காக
நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வரும், 11ம் தேதி முதல், அடுத்த
மாதம், 11ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.
இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணியைச் சேர்ந்த இளைஞர்களை வரவழைத்து
தேர்வு செய்கின்றனர். மூன்று அணியிலிருந்தும் தலா, 600 பேர் என, மொத்தமாக,
1,800 பேரை மட்டும் வைகோ நேரடியாக தேர்வு செய்கிறார். தொண்டரணிக்கு
கறுப்புச் சட்டை, கறுப்பு பேன்ட், இளைஞர் அணிக்கு வெள்ளை சட்டை, கறுப்பு
பேன்ட், மாணவர் அணிக்கு நீலச்சட்டை, கறுப்பு பேன்ட் சீருடைகளும்
வழங்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தினமலர் செ ய்தியாளர்-
- தினமலர் செ ய்தியாளர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக