இது தான் மாணவர்களுக்கான சத்துணவு..: கூழ் போல் அரை வேக்கா ட்டு ச் சோறு, கேசரிப்பூ நிறத்தில் குழம்பு
கும்மிடிப்பூண்டி:பசை போல் அரைவேக்காடு சாதம், கேசரிப்பூ நிறத்தில் சாம்பார் ஆகியவை தான், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்றில், மாணவ, மாணவியருக்கு சத்துணவாக வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறிய கிராமம் சாலை. அங்குள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒன்று முதல், ஐந்து வகுப்பில், எளாவூர், சாலை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த, 49 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.மதியம், 12:45 மணிக்கு வழங்கபட வேண்டிய சத்துணவு அப்பள்ளியில்,
15 நிமிடங்கள் முதல், 30 நிமிடங்கள் வரை தாமதமாக வழங்கப்படுகிறது. பசியில், தட்டுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு அந்த பள்ளியின் மாணவ, மாணவியர் தள்ளப்பட்டு உள்ளனர்.
"பசி ருசி அறியாது' என்பதால் பசியுடன் காத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்படும் பசை போல் அரைவேக்காடு சாதம், கேசரிப்பூ நிறத்தில் சாம்பார் ஆகியவை சத்துணவாக வழங்கப்படுகிறது.ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. வாரத்தில், ஒரு நாள் தர வேண்டிய சுண்டல், பச்சை பயிர், உருளைக்கிழங்கு மாதத்தில் ஒரு நாள் மட்டுமே தரப்படுகிறது.
இப்படிப்பட்ட சத்துணவு குறித்து, பல முறை கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், "அது அப்படிதான் இருக்கும்' என, அலட்சியமாக பதிலளிப்பதாக குழந்தைகளின் பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணனிடம் கேட்டபோது, ""உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக