ஞாயிறு, 7 அக்டோபர், 2012

அலைபேசி க் கட்டணத்திற்கு மத்திய அரசு நல்கை

சிற்றூர்  மக்களுக்கு ஒரு நற்செய்தி : அலைபேசிக் கட்டணத்திற்கு மத்திய அரசு நல்கை

புதுடில்லி:தொலைதொடர்பு வசதியற்ற குக்கிராமத்திலும், அலைபேசி பயன்பாட்டை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதன்படி, முதற்கட்டமாக, புதிய அலைபேசி இணைப்பு பெறும் குக்கிராம மக்களுக்கு, ஒரு முறை மானியமாக, 250 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும், 300 ரூபாய் வரையிலான அலைபேசி கட்டணத்தில், 20 சதவீத தொகையை மத்திய அரசு வழங்க உள்ளது.
சேமிப்பு:இதன் மூலம், ஒருவருக்கு, அலைபேசி கட்டணத்தில், பிரதி மாதம், அதிகபட்சமாக, 60 ரூபாய் மிச்சமாகும். முதலில், மொத்த கட்டணத்தை செலுத்தி விட்டு, மானியத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகளை, மத்திய தொலைதொடர்பு துறை துவக்கியுள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் நாட்டில், குக்கிராமங்களிலும் அலைபேசி பயன்பாடு பரவலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைபேசி பயன்பாட்டிற்கான மானியம், பரவலான சேவை உதவி நிதியம் (யு.எஸ்.ஓ) என்ற தனி அமைப்பில் இருந்து வழங்கப்பட உள்ளது.நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில், தொலைதொடர்பு வசதியை விரிவுபடுத்தும் நோக் கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நிதியத்திடம், தற்போது 21,840 கோடி ரூபாய் உள்ளது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனங்கள், ஓராண்டின் மொத்த வருவாயில், ஐந்து சதவீதத்தை, இந்த நிதியத்திற்கு வழங்கி வருகின்றன.புதிய அலைபேசி இணைப்புக்கும், பயன்பாட்டிற்கும் மானியம் வழங்குவதன் மூலம், கிராமபுற மக்கள் மட்டுமின்றி, மத்திய அரசும், அலைபேசி சேவை நிறுவனங்களும் பயன் பெற உள்ளன.
வரி வருவாய்:உதாரணமாக, அலைபேசி சேவையை 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால், மத்திய அரசுக்கு, வரிகள் மற்றும் இதர தீர்வைகள் வாயிலாக, 30 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில், ஒரு பகுதி தான், கிராமப்புற அலைபேசி பயன்பாட்டிற்கான மானியமாக திரும்ப வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், மானிய உதவி திட்டம் மூலம் குக்கிராமங்களிலும், தொலைதொடர்பு வசதி பரவும், கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி பெறும், வேலை வாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக விரிவாக்கம்:அலைபேசி சேவை நிறுவனங்களை பொறுத்தவரை, அவற்றின் வர்த்தகம் விரிவடையும். இதன் மூலம் வருவாய் பெருகும்.இந்நிலையில், தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், யு.எஸ்.ஓ., நிதியத்திற்காக வசூலிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது படிப்படியாக குறைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஏற்கனவே, குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு செய்து, கிராமப்புறங்களில் அலைபேசி சேவையை அளித்து வருவதாக, இந்நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
கிராமப்புறங்களில் தொலைதொடர்பு சேவையை விரிவுபடுத்துவதற்கான, யு.எஸ்.ஓ., நிதியத்தின் பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தொலைதொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும், கிராமப்புற மக்கள் தொகை அடிப்படையிலான, தொலைதொடர்பு சேவையின் பயன்பாடு, ஓரளவிற்கு உயர்ந் து உள்ளது. தற்போது, 100 பேர் கொண்ட ஒரு கிராமத்தில், தொலைதொடர்பு சேவையை பெற்றவர்களின் எண்ணிக்கை, 40 என்ற அளவிற்கே உள்ளது.
நகர்புறம்:அதே சமயம், நகர்புறங்களில், தொலைதொடர்பு வசதி கொண்ட வர்களின் எண்ணிக்கை, 100க்கு, 157 என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது.
நாட்டின் ஒட்டு மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 91.30 கோடியாக உள்ளது. இதில், கிராமப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 33.40 கோடி என்ற அளவிற்கே உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக