ஞாயிறு, 7 அக்டோபர், 2012

"இதுவும் வன்கொடுமையே!'

சொல்கிறார்கள்

"இதுவும் வன்கொடுமையே!'
மன நல மருத்துவர் அபிலாஷா: படிப்பறிவு இல்லாத பெண்கள், சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படும் பெண்கள், சிறு வயதில், பாலியல் சார்ந்த அதிர்ச்சி சம்பவங்களைச் சந்தித்த பெண்கள், தோழிகளாலோ அல்லது பிறராலோ, உடலுறவு பற்றிய தவறான புரிதலும், தேவையில்லாத பயமும் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் என, இவர்களுக்கு எல்லாம், தாம்பத்யம் குறித்த அச்சம் ஏற்படலாம். திருமணத்திற்குப் பின், கணவருடன், "உடன்பட' மறுக்கவோ, வெறுக்கவோ செய்வர்.பொதுவாக, உறவு விஷயத்தில் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தப்படும் பெண்களின் மனநிலை, மிகவும் பாதிப்பிற்குள்ளாகும். கட்டாய தாம்பத்யம், அதிர்ச்சி, அளவுக்கு அதிகமான பயம், ஒரு வித இறுக்கம், மன அழுத்தம் போன்ற தாக்கங்களுக்கு, பெண்களை ஆளாக்கும். கணவரைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை அதிகப்படுத்தும்.சுற்றத்தினரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ள முடியாத போது, உணர்ச்சிப் பூர்வமான வலி அவர்களை விழுங்கும். சுய கவுரவம், தன்மானம் குறையும்; சுய பச்சாதாபம் அதிகமாகும். ஒரு கட்டத்தில், தற்கொலை எண்ணம் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவனை பிரிந்து விடும் முடிவிற்கும் வந்து விடுவர். தாம்பத்யம் பற்றிய புரிதல் இருந்தால், இவற்றை தவிர்க்கலாம்.தாம்பத்யம் என்பது அச்சம் தருவது அல்ல; அதுவும் ஒரு அன்புப் பகிரல் தான் என்பதை, திருமண வயதில் உள்ள பெண்களுக்கு, பக்குவமாய்ப் புரிய வைக்க வேண்டும். அது பயனளிக்காத போது, நெருக்கமான தோழிகளோ, குடும்ப உறுப்பினர்களோ, தேவைப்பட்டால், குடும்ப நல ஆலோசகர்கள் மூலமோ பேசி, பெண்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.தாம்பத்யம் என்பது, ஆண்களின் உரிமையோ, அதிகாரமோ இல்லை. அது ஆணும், பெண்ணும் அன்பினால் அடைய வேண்டியது. பெண்ணின் மன நிலை, உடல் நிலை என, அவர்களுக்கான சூழல்கள் குறித்து, ஆண் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பமில்லாத சூழலில், ஆத்திரப்படாமல், பெண்களின் முடிவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். மாறாக, அடிமைப்படுத்தி அவளை அடைந்தால், அது தாம்பத்யம் இல்லை, பாலியல் குடும்ப வன்கொடுமை.

"ஏற்றுமதியாளர்கள்கவனிக்க!'திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலை, வங்கதேசத்திற்கு இடமாற்றம் செய்து, வெற்றிக் காண வழிக்காட்டும் தொழிலதிபர் ராம்குமார்: கோல்கட்டாவிலிருந்து அரை மணி நேர விமானப் பயணம். விசா கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. தமிழகத்தை விட, பரப்பளவில் சற்றே அதிகமான, வங்கதேசத்தின் மக்கள் தொகை, 14 கோடி. அதனால், அங்கு தொழிலாளர் தட்டுப்பாடு இல்லை.மின்சார இடையூறு அங்கு இருந்தாலும், அதைச் சமாளிக்க, இயற்கை வாயு வசதி இருப்பதால், ஜெனரேட்டர்கள் மூலம், 24 மணி நேரமும் வேலை தடையின்றி நடக்கிறது. அந்த நாடு முழுக்க, எங்கு திரும்பினாலும், ஆயிரக்கணக்கான நவீன பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.நூலைக் கொடுத்தால், ரெடிமேட் ஆடைகள், அடுத்த, 24 மணி நேரத்தில், "பேக்' செய்து, பெட்டிகளாக வெளியே வரும் அளவிற்கு, அங்கு தொழிற்சாலைகள், பிரமாண்டமாக இயங்குகின்றன. அங்குள்ள சிட்டகாங் துறைமுகம் மூலம், கப்பலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வசதி, சுலபமாக உள்ளது.பொருளாதார ரீதியில், வங்கதேசம் பின்தங்கிய நாடு என்பதால், அங்கிருந்து ஏற்றுமதி செய்தால், ஐரோப்பிய நாடுகள், 12 சதவீதம் வரி விலக்கு வழங்குகின்றன.ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், அங்கு போய், சொந்தமாக தொழிற்சாலை துவங்குவதில், அதிக சிரமங்கள் உள்ளன. வங்கதேச அரசால் நமக்கு வழங்கப்படும், லைசென்சை வைத்து, வெளிநாடுகளில் எடுத்த, "ஆர்டர்'களை, டாக்கா உட்பட பல நகரங்களிலுள்ள சில தொழிற்சாலைகளில் கொடுத்து, ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யலாம்.ஏற்கனவே, டாக்கா உள்ளிட்ட பெரிய நகரங்களில், லட்சக் கணக்கான, தொழிலாளர்கள் இருப்பதால், இங்குள்ள பனியன் தொழிலாளர்களுக்கு, அங்கு வேலை வாய்ப்பிற்கு இடமில்லை. ஏற்றுமதியாளர்கள் மட்டும் அங்கு "ஆர்டர்'கள் கொடுத்து, தங்களுக்கென சில தரக் கட்டுப்பாட்டுக் குழுக்களை அமைத்து, வேலைகளை சுலபமாகச் செய்து, ஏற்றுமதியை சிறப்பாகச் செய்யலாம். இவரது, இ-மெயில் முகவரி: raamconnect@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக