செவ்வாய், 9 அக்டோபர், 2012

விலங்குகளை ப் போல் மனிதர்களை ஆய்விற்கு ஆட்படுத்துவதா?- human trial of drugs: S.C. Notice


விலங்குகளை ப் போல் மனிதர்களை ஆய்விற்கு ஆட்படுத்துவதா? உச்ச மன்றம் கேள்வி

புதுடில்லி:மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மனிதர்களை, பரிசோதனை விலங்குகளை போல், பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"ஸ்வஸ்த்யா அதிகார் மன்ச்'என்ற, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
டாக்டர்கள் உடந்தை

இந்தியாவில் உள்ள பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள், சம்பந்தபட்ட நோய்களை, சரியான முறையில், குணப்படுத்துகின்றதா என்பதை, சோதனை செய்யும், நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த பரிசோதனைக்கு, மனிதர்களையும், பரிசோதனை விலங்குகளைப் போல் பயன்படுத்துகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும், 3,300 நோயாளிகள், இதுபோன்ற பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இங்கு பணிபுரியும் அரசு டாக்டர்களில், 15 பேருக்கு, இதில் தொடர்பு உள்ளது.இதுதவிர, அரசுத் துறையை சேராத, 40 டாக்டர்கள், இந்த சோதனைகளுக்கு உடந்தையாக உள்ளனர். 10க்கும் மேற்பட்ட, தனியார் மருத்துவமனைகளும், இந்த பரிசோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளன.மன ரீதியான பாதிப்புக்கு ஆளான, 233 பேரும், 1 முதல், 15 வயதுள்ள குழந்தைகளில், 1,833 பேரும், இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதற்காக, அரசு டாக்டர்களுக்கு மட்டும், 5.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தடை விதிக்க கோரிக்கை

இது போன்ற பரிசோதனை காரணமாக, 2008ல், 288 பேரும்; 2009ல், 637 பேரும்; 2010ல், 597 பேரும் இறந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், இதுபோன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டுஉள்ளன. ஏராளமானோர், இதில் இறந்துள்ளனர். எனவே, பரிசோதனை விலங்குகளைப் போல், மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஏ.ஆர்.தாவே ஆகியோரைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இது, மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஏராளமான மக்களை பாதிக்க கூடிய, இந்த பரிசோதனையை, உடனடியாக நிறுத்தும்படி, ஒரே வரியில், எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியும்; ஆனாலும், உடனடியாக அதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.

இழப்பீடு தரப்பட்டதா?
கடந்த, 2005 ஜனவரியிலிருந்து, இந்தாண்டு ஜூன் வரை, மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக வந்த, விண்ணப்பங்கள் எத்தனை, இதுபோன்ற பரிசோதனைகளில், மரணங்கள் நிகழ்ந்தனவா; அப்படி நிகழ்ந்திருந்தால், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன; அதற்கான காரணங்கள் என்ன, பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டோருக்கு, பக்க விளைவுகள் ஏதாவது நிகழ்ந்தனவா; அப்படி நிகழ்ந்திருந்தால், எத்தனை பேர், இதனால், பாதிக்கப்பட்டனர். அதற்கான காரணங்கள் என்ன, பரிசோதனையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டனவா என்றவிவரங்கள், மத்திய, மாநில அரசுகள் தரப்பில், அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக