ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்


கொழும்பு, ஆக. 27: இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன் பங்கேற்று பேசியது: உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டதால் பாதிப்பு ஒரு வரையறைக்குள் இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த நெருக்கடிகளிலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்ற எண்ணத்தோடு, இந்த நெருக்கடிக்கு காரணமான தாராளமய கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் எப்படியாவது நீண்ட கால உறவினை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு துடிக்கிறது. இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அணு உலை விபத்து இழப்பீடு மசோதா ஆகியவை இந்திய மக்களின் நலன்களுக்கு எதிரானது மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் நடவடிக்கைகளாகும். எங்கள் கட்சியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சிகளை எதிர்த்தும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் எங்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்குவதாக அரசியல் தீர்வு இருக்க வேண்டும். அது இலங்கையின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டினையும் வலுப்படுத்தும் என நாங்கள் உணர்கிறோம். அரசியல் தீர்வுக்கு உழைக்கும்போதே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை; வேறுபடுத்தித்தான் பார்க்கிறது. தமிழ் மக்களின் நியாயமான தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் அதிதீவிர நடவடிக்கைகளுக்கு எங்கள் எதிர்ப்பினையும் காட்டியிருக்கிறோம். போர் முடிந்துள்ள நிலையில், போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் பிரதான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் டி.கே.ரங்கராஜன்.
கருத்துக்கள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிட இவர்கள் யார்? பொதுவுடைமைக்கட்சி ஆளும் நாடுகளில் அந்தந்த நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட புரட்சியாளர்களையும் மக்களையும் வேறுபடுத்தித்தான் பார்க்கின்றனரா? மண்ணின் மைந்தர்களையே கூட்டம் கூட்டமாக அழித்து விட்டு ஒற்றுமை என்றும் ஒருமைப்பாடு என்றும் கூக்குரலிடுவதை மனித நேயர்கள் ஒப்புக் கொள்வார்களா? முதலில் செஞ்சட்டை அணிந்த காவிக்கட்சி என்னும் பெயரை நீக்கும் வகையில் செயல்பட்டு உங்களின் வெளிநாட்டுத் தலைவர்கள் இன விடுதலை பற்றிப் பேசியதையெல்லாம் படித்துப் பார்த்துவிட்டு அடுத்த நாட்டு விடுதலை பற்றி உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். 
வெல்க தமிழ்ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 4:15:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக