புதன், 10 அக்டோபர், 2012

சட்டமன்ற வைர விழா நினைவு வளைவு: முதல்வர்

சென்னையில் சட்டமன்ற வைர விழா நினைவு வளைவு: முதல்வர் உத்தரவு

First Published : 09 October 2012 06:27 PM IST
சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே தமிழக சட்டமன்றத்தின் வைரவிழாவை ஒட்டி நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952 ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2012 ஆம் ஆண்டு 60 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா வெகு விமரிசையாக விரைவில் நடைபெறவுள்ளது.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நிகழ்ச்சியினை என்றென்றும் மக்கள் நினைவு கொள்ளும் வகையில்,  சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவினை அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.  சரித்திரப் புகழ் மற்றும் பாரம்பரியம் வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையின் பொலிவிற்கு பொருந்துமாறு கம்பீரமான தோற்றத்துடன் இந்த வளைவு வடிவமைக்கப்படும்.
புதிதாக கட்டப்படவிருக்கும் இந்த நினைவு வளைவு, 80 அடி அகலமும், 41 அடி உயரமும் கொண்டதாக இருப்பதுடன், பெருமை வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு பொருத்தமாகவும், பாரம்பரியம் மற்றும் நவீன கட்டடக்கலை நுட்பத்திறனை உள்ளடக்கியும் கட்டப்படும்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக