சனி, 13 அக்டோபர், 2012

வளம் தரும் மாடுகளுக்கு நலம் தரும் இளைஞர்


மாட்டு க் கொட்டகையில் பேன், கொசுவலை: மாடுகளை ப் பேணும்  முதுவணிகவியல்  பட்டதாரி

திருச்சி: எம்.பி.ஏ., படிக்கும் மாணவர், மாடுகளை கொசுக்கடிக்காமல் இருக்க கொட்டகையில் மின்விசிறி, கொசுவலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி, மாடுகளை பராமரித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா மருதூரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன், 52. விவசாயியான இவர், ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ரொசாரிஆனந்த், 23, அஜய்பிரகாஷ், 19 என்ற இரு மகன்கள் உள்ளனர். ரொசாரிஆனந்த், சிறுகனூர் எம்.ஏ.எம்., கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ., படிக்கிறார். அஜய்பிரகாஷ், எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் பி.இ., படிக்கிறார். இருவரும் படிப்பு நேரம் போக மாடுகளை பராமரிப்பது, வயல் வேலைகளை பார்ப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். மாடுகள் மீது மிகுந்த பிரியும் கொண்ட ரொசாரி ஆனந்த், மாடுகளை கொசுக்கடிக்காமல் இருக்க கொட்டகையில் மின்விசிறி, கொசுவலை அமைத்து பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து ரொசாரி ஆனந்த் கூறியதாவது: என் குடும்பத்தார் விவசாயம் செய்து வருவதால், எனக்கும் விவசாயம், மாடு வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உள்ளது. என் தாத்தா காலத்தில், 30 மாடுகள் இருந்தது. சொத்து பிரித்ததில் மாடுகள் அனைத்தும் பெரியப்பாவுக்கு சென்றது. அதன்பின்னும் நாங்கள் சொந்தமாக மாடு வாங்கி வளர்க்கிறோம். தற்போது எங்களிடம் ஐந்து ஜெர்ஸி மாடுகள் உள்ளது. எதிர்காலத்தில், 20 மாடுகள் வாங்கி, கொட்டகை அமைத்து பராமரிக்க உள்ளேன். எந்த அளவுக்கு நாம் பணம் சம்பாதிக்க நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த தொழில் மீதும், பொருள் மீதும் அக்கறையுடன் இருக்க வேண்டும். மாடுகள் நமக்கு பால், தொழுஉரம் போன்றவற்றை தருகிறது. அவற்றை நாம் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை பால் கறக்கும்போது, ஏராளமான கொசுக்கள் என்னை கடித்தன. "30 நிமிடம் கூட நம்மால் உட்கார முடியவில்லை. இந்த மாடுகள் தினமும் இந்த கொசுக்கடியில் தான் இருக்கின்றன' என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதன் பிறகு தான் கொட்டகையை சுற்றி கட்டுவதுக்கு, 1,500 ரூபாய் செலவில் கொசுவலை தயாரித்தேன். மேலும், பூச்சிகள் அண்டாமல் இருக்க மின்விசிறி பொருத்தினேன். இவை அனைத்தும் ஒருமாத பால் காசு தான். மாட்டுக்காக நாம் எதுவும் செலவிடவில்லை. அது தரும் பாலிலிருந்து வாங்கிவை தான் இவை. தற்போது, மாடுகளை பெரிய அளவில் கிருமிகள், பூச்சிகள் தாக்குவதில்லை. மாடு மட்டுமல்ல எதிர்காலத்தில் எம்.பி.ஏ., முடித்துவிட்டு, விவசாயத்தில் தான் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். உயரிய தொழில்நுட்பத்தை செலுத்தினால், விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கிராமப்புறத்தில் இருந்து நகரத்துக்கு வரும் பெரும்பாலன இளைஞர்கள், மாணவர்கள், நகர வாழ்வுடன் லயிக்கும் நிலையில், விவசாயத்தை தாங்கி பிடிக்க வேண்டும் இதுபோன்ற இளைஞர், மாணவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக