வியாழன், 11 அக்டோபர், 2012

ஒட்டுண்ணிகள்!

ஒட்டுண்ணிகள்!

First Published : 09 October 2012 05:17 AM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்ன தொழில் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரை ""வெற்றிகளைக் குவிக்கும் வியாபாரி. அரசியலுக்கு மாற மாட்டார்'' என்று பிரியங்கா தெரிவித்தபோது என்ன தொழில் செய்கிறார் என்று யாரும் கேட்கவில்லை. இப்போது "உங்கள் தொழில் என்ன? உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?' என்று "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர் கேஜரிவால் மற்றும் பிரசாந்த் பூஷண் இருவரும் கேட்கிறார்கள் என்றால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
 "வெறும் ரூ. 50 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில் இப்போது ரூ.300 கோடிக்கும் மேலாக மதிப்பு பெற்றது எப்படி?' என்று கேட்கும் கேஜரிவால், இதுவரை ராபர்ட் வதேரா நடத்தும் நிறுவனங்கள் வாங்கியுள்ள சொத்துகள் குறித்த விவரங்களையும், "இந்த சொத்துகள் ஏன் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலையில் உங்களுக்கு விற்கப்பட்டன? எந்த அடிப்படையில் இந்தச் சொத்துகளை வாங்கக் கடன் அளிக்கப்பட்டது?' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார்.
 இந்தியாவின் மிகப்பெரும் வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனம் டி.எல்.எப். இந்த நிறுவனம் வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வியாபார ரீதியாக ரூ.65 கோடி முன்பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றது. ஆனால், ஏன் முன்பணம் கொடுக்கவேண்டும்? அதற்காக அவரிடம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தம் என்ன? என்று அதுகுறித்து விளக்கம் கேட்டால் சொல்ல மறுக்கிறது.
 "நாங்கள் கொடுத்த பணத்தில் ரூ.15 கோடியைத் திருப்பிச் செலுத்திவிட்டார். ரூ.50 கோடிக்கு நிலப் பரிமாற்றம் நடந்துள்ளது' என்று மட்டும் சொல்கின்றது டி.எல்.எப். நிறுவனம். இந்த நிறுவனத்தின் பதில் சட்டப்படியாக சரியாக இருந்தாலும்கூட, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரு நாள்களில் அடைந்துள்ள வீழ்ச்சியே சொல்லும்!
 டிஎல்எப் நிறுவனம் - ராபர்ட் வதேரா இடையிலான கொடுக்கல் வாங்கல், வியாபாரம் ஆகியவை சட்டப்படி கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்கிறார் வதேராவுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித். ஆனால், இதேபோன்று எல்லா நிறுவனங்களுக்கும், எந்தப் பிணையும் இல்லாமல் ரூ.65 கோடியை முன்பணமாக டி.எல்.எப். அள்ளிக் கொடுத்துவிடுமா? இந்தப் பரிவர்த்தனை அவர் ராபர்ட் வதேரா என்பதற்காக அல்ல, அவர் சோனியா காந்தியின் மருமகன் என்பதற்காகத்தான் என்று விவரம் தெரியாத குழந்தைகூடச் சொல்லிவிடுமே!
 இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என்று யார் பெயரிலும் பெருமளவு சொத்து கிடையாது. அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்கும் சொத்துகளைத் தவிர வேறு ஏதும் சேர்த்துக்கொண்டதில்லை. சிலர் பாவம், சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர்கள்!
 ஆனால், இவர்களது மனைவிமார்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள், மாப்பிள்ளைகள், அண்ணன், தம்பி, மைத்துனன் எல்லாரும் பெருந்தொழிலதிபர்களாக மாறிவிடுகிறார்கள். இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இத்தகையவர்களைப் பட்டியல்போட்டால், அதில் விதிவிலக்காக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
 பெரிய இடத்துத் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் "திறமையால்' வளர்ந்ததாகத்தான் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் மிரட்டவில்லை, தொழில்போட்டியை ஒடுக்கவில்லை, அதுவாக வளர்ந்தது என்கிறார்கள். இதை நாம் நம்புவோம் என்றும் நம்புகிறார்கள்.
 உரிய ஆவணம் அல்லது தொழில் திட்டம் இல்லாமல் கடன், முன்பணம் பெறுவது ஊழலாகக் கருதப்படுவதில்லை; ஒரு தொழில் முனைவோருக்கான வாய்ப்பாகப் பேசப்படுகிறது. ஒரு இணை நிறுவனத்தின் வளர்ச்சியை நசுக்கினால் அதனை தொழில்போட்டியில் இயல்பானதாகப் பார்க்கிறார்கள். அதிகாரிகளைத் தங்கள் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டால், அது நட்பு ரீதியிலான ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது. இவை யாவும் "ஊழல்' என்ற வட்டத்துக்குள் வருவதே இல்லை.
 ஒருவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றம் சொல்லும் இந்திய அரசியல் சட்டம், அவரது உறவினர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை அப்பதவி வகிப்பவரின் குற்றமாகப் பார்ப்பதில்லை. இதுதான் சட்டத்தின் ஓட்டை. ஆகவே எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளில் மாற்றம் இருப்பதே இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள ரத்த உறவுகள் மலையென சொத்துகளைக் குவித்துக்கொண்டே இருக்கின்றன.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், சந்தைப் பொருளாதார அடிப்படையிலான கார்ப்பரேட் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளை இன்னொரு நிறுவனம் வாங்குவது சட்டப்படி சரி என்கிற நியாயத்தைப் பயன்படுத்தித்தான் முறைகேடு நிகழ்ந்தது. வதேரா விவகாரத்தில் மட்டுமல்ல, பிரமுகர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் சட்டத்தின் போர்வையில் சரியாகத்தான் இருக்கிறது. நேர்மைக்கு விடைகொடுத்துவிட்டு பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முற்பட்டிருக்கும் சந்தைப் பொருளாதார அவலத்தின் வெளிப்பாடுதான் சுற்றி இருப்பவர்கள் சொத்து சேர்க்கும் சாமர்த்தியம்.
 அரவிந்த் கேஜரிவாலும், பிரசாந்த் பூஷணும் கூறுவதுபோல, லோக்பால் அமைப்பு என்று ஒன்று இருந்திருந்தால், வதேரா மீதான குற்றச்சாட்டை அங்கே தாக்கல் செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் சட்டம்தான் எடுபடுமே தவிர தர்மத்துக்கு இடம் கிடையாதே...
 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அதிகாரிகள், அமைச்சர்கள் கைது செய்யப்படுவதைப்போல, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அவர்தம் உறவுகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலைமை வராமல் போனால் இந்திய ஜனநாயகம் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாகிவிடும் துர்பாக்கியம் ஏற்படும், ஜாக்கிரதை!

கருத்துகள்(21)

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுடமையாக்கப்பட்ட உள்ளூர் வங்கியில் கல்விக்கடன் வேண்டி அணுகிய நினைவு ஏனோ இப்போது வந்து தொலைக்கிறது.படிப்பது அரசுப் பொறியியல் கல்லூரி ;அப்பா அரசில் ஊதியம் பெறும் ஆசிரியர்.ஆனாலும், 'சிதம்பரம் சொல்லுவார்;ஆனால் வசூல் யார் செய்வது?' என்றார் மேலாளர்.வாங்கவில்லை கடன்.வளாகத் தேர்வில் தேர்வு பெற்றார் அவர்.வீட்டுக்கடனைக் கூட உரிய நேரத்தில் கட்டும் நாணயம் இன்று வரை தொடர்கிறது...இதே போல் ஐ.டி.துறையில் கணிசமான ஊதியம் பெறும் மருமகனுக்கு வீட்டுக்கடன் கோரிய போது சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நடைமுறைகள் வியப்பளிக்கிறது.ஆனாலும் ஊரார் பணம் என்பதில் உள்ள நேர்மையும் மறுக்கவில்லை.ஆனால் வதேரா போன்ற "தொழிலதிபர்கள்" எப்படியெல்லாம் கடன் பெற முடிகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக