ஞாயிறு, 7 அக்டோபர், 2012

தமிழகத்தின் மத்திய அமைச்சர்களுக்கு ச் சூடு சொரணை, மானம், ரோசம் எதுவும் கிடையாதா?: வைகோ கேள்வி

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்குச் சூடு சொரணை, மானம், ரோசம் எதுவும் கிடையாதா?: வைகோ கேள்வி

First Published : 07 October 2012 11:40 AM IST
காவிரி விவகாரத்தில் கர்நாடக நிலையைப் பார்க்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு சூடு சொரணை, மானம், ரோசம் எதுவும் கிடையாதா? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தின் பிரதான வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பாசன உரிமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகம் அனுபவித்து வரும் சட்டப் பூர்வமான உரிமை ஆகும். அனைத்து உலக நாடுகள் வகுத்துள்ள நெறிகளுக்கும், சட்ட விதிகளுக்கும் நேர் முரணாக, காவிரி நதிநீர்ப் பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறு, சிறுவாணி, கீழ் பவானி, அமராவதி, குமரி மாவட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், நெல்லை மாவட்ட செண்பகவல்லி தடுப்பு அணை, தென்பெண்ணை ஆற்றில் நீர் உரிமை, பாலாற்றின் நீர் உரிமை அனைத்திலும் அண்டை மாநிலங்கள் நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பாக தமிழகத்திற்கு கேடு செய்யும் போக்கை காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு ஊக்குவித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது.
காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு சட்டபூர்வ உரிமையின் படியும், நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும் பெறுவதற்கு தமிழக அரசு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததற்கு, ஒப்புக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் அறிவித்தார். அதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசுக்கு, உச்சநீதிமன்றம் எச்சரிக்கையும் செய்தது. காவிரியில் உரிய தண்ணீர் வராததால் மிகக் கடுமையான துன்பத்திற்கு ஆளாகி உள்ள தமிழக மக்கள், எல்லையற்ற பொறுமையோடு அமைதி காத்து வருகின்றனர். ஆனால், தமிழர்களின் தன்மான உணர்ச்சியைச் சீண்டிப் பார்க்கும் கன்னட வெறி அமைப்புகளும், கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும் அநீதியான போராட்டங்களை நடத்தி, வம்பை விலைக்கு வாங்க முயல்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருக்கின்ற கர்நாடகத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் அறிவித்ததைத் திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று ஆணவத்தோடு கன்னட வெறியராக மாறி, பிரதமருக்கு அமெரிக்காவிலிருந்து அவசரக் கடிதம் அனுப்பி உள்ளார். உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிப்படையாக பிரதமருக்குக் கடிதம் எழுதுகின்ற மான உணர்ச்சியோ, தமிழக நலனில் அக்கரையோ மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கும் இல்லை. சூடும் சொரணையும் இல்லை என்பது வெட்கக்கேடானது ஆகும். இவர்களை அமைச்சர்கள் ஆக்கிவிட்டு,  தமிழகத்தில் ஓட்டுகளைப் பொறுக்க முற்படும் அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் இப்போதாவது அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.”
- இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக