வியாழன், 2 செப்டம்பர், 2010

நிகழ் கல்வியாண்டிலேயே செம்மொழி பாட திட்டம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல்


தஞ்சாவூர், செப். 1: பல்கலை மற்றும் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டின் 2-ம் பருவம் முதலே செம்மொழிப் பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம. ராசேந்திரன்.கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் உலகச் செம்மொழிகள் உயராய்வு மையத்தின் நோக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர் ராசேந்திரன் மேலும் கூறியது:மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் உலகச் செம்மொழிகள் உயராய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உலகச் செம்மொழிகள், இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம் தொடர்பாக ஒப்பீட்டு ஒற்றுமை, வேற்றுமை கண்டறிதல், உலகச் செம்மொழி இலக்கிய வரலாற்றை உருவாக்குதல், உலகச் செம்மொழிகளின் இலக்கியக் கொள்கைகளைக் கண்டறிதல், இலக்கிய வகைப்பாடுகளை அறிதல், மிகச் சிறந்த இலக்கியங்களை மொழிபெயர்த்தல், சமூகப் பண்பாட்டு விழுமியங்களுக்கான கலைக் களஞ்சியம் உருவாக்குதல், உலகச் செம்மொழிகளின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய நூல்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த நோக்கங்களின் அடிப்படையில், பல்கலைக்கழக விதிகளுக்குள்பட்டு முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளும் இங்கு மேற்கொள்ளலாம். ஆய்வில் ஈடுபடுவோருக்கு பல்கலைக்கழக விதிகளின்படி உதவித் தொகை பெறவும் வாய்ப்புள்ளது.இந்த மையத்தின் செயல்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக் குழு ரூ. 1.95 கோடி வழங்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு ஓராண்டுக்கு மட்டுமே. ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் மாநில அரசு மூலம் மத்திய அரசிடம் நிதியைப் பெற்று, மையத்தை வழிநடத்தும். நிகழாண்டு வழங்கப்படவுள்ள ரூ. 1.95 கோடியில் முதல் தவணையாக ரூ. 1 கோடி அளிக்க உள்ளது.உலகளவில் இப்படியொரு மையம் இல்லை என்பதால், நிதி தொடர்ந்து பெறுவதில் சிக்கல் இருக்காது. மையக் கட்டடத்துக்கு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ரூ. 2 கோடி அளித்துள்ளார்.தமிழ், சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீபுரு, சீனம், அரபி ஆகிய 7 செம்மொழிகளும் இவற்றுடன் ஆங்கிலத்துக்குமாக 8 மொழிகளுக்கு ஒவ்வொரு மொழிக்கும் பேராசிரியர் ஒருவர், இணைப் பேராசிரியர் ஒருவர், உதவிப் பேராசிரியர் ஒருவர் என 24 கல்வியாளர்களும், மைய இயக்குநர் ஒருவரும் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர். பேராசிரியர்கள், இயக்குநர் தேர்வுகள் முறைப்படி இணையதளத்தில் அறிவிப்பு செய்தும், அந்தந்த மொழிப் பல்கலைக்கழகம் வாயிலாக கல்வியாளர்கள் கண்டறியப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.தமிழ், வடமொழி, பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமன்றி இலக்கியம், இலக்கணம், தத்துவம், யாப்பு, மொழியியல் ஆகிய மொழிகளில் பல்துறை புலமை பெற்ற பேராசிரியர் சோ.ந. கந்தசாமி இந்த மையத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.செம்மொழிப் பாடத் திட்டத்தை கல்லுரி, பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கேற்ப பாடத் திட்டம், செயல் திட்டத்தை உருவாக்கும் பணி தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் ஆகியோர் கொண்ட கூட்டத்தை நடத்தி தமிழ்ச் செம்மொழி வரலாறு, தமிழின் செம்மொழிப் பண்புகள், ஒப்பீட்டு நோக்கில் உலகத் தமிழ்ச் செம்மொழிகள் ஆகிய தலைப்புகளில் செம்மொழிப் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தப் பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டில் (2010-2011) பருவமுறை உள்ள கல்லூரிகளில் 2-வது பருவத்திலும், பருவமுறை இல்லாத கல்லூரிகளில் வரும் கல்வியாண்டின் 2-வது ஆண்டிலும் பாடத் திட்டமாகச் சேர்க்கப்படும் என்றார் துணை வேந்தர் ராசேந்திரன்.
கருத்துக்கள்

ஆங்கிலத்தை உலகச் செம்மொழிகள் உயராய்வு மையத்தில் சேர்ப்பதால் ஆங்கிலமும் செம்மொழி என்றாகி விடும். எனவே, அதனை இம்மையத்திலிருந்து எடுத்து விட்டு வேறு மையம் மூலம் அப்பணிகளை மேற்கொள்ளும். அதே நேரம் பிற மொழிகளில் பெயர்ப்புப் பணி பார்த்தல் என்னும் வகையி்ல் ஆங்கிலம் இருக்கலாம். நிகழ்வாண்டிலேயே செம்மொழிப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டிற்குரியது. இப்பாடங்களைப் பிற மொழிகள் மட்டும் பயிலும் மாணவர்களும் அறிவதற்காகப் பிறமொழிப் பாடங்களிலும் மொழி பெயர்த்துச் சேர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் படிப்போர் தமிழைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படாத இழிநிலையில் தமிழை அறியும் சூழலாவது ஏற்படுவது நன்றல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக