ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதே- யோக இந்திரன்

மகிழ்ச்சியில்  பெரிய மகிழ்ச்சி  பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதே
-  யோக இந்திரன்

அது சென்னையில் உள்ள புகழ்பெற்ற மிகப் பெரிய "தீம்' பார்க். பெரியவர்கள் சிறுவர்களாகவும், சிறுவர்கள் குழந்தைகளாகவும் மாறி மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி அலை வீசுகிறது, யாரிடம் பார்த்தாலும் ஆனந்தம் கொப்புளிக்கிறது.
இந்த சூழ்நிலையில் சில வாகனங்கள் வரிசையாக வந்து நிற்கின்றன. அதில் இருந்து இறங்கிய குழந்தைகள் பெரும்பாலோனார் உடல் ஊனமுற்றவர்கள், வாகனங்களில் இருந்து இறங்கவும், இறங்கியபின் தரையில் ஊர்ந்தபடி "தீம்' பார்க் உள்ளே வரவும் அவர்கள் சிரமப்பட்டாலும், வாழ்க்கையில் ஒரு புதிய உலகத்தை பார்க்கப்போகும் ஆனந்தம் அனைவரது கண்களிலும் தாண்டவமாடியது.

ஒவ்வொரு உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாவலர் என்ற முறையில் உள்ளே வந்தவர்கள் அதன் பிறகு அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தண்ணீர் தொடர்பான விளையாட்டில் தங்களை மறந்தனர், "ரோலர் கோஸ்டர்' போன்ற விளையாட்டின்போது பதிவான அதிக பட்ச ஆராவார சத்தம் இவர்களுடையதே, இப்படி "தீம்'பார்க்கின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆனந்தத்தால் அளந்தார்கள், சுருக்கமாக சொல்வதானால் வாழ்க்கையில் இதுவரை இல்லாத குதூகலத்தில் காணப்பட்டனர்.

இவர்களை இந்த அளவு சந்தோஷப்படுத்திப் பார்ப்பது யார் என்ற கேள்விக்கு விடையாக கிடைத்தவர்தான் யோக இந்திரன். மலேசியாவாழ் தமிழரான யோக இந்திரன் தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் சென்னையில் உள்ள ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவதை கடந்த 15 வருடங்களாக வழக்கமாக கொண்டுள்ளார். இவரது இந்த நற்பணிக்கு இங்குள்ள இவரது நண்பர்கள் அண்ணாமலை மற்றும் தீபக் உதவி செய்கின்றனர்.

தீம் பார்க் நுழைவு கட்டணம், உள்ளே விளையாடுவதற்கான கட்டணம், மற்றும் உணவு செலவு என்று ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் செலவாகும். இதன் காரணமாக நடுத்தர மக்களே உள்ளே வர தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளைப் பொறுத்தவரை இது ஒரு கனவு உலகம்தான். இதை நனவு உலகமாக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். பொதுவாக சந்தோஷம் என்பது பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான், எனது பிறந்த நாள் சந்தோஷம் என்பது இந்த குழந்தைகளை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தான் அடங்கியிருக்கிறது என்று சொன்ன யோக இந்திரன் தானும் ஒரு குழந்தையாகி இவர்களுடன் விளையாடியதும், இவர்களை இவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே அழைத்துவந்து திரும்ப கொண்டுபோய் வாகனங்களில் விட்டதும், இருப்பதிலேயே சிறந்த உணவை வழங்கியதும், வீட்டிற்கு செல்லும்போது பரிசுப்பொருள் கொடுத்தனுப்பியதையும் பார்க்கும்போது யோக இந்திரன் கொஞ்சம் விசேஷ மனிதராகவே தெரிந்தார்.

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்று. பிறந்த நாளில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கவே யாவரும் விரும்புபவர், இனி வரும் பிறந்த நாளின்போது நாம் மட்டும் சந்தோஷம் அடையாமல் நமது பொருளாதாரத்தை பொறுத்து மற்றவர்களை அதிலும் இல்லாதவர்களை, இயலாதவர்களை, எளியவர்களை, ஏழைகளை, ஆதரவில்லாத குழந்தைகளை, அனைத்திற்கும் மேலாக உடல் ஊனமுற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை யோக இந்திரன் விதைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக