சொல்கிறார்கள்
முன்பு, 5 பேர்; இப்போது 141 பேர்! செவித்திறன் குறையுடையோர்
மேல்நிலைப் பள்ளி, "அஜய்'யின் உரிமையாளர் ராணி தாஸ்: எம்.ஏ., பி.எட்.,
படித்துவிட்டு, "சிறுமலர்' பள்ளியில், அரசு ஆசிரியையாக, 37 ஆண்டுகள் வேலை
பார்த்தேன். அப்போது, நெதர்லாந்து நாட்டில், காதுகேளாத மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்கும் முறை குறித்து, சிறப்புப் படிப்பு படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. என் கணவர், ஹவுசிங் போர்டில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி
வந்தார். எங்களுக்கு, அஜய் என்று ஒரு மகன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
போது, ஆசிரியர் திட்டியதால், அவன் தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு,
நாங்கள் நடைபிணமாகி விட்டோம். எந்த குழந்தையைப் பார்த்தாலும், அஜய் போலவே
தெரியும். அதனாலேயே, எப்போதும், நிறைய குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று
தோன்றும். அப்போது தான், என் மகனின் நினைவாக, படிக்க வசதியில்லாமல்
கஷ்டப்படும் குழந்தைகளுக்காக பள்ளி துவங்கி, படிப்புதவி செய்யலாம் என்று
முடிவெடுத்தோம். ஏற்கெனவே அனுபவம் இருந்ததால், காது கேளாத, ஏழை
மாணவர்களுக்கான பள்ளியாக அது இருக்கட்டும் என்று தோன்றியது. கடந்த, 20
ஆண்டுகளுக்கு முன், ஐந்து மாணவர்களோடு, பள்ளியை துவங்கினோம். இன்று, இந்த
பள்ளியில், 141 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மகனை இழந்த எங்களுக்கு,
இப்போது நூற்றுக்கணக்கான மகன், மகள்கள்! எங்கள் மாணவிகள் வர்ஷா, சுபாஷினி
இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 மற்றும் 12ம் வகுப்புகளில், மாநில
அளவில் காதுகேளாதோரில், முதல் மதிப்பெண் வாங்கியிருந்தனர். இந்த, 20
ஆண்டுகளாக, பள்ளிக்கான கட்டட வாடகை, ஆசிரியர்கள் சம்பளம், கல்விச்
செலவுகள், சீருடை என்று, எல்லாமே சொந்த பணத்தில் தான் செய்து வருகிறோம்.
ஆனால், இப்போது அது சிரமமாகிக் கொண்டே வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக