வெள்ளி, 12 அக்டோபர், 2012

பெண்ணையாற்றில் 50 அடி ஆழம் மணல் சுரண்டல்: sand theft in govt. quarry

பெண்ணையாற்றில் 50 அடி ஆழம் மணல் சுரண்டல் : அரசு  கல் சுரங்கத்தில்  அட்டூழியம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த, கள்ளிப்பட்டு பெண்ணையாற்றில், விதிமுறைகளை மீறி, 50 அடி ஆழம் வரை, மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, கள்ளிப்பட்டு ஊராட்சி எல்லை பெண்ணையாற்றில், அரசு மணல் குவாரி, இரு ஆண்டுகளாக செயல்படுகிறது. கள்ளிப்பட்டு குவாரி நடத்துபவர்கள், அவர்களுக்குச் சொந்தமான, 100 டிப்பர் லாரிகள் மூலம், தினமும் இரவு, பகல், விடுமுறை நாட்கள் என, பாராமல் மணல் அள்ளுகின்றனர்.
2 யூனிட் மணல், 624 ரூபாய்க்கு வாங்கி, கண்டரக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள, இரண்டாம் மணல் விற்பனை நிலையத்தில் கொட்டி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தினமும், கள்ளிப்பட்டு மணல் குவாரியில் இருந்து, ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இங்கு, அரசு அனுமதித்த, 1 மீ., ஆழம் என்பது, பதிவேடு அளவிலேயே உள்ளது. விதிமுறைகளை மீறி, 50 அடி ஆழத்திற்கு, கள்ளிப்பட்டு ஊராட்சியில் துவங்கி, அக்கடவல்லி ஊராட்சி எல்லை வரை, பெண்ணையாறே காணவில்லை என்பது போல், மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை, மாவட்ட அளவிலான அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம், கரும்பூர் உட்பட, 100 கிராமங்களில் உள்ள, விவசாயக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம், கணிசமாகக் கீழிறங்கி விட்டது. ஆழ்குழாய் கிணறுகள், இதுவரை இருந்த, 70 அடி ஆழம், தற்போது, 100 அடி ஆழத்திற்கும் கீழே இறங்கி விட்டன. கள்ளிப்பட்டு குவாரி, இதே வேகத்தில் இயங்கினால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைவது மட்டுமல்லாது, விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக