மரணத்தின் பிடியில் இருந்து மீண்டுள்ளேன்': பிடல் காஸ்ட்ரோ
First Published : 01 Sep 2010 12:00:00 AM IST
வாஷிங்டன், ஆக.31: மரணத்தின் விளிம்புக்கே சென்று தான் மீண்டுவந்துள்ளதாக கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்றும் மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: உடல் நலம் பாதித்த போது நான் பிழைத்திடுவேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை முடியாது என்று கையைவிரித்திடுவார்களா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டேன். உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல்நல பாதிப்பால் எனது கால்களும், கைகளும் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கால்களையும், கைகளையும் பழைய நிலைக்கு கொண்டுவர முயன்றேன். எழுந்து நிற்பதே கடினமாக இருந்தது. எனினும் வைராக்கியத்துடன் கஷ்டப்பட்டு எழுந்து நடந்தேன். பேனாவை எடுத்து எழுதி கைக்கு வேலை கொடுத்தேன். உள்ளத்தையும், உடலையும் மீண்டும் புத்துணர்வாக வைத்துக்கொண்டேன். இதனால் என்னால் ஓரளவுக்கு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது. இழந்த உடல் எடையையும் மீட்டுள்ளேன். இப்போது 85 கிலோ எடை உள்ளேன். எனினும் உணவு, மருந்து எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் மருத்துவர் ஆலோசனையை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன். எனது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து ஆலோசித்து, அவர்களிடம் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பி மருத்துவம் சம்பந்தமாக நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். சரியாக சொல்வதென்றால் நான் பட்டம் பெறாத டாக்டராகிவிட்டேன் என்றார் பிடல் காஸ்ட்ரோ. இந்த பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். கேட்கும் கேள்விகளுக்கு நகைப்புடன் பதில் அளித்து எங்களை சிரிக்க வைத்துவிட்டார் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் பேட்டி கண்ட மெக்ஸிகோவின் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கியூபாவை ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. 2006-ன் மத்தியில் அவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது இரைப்பையில் பிரச்னை ஏற்பட்டது. அவர் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார். பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் மீது உயிரையே வைத்திருந்த கியூபா மக்களுக்கு பெரும் சோகமாக அமைந்தது. எனினும் அவர் மெதுவாக உடல்நலம் தேறினார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிபர் பதவியில் தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று பிடல் காஸ்ட்ரோ கருதினார். இதனால் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் 2008-ல் ஒப்படைத்துவிட்டு அரசின் சிறப்பான செயல்பாட்டு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.
9/2/2010 6:26:00 AM
9/1/2010 12:36:00 AM