வியாழன், 2 செப்டம்பர், 2010

ஆங்கில மேதை சீனிவாச சாஸ்திரிக்கு நினைவு இல்லம் அமைக்கப்படுமா?


நீடாமங்கலம்: புகழ் பெற்ற ஆங்கில மேதை வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரிக்கு தமிழக அரசு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சிறந்த அறிஞர்களை பெற்ற பகுதியாகும். அவர்களில் ஒருவர்தான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி. இவர் 22.9.1869-ல் வலங்கைமானில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சங்கரநாராயண சாஸ்திரி.   சீனிவாச சாஸ்திரி கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர், குடந்தை அரசுக் கல்லூரியிலும் பயின்றவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் முதலிடம் பெற்ற இவர், சேலம் நகராட்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.   அதைத்தொடர்ந்து, 1894-ல் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, 8 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தனது பணியின் போது, தனது ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தியதோடு, சிறந்த நிர்வாகி எனவும் பாராட்டுப் பெற்றார்.   அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கமலா என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.   திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது, மெட்ராஸ் ஆசிரியர் கில்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். கூட்டுறவுத் துறையில் ஈடுபாடு கொண்ட சீனிவாச சாஸ்திரி, 1904-ல் திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 1906-ல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்த சாஸ்திரி, அவருடைய சர்வென்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டியில் சேர்ந்தார். 1915-ல் அதன் தலைவரானார்.   1908-ல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்த சாஸ்திரி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளராக 1911 வரை இருந்தார். இவர் 1913 முதல் 1916 வரை சென்னை மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். மாநில கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார்.   இந்த நிலையில், லீக் ஆப் நேஷன்ஸ் பிரதிநிதியாக சாஸ்திரி பிரிட்டன் சென்றார். ஆங்கிலத்தில் இவருக்கு இருந்த புலமை உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டது. காந்தி தனது பத்திரிகையில் சாஸ்திரியை தனது மூத்த சகோதரர் எனப் பாராட்டியுள்ளார். சாஸ்திரியின் விமர்சனங்களை அப்போது காந்தி வரவேற்றாராம்.   இவருடைய ஆங்கில ராமாயணச் சொற்பொழிவு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு, பின்னர் புத்தகமாக அச்சிடப்பட்டது. இவரது ஆங்கிலப் பேச்சில் மயங்கியவர்கள் வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர் என சாஸ்திரியை பாராட்டினர்.  பிரிட்டனில் 1916- 1919-ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு, ரைட் ஹானரபில் என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.   மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது கடின உழைப்பால் மிகச்சிறந்த கல்வியாளராகவும், பேச்சாளராகவும், அரசியல்வாதியாகவும் சாஸ்திரி விளங்கினார்.   இத்தகைய சிறப்பிற்குரிய சீனிவாச சாஸ்திரி தனது 76-வது வயதில் சென்னை மயிலாப்பூரில் காலமானார். அவரது அறிவுத்திறன், பொது வாழ்க்கை ஈடுபாடு, பெருமை அனைத்தும் சாஸ்திரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மட்டும் எனச் சொல்லி, தட்டிக்கழித்துவிட முடியாத ஒன்றாகும்.   தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது வலங்கைமான் என்பது குறிப்பிடத்தக்கது. வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரம் உ.வே. சாமிநாதய்யர் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து, அதன் பெருமைக்காகப் பாடுபட்டார். இதையடுத்து, அவருக்கு உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் ஏற்படுத்தி தமிழக அரசு சிறப்பு செய்துள்ளது.    இரு மொழிக் கொள்கையாக தமிழுக்கு முதலிடம் அளித்ததுடன், ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொள்கிற தமிழக அரசு, வலங்கைமான் நகரில் ஆங்கில மேதை சீனிவாச சாஸ்திரிக்கும் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
கருத்துக்கள்

நினைவில்லம் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப நலிந்து அழிந்து போகும். எனவே, அங்குள்ள கல்விக் கூடம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:39:00 AM
We expect fast action from our C>M and other administrative personnel on this promised memorial. let his real greatness be known forever. MVV
By mvvrajan
9/2/2010 5:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக