தற்பாதுகாப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு எப்போது மாறுவோம்?
30 August, 2010 by adminஇலங்கை அரசின் தாக்குதல் என நாம் குறிப்பிடுவது ஆயுதத் தாக்குதலை என்று நினைக்கவேண்டாம். இலங்கை அரசானது புலம்பெயர் தமிழர்கள் மீதும் அரசியல் பிரமுகர்கள் மீதும் மேற்கொண்டு வரும் மறை முக நடவடிக்கைகள் சிலவற்றை நாம் பார்க்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு சூழ் நிலையில் தமிழினம் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் மட்டும் இறங்கியுள்ளதே தவிர, தாக்குதல் நிலைக்கு இன்னும் ஏன் மாறவில்லை? புலம்பெயர் அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக ஏன் மௌனம் காத்து வருகின்றனர்?
இன்டர்போல் கேபியை தேடிய காலம்போய், கே.பி தற்போது இன்டர்போலை நாடிச் செல்லும் காலம் வந்துவிட்டது.
கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசப் பொலிசாரை தொடர்புகொண்டு மேலதிக தகவகளை அவர்களுக்கு வழங்கியிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. புலம்பெயர் நாடுகளில் சில தமிழ்ப் பிரமுகர்களை தன்வசம் இழுத்த கே.பி, புனர்வாழ்வு புனரமைப்பு எனக்கூறி, சிலரைக் கொழும்புக்க அழைத்து சந்தித்தது யாவரும் அறிந்ததே. அதில் சென்றுவந்த மருத்துவர் அருண்குமார், சில உண்மைகளை வெளியிட்டதால், சீற்றமடைந்த கே.பி அக் குழுவுக்குப் பதிலாக மாற்றுக் குழு ஒன்றை உருவாக்கி, அதில் சென்றுவந்த 9 பேரையும் புறந்தள்ளியும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் தற்போது வேறு ஒரு குழுவோடு தனது செயல்பாடுகளை தொடர்கிறார் என்ற செய்திகளும் வருகின்றன. இவர்களிடமும், தனது வலையமைப்பின் மூலமும் தெரிந்துகொண்ட சில செய்திகளையும் அவர் சர்வதேசப் பொலிசாரிடம் (இன்டர் போலிடம்) தெரிவித்துள்ளாராம்.
தனக்கு எதிரி என்று இவர் கருதுபவர்களில் சிலர் இருந்தாலும், ஆயுதக் கொள்வனவில் ஈடுபடும் பொன்னையா என்று அழைக்கப்படும் ஐயா, புலிகளின் வான்படைத் தளபதிகளில் ஒருவரான அச்சுதன், மற்றும் நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் போன்றோரைப் பார்த்து கே.பி அச்சமடைந்துள்ளதை சமீபகாலத்தில் அவர் வழங்கிய செவ்வியில் இருந்தே காணலாம். இலங்கை அரசானது நெடியவனை கைதுசெய்து இலங்கை கொண்டுசெல்ல முற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனை நோர்வே நாட்டினூடாக செயல்படுத்த, அது நோர்வே புலனாய்வுத்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதே போன்றே, அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி ருத்திரகுமாரையும் கைதுசெய்து தருமாறு, அமெரிக்க எப்.பி.ஐ யிடம் இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கோரி வருகிறது.
இந்நிலையில் நாம் இலங்கை அரசு தொடர்ச்சியாக தொடுக்கும் தாக்குதலைச் சமாளித்து, அவற்றை எதிர்கொண்டுவருவதும், அவ்வப்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் ஊடகப் போருக்கு முகம்கொடுத்து மறுப்பு அறிவித்தலை முன்னெடுக்கவுமே முனைகிறோமே அன்றி, திருப்பித் தாக்கும் நடவடிக்கையை நாம் இன்னும் கைகளில் எடுக்கவில்லை. அல்லது அது மிகவும் சொற்பமாகவே நடந்து வருகின்றது என்லாம். அதாவது ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதுவரைக் கைதுசெய்தல், போர்குற்ற நடவடிக்கை, இன அழிப்பு நடவடிக்கை என்பன ஒரு புறம் நடந்தாலும், இலங்கை அரசுக்கு சரியான அழுத்தம் இன்னும் பிரயோகிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
நாடு கடந்த அரசாங்கமானது தொடர்ந்தும் அறிக்கைகளை விடுவதோடு மட்டும் நிறுத்தியுள்ளது. பிரித்தானியாவில் இயங்கும் அமைப்புகள் பல உறங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. போர் நடைபெற்ற காலகட்டத்தில், இலங்கை அரசு முகம்கொடுத்த அழுத்தங்கள் பல, அதுபோன்ற ஒரு பன்முகப்படுத்தப்பட்ட தாக்குதலை தமிழர்கள் ஆரம்பிக்கவேண்டும், பல தாக்குதல் கதவுகளை புதிது புதிதாகத் திறக்கவேண்டும், ஐ.நா சபை, மனித உரிமைக் கழகங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், ஐ.நாவுக்கான சட்டத்திற்கு புறம்பான கொலை தொடர்பான அமைப்புகளோடும், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களோடும் பேசி, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பன் முகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இல்லையே எதிரி எம்மீது, இந்த இடைவெளியைப் பயன்படுத்தத் தவறமாட்டான். சமாதானம் பேசி ஒற்றுமையாக வாழலாம் என்று ஒரு புறம் இலங்கை அரசு அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபுறம் புலம்பெயர் தமிழர்களின் சக்தியை உடைக்க பெரிதும் பாடுபடுகிறது. இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் ஆனாலும் சரி பொது வேலைத் திட்டங்களில் ஈடுபடுபவர்கள் ஆனாலும் சரி தமது சொந்த நலன்களைக் கருதில் கொள்ளாது, இக்கட்டான இக் காலகட்டத்தில் தமது கடமையைச் செய்வதே தமிழர்களுக்கு ஒரு விடிவு ஏற்பட ஏதுவாகும்.
வெறுமனவே ருத்திரகுமாரையும், நெடியவனையும், மற்றும் சிலரையும் கைதுசெய்தால் புலம்பெயர் போராட்டங்கள் முற்றுப்பெறும் என்று இலங்கை அரசு போட்டிருக்கும் மனக்கணக்கு உடையவேண்டும் என்றால், பொதுமக்களும் எமது விடுதலை நோக்கிய பயணத்தில் தமது பங்களிப்புகளைச் செய்யவேண்டும். வெறுமனவே தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் அதனை முன்னெடுப்பார்கள் என்று சுமையை அவர்கள் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிச் செல்வதை நாம் முதலில் நிறுத்தி எமக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் போராட்டமாக நாம் இதை மாற்றி முன் நகர்த்தவேண்டும்.
சமீபத்தில் கே.பி இன்டர்போலுடன் தொடர்புகளை மேற்கொண்டு, சில பிரமுகர்களின் பெயர்களைக் கொடுத்து அவர்களின் பெயர்களை இன்ட்ர்போலின் தேடுதல் பட்டியலில் இடும்படி இலங்கை அரசு ஊடாக அறிவித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இருப்பினும் அதனை ஏற்க இனடர் போல் மறுத்துவிட்டதாக அறியப்படுகிறது. சரியான சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லாமல் தாம் செயல்பட முடியாது என் இன்டர் போல் தெரிவித்துள்ளது. மேற்கு உலகம் இலங்கையின் போர்க் குற்றங்களை நன்கு அறிந்துள்ளது. இருப்பினும் அரசாங்கங்களுக்கு இடையே உள்ள புரிந்துணர்வு காரணமாக அவர்கள் தன்னிச்சையாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மாட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே. எனவே அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாகவே தற்போது மேற்குலகு மெல்ல மெல்ல மாறிவருகின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். எனவே அதனை நாம் விரிவாக்கி செயல்படாவிட்டால், எதிரியின் தாக்குதலை சமாளிக்கவே நேரம் சரியாக அமையும்.
நாம் தாக்குதல் தொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் நிமிர்ந்து எழ முடியாத ஒரு நிலைதோன்றும். இதனை முறியடிக்க நாமும் எதிர்த் தாக்குதலுக்கு தயாராவோம்! அது அரசியல், ஊடக, மற்றும் உளவியல் தாக்குதலாக அமையட்டும்.
எவன் ஒருவன் வலியை எமக்குத் தந்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக்கொடு என்ற தேசிய தலைவரின் வாக்கும் இதனையே கூறி நிற்கின்றது அல்லவா....
அதிர்வின் ஆசிரிய பீடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக