திங்கள், 22 மார்ச், 2010

லெமூரியாவின் தொன்மை உலகறியச் செய்யப்படுமா?



கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தாலும் தமிழின் சொல்வளம் கணக்கிட இயலாத ஆற்று மணலைப் போன்றது. இனிக்கும் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் தமிழக அரசு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகிறது. தமிழன்னைக்கு அவர்தம் புதல்வர்களால் ஏற்கெனவே காப்பிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வழியில் தங்களின் சிந்தனையை பலநாள் வடிகட்டி தமிழறிஞர்கள் தரப்போகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கட்டுரைகள் சின்னஞ்சிறு மலர்களாய் தமிழன்னையின் பாதத்தில் போய்ச் சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.பன்னாட்டுத் தமிழறிஞர்கள் ஒரே அரங்கில் திரளப் போகும் இம்மாநாட்டில், பலவித அரங்குகளையும், அலங்கார ஊர்திகளையும் மக்களின் பார்வைக்காக வைக்க அரசு முயற்சித்து வருகிறது. பொருள் பொதிந்த எழுத்து களைச் சுமந்து நிற்கும் ஓலைச்சுவடிகள், தொன்மையை விளக்கும் பொக்கிஷங்களான கல்வெட்டுகளின் பங்களிப்பு இதில் மிகையாக இருப்பது அவசியம்.வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளின் அருகில் இன்றைய அதிநவீன அச்சுப் பிரதிகளையும் இடம்பெறச் செய்தால் அறிவியலின் புதுமையையும், தமிழின் தொன்மையையும் மாநாட்டில் பங்கேற்பவர்கள் ஒருசேர பார்த்து அறிய முடியும். ஓலைச் சுவடிகளில் எழுதும் ஆற்றல் படைத்தவர்களை இந்த அரங்கில் அமரச் செய்து, எழுதிக் காண்பிப்பதும், அக்காலத்தில் ஓலைச்சுவடிகளை மஞ்சள் பூசி பராமரித்த விதத்தை செயல்முறைக் காட்சியாக விளக்குவதும் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பலரை இம்மாநாட்டில் பங்கேற்க செய்து, தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டு மற்றும் செப்பேடுகளை பார்வைக்கு வைத்து, அது குறித்து விளக்கம் அளிக்கச் செய்ய வேண்டும். தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பல வகை எழுத்துகள், அதை படித்தறியும் முறைகளை விளக்கி கல்வெட்டுகளை வாசித்தறியும் ஆர்வத்தைத் தூண்டுவது ஆரோக்கியமான விஷயம். சேர, சோழ, பாண்டியர்களின் பழங்கால நாணயங்களையும் இதனுடன் சேர்த்து வைக்கலாம். அப்போது ஒரே கல்லில் இருமாங்காய் அளவு பலன்கிட்டும்.தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டிய கடமையும் செம்மொழி மாநாட்டுக்கு உள்ளது. உலகின் முதல் தமிழன் வாழ்ந்த லெமூரியா கண்டம் பற்றி தற்போது ஆங்கிலவழிக் கல்வியில் பொதுத்தேர்வு எழுதும் நிலையை அடைந்துவிட்ட பள்ளி மாணவர்களுக்கும் தெரிவதில்லை.லெமூரியாவில் வாழ்ந்த தமிழன் கடல்கடந்து போரிட்டு வென்றதாகவும், பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களால் பெரும் துயரம் அடைந்ததாகவும் நூல்களின் வழியே அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவை இளைய சமுதாயத்தை சென்றடையாத நிலை உருவாகி வருகிறது. இக்கண்டம் குறித்த கல்வெட்டுகள் கிடைத்தாலும் அதில் உள்ள சித்திர எழுத்துகளைப் படித்து அறிய இயலாத நிலை உள்ளதாகத் தமிழறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைப் போக்கும் வகையில் கல்வெட்டுகளில் உள்ள சித்திர எழுத்துகளை அறியும் ஆய்வுகளைத் தொடங்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மத்திய, மாநில அரசுகளில் உள்ள கல்வித் துறையில் இந்திய வரலாற்றைக் கூறும்போது, அதில் லெமூரியா கண்டம் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே இடம்பெற்றுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், குமரிக்கிழார் போன்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு முழுமையாகத் தெரியப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் பல தமிழ் நூல்களின் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, லெமூரியா கண்டத்தின் வரலாறுகளைத் தமிழகப் பாடநூல்களில் விரிவாகச் சேர்க்க தமிழக அரசு ஆணையிட வேண்டும். இணையதளம் மூலமோ புதிய பல நூல்கள் வாயிலாகவோ முதல் தமிழர்கள் மற்றும் அவர்களின் வரலாறுகள் உலகம் முழுவதும் சென்றடைய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தகுந்த தீர்வு ஏற்படுத்தலாம்.லெமூரியா கண்டம், அதுசார்ந்த கல்வெட்டு ஆராய்ச்சிகள், பல நாட்டு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகளைத் தொகுத்து பல்வேறு குறும்படங்களையும், ஆவணப் படங்களையும் வெளியிடலாம். இதற்கு முயற்சிப்பவர்களுக்குத் தகுந்த ஊக்கமளிக்கும் உத்தரவாதத்தை தமிழக அரசு இம்மாநாட்டில் அளிக்கலாம்.இந்தியாவின் வரலாற்றில் லெமூரியாவின் சிறப்பைக் கடுகளவும் குறையாமல் தெரியப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்திய வரலாற்று பாடப்பிரிவுகள் அமைய செம்மொழி மாநாட்டில் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க விரும்பினால் அவர்களுக்கு பயணக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை அளித்து ஊக்கப்படுத்த உத்தரவிட வேண்டும். தற்போது திட்டமிட்டுள்ள அரங்கில் போதிய இடவசதி இல்லையென்றாலும், அதற்கென பிரத்யேக அரங்கில் மாணவர்களை அமரச் செய்து அங்கு அகன்ற திரைகளில் மாநாட்டு நிகழ்வுகளைப் பார்வையிட ஏற்பாடு செய்யலாம்.மாநாட்டில் பதிவு செய்யப்படும் குறுந்தகடுகளை ஜூலை மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் கல்வித்துறை மூலம் சுற்றுக்கு அனுப்பி, அறிஞர்களின் கருத்துகள் மாணவர்களிடம் சென்றடைய வழிவகை காண வேண்டும்.நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்களையும், நிகழ்வுகளையும் கூட சில நாடுகள் மிகப்பெரிய பொக்கிஷமாகக்கூறி பராமரிப்பதோடு, உலகம் முழுவதும் கூறி பெருமைப்படுகின்றன. இச்சூழலில் ஆயிரங்களை கடந்து நிற்கும் நம் பழமை இளைய சமுதாயத்தைச் சென்றடையச் செய்வது மிகவும் அவசியமானதே.
கருத்துக்கள்

குமரிக்கண்ட வரலாறு என்பது மனித குலத்திற்கேநன்மை தரக்கூடியது என்றாலும் தமிழர்க்குப் பெருமை சேர்க்கக் கூடியது. தமிழர்க்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கக் கூடிய எதையும் இந்தியா செய்யாது; இருட்டடிப்பும் செய்யும். அதை மீறி ஏதேனும் உண்மை வெளி வர வேண்டிய சூழல் வந்தால் இந்தியமாகத்தான் காட்டும். தமிழக அரசிற்கு ஆரவாரமாகப் பேசிக் கை தட்டுவதற்கு எப்பொழுதாவது பயன்படுத்தும் எண்ணம் இருக்குமே தவிர தமிழக வரலாற்றைத் தமிழக மக்களும பிற நாட்டினரும் அறியச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. கட்சிகளுக்குத் தத்தம் எதிர்காலச் சுரண்டல் பற்றிய கவலை மட்டுமே உள்ளதால் ஆட்சியும் அவ்வாறுதானே இருக்கும். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் கிடைக்கும் நாளில்தான் உண்மை வரலாற்றை உலகறியச் செய்யும பணி நடைபெறும். அதுவரை நாம் கூறுவன வெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கே!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புள்ள கோ. முத்துகுமார், இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே,
கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கலாம், சிறிதோ பெரிதோ நிலப்பகுதிகள் முழுகி இருக்கலாம், ஆனால் இலெமூரியா, குமரிக் கண்டம் என்பனவெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று அறிந்து உண்மையைப் பரப்ப வேண்டும். நானும் தேவநேயப் பாவாணரின் எழுத்துகளாலும் ஆராய்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு தமிழார்வம் கொண்டவன்தான். கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கும் என்றும் நம்புகின்றனவன் (ஏனெனில் தமிழில் அவை புராணம் போல் விரிக்காமல் சுருக்கமாகவும், உண்மை
நிகழ்வுகளாகவும் பதிவு செய்துள்ளார்கள் என நம்பும்படியாக உள்ளது). ஆனாலும் வலுவான சான்றுகோள்களின் அடிப்படையில், சான்றுகோள் தரவு சுட்டுவதற்கு மீறாத வகையிலும், தக்க ஆய்வுகளின் அடிபப்டையில் மட்டுமே கருத்துகளைப் பாடநூல்களில் தருவதும், பிறநூல்களில் தருவதும் முறையாகும். நன்றாக அறிந்த கடந்த 2500 ஆண்டுகள் வரலாற்றிலே கூட தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் உலகளவில் இன்னும் முன்னணி வகைக்க வேண்டும். மேலும், பழமை மட்டும் பேசாமல், தற்காலத்துக்கும், வருங்காலத்துக்கும் பயன்படக்கூடிய தமிழ் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது என்போன்றோரின் அவா. செல்வா
வாட்டர்லூ, கனடா
அன்புள்ள நண்பரே !கடல்கோள் நிகழ்ந்திருக்கலாம் அல்ல. பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கற்பனை என்றவர்களில் பலர் சுனாமி என்ற பெயரில் வந்த கடல்கோளைப் பார்த்துவிட்டு ஒப்புக் கொண்டுள்ளனர். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதில் தெளிவு இல்லை. புராணக்கதைகளை வரலாறாக நம்புகின்ற நாம் உண்மை நிகழ்வுகளை வரலாறாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை என்று புரியவில்லை.தங்களைப் போன்ற அயலகத் தமிழன்பர்கள் தெளிவுடன் தமிழ் நிலம் சார்ந்த உலக வரலாற்றைப் பாரறியச் செய்வதுதானே சிறப்பு?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

1 கருத்து:

  1. உண்மை என்று நிறுவதல் வேண்டும். எப்பொழுது நடந்தது, எவ்வளவு நிலப்பகுதில் கடலுள் மூழ்கியது. இவற்றுக்கான வலுவான சான்றுகள் யாவை என்பதன் அடிப்படையில் நிறுவுதல் வேண்டும். தமிழ் இலக்கியத்தில் சொல்லியுள்ளவற்றை நான் உண்மையானதன் அடிப்படையில் எழுதியுள்ளதாகவே நினைக்கின்றேன், நம்புகின்றேன். ஆனால் மேலும் வலுசேர்க்கும் புறச்சான்றுகோள்கள் வேண்டும். இலக்கியச் சான்றுகளை மட்டும் போதாது. மேலும் பழமையை விட தற்காலத்திலுன் வருங்காலத்திலும், தமிழ் தமிழரின் முன்னேற்றம் முக்கியம்.

    பதிலளிநீக்கு