சென்னை, மார்ச் 22: காலாவதி மருந்துகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் தளத்தில் வீசப்பட்ட காலாவதியான மருந்துகளைச் சேகரித்து, லேபிள் மாற்றி ஒட்டி மீண்டும் அவற்றை விற்கும் செயல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், போலி மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் மற்றும் டி.ஜி.பி. லத்திகா சரண் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்பவர்கள், காலாவதியான மருந்துகளை விற்கும் நிறுவனங்கள், மருந்துக் கடைகள் மீது போலீஸ் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையை அடியோடு களைய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை வலுவுள்ள துறையாகத் தரம் உயர்த்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார். இதுபோன்ற குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபடுவர்கள் தவிர, பின்னணியில் செயல்படுபவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டார்.தண்டனை என்ன? காலாவதியான மருந்துகளை விற்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கு.சுப்புராஜிடம் கேட்ட போது, "போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் அவர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்
முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி அசியல் அதிகாரச் செல்வாக்கிற்கு இரையாகாமல் ஊழலுக்குத் துணை போகாமல் முதலில் பிடிக்கப்பட்டவர்கள் மீது விரைந்து உசாவல் மேற்கொண்டு தண்டனை வழங்கச் செய்யுங்கள்.பிற மோசடிப் பேர்வழிகளையும் உடனே பிடித்துத் தண்டனை கிடைக்கச் செய்யுங்கள். உயிரோடு டவிளையாடும் இவர்கள் மீது பரிவு காட்டாதீர்கள். காலக்கெடு முடிந்த மருந்துகள் குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்க வாயப்பில்லை. தினமணி ஆசிரியவுரையில் குறிப்பிட்டாற்போன்று ஒரு கும்பலே மோசடியில் ஈடுபட்டிருக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுங்கள். உடன் அறிவுறுத்தியுள்ள முதல்வருக்குப பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்3/23/2010 2:35:00 AM