செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்


ராஜபாளையம், ஆக. 30: குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதி மாணவர் இலக்கிய மன்ற விழாவில் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:இப்போது நாம் படிப்பது அதிக மதிப்பெண் எடுத்து, அதன் மூலம் மேற்படிப்பு படித்து வேலைக்குப் போகவேண்டும், அதன் மூலம் நிறையப் பணம் சம்பாதித்து பெரும் தனவந்தராக மாறவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதுவே சந்தோஷமான வாழ்க்கை என்றும் நினைக்கிறோம்.பணம் மட்டுமே சம்பாதித்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டுவிடாது. மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. பகிர்ந்து கொள்ளும் உணர்வில்தான் இருக்கிறது. மற்றவர்களை நேசிப்பதில் இருக்கிறது. இயற்கையை ரசிப்பதில் இருக்கிறது. இதைக் குழந்தைகள் உணரவேண்டும். இதைப் பெற்றோரும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்.சென்னை போன்ற பெரிய நகரங்களில் படிப்பதும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதும்தான் பெருமை என்ற உணர்வு பெற்றோரிடம் உள்ளது. ஆனால், வெற்றி பெற்ற மனிதர்கள் படித்தது எல்லாம் பெரிய பட்டணத்தில் அல்ல. அண்ணல் காந்தியடிகள், ராஜாஜி, அண்ணா, அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவருமே சிறிய கிராமங்களில் படித்தவர்கள்தான்.ராஜபாளையம் நகருக்கு பெருமைத் தேடித்தந்த சென்னை ராஜதானியின் முன்னாள் முதல்வர் குமாரசாமிராஜா பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவரா? இல்லை, காமராஜர்தான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தாரா?ஆனால், தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் படித்து சாதனை படைத்துள்ளனர். உலக வரைபடத்தில் உங்களால் ராஜபாளையம் இடம்பெற வேண்டும். அதுவே நீங்கள் பிறந்த மண்ணுக்குச் செய்யும் கடமை. எல்லா பெற்றோருக்கும் தத்தமது குழந்தைகளுக்கு நல்லாசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால், தங்களது குழந்தைகளை ஆசிரியராக்க மட்டும் யாரும் தயாராக இல்லை.  ஏதாவது ஒரு பெற்றோர் எனது மகனை ஓர் ஆசிரியராக்கப் போகிறேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமா? அப்படி நினைத்தால் எப்படி எதிர்காலத்தில் நல்லாசிரியர்கள் உருவாக முடியும்? உங்களில் பலர் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.முடிந்தால் நீங்கள் சரித்திரம் படைத்து பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமைத் தேடிக் கொடுங்கள். இல்லாவிட்டால் ஆசிரியர்களாக மாறி சாதனையாளர்களை உருவாக்கிப் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேருங்கள் என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் கவிஞர் ரா.ஆனந்தி, தலைமை ஆசிரியை ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.மாணவியர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மரங்கள் உள்ளிட்ட இயற்கை குறித்து மாணவ, மாணவியர் பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் எம்.ஏ.வெங்கடப்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

ஆசிரியரின் கருத்து சரிதான். இதற்குக் காரணம், வருவாயும் வசதியும் அதிகாரமும் மிகுதியாக உள்ள பணியே சிறந்த பணி என மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டதுதான். இதனைப் போக்க தினமணி முன் வரவேண்டும். கல்லூரி ஆசிரியர்களின் ஊதியங்கள் உயர்ந்துள்ள இந்நிலையில் கல்லூரி ஆசிரியர் பணிகளின்பால் கவனம் திரும்பி வருகின்றது. எனினும் பள்ளி ஆசிரியர் பணி உயர்வானது என்ற எண்ணம் விதைக்க அவர்களின நிலையும் மன்பதையில் உயர வேணடும். தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியப்பணி இறைப்பணிக்கு இணையானது என்பதை அனவைரும் உணரவேண்டும். ஆசிரியப் பணிவாய்ப்பு கிடைத்தோர் இப்பணியை உயர்வாக உலகோர் கருதும் வண்ணம் தொண் நோக்கில் பணியாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக