வியாழன், 2 செப்டம்பர், 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
 
 
 
 



பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010,23:29 IST

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக