புதன், 24 மார்ச், 2010

இணையதளத்தில் வானிலை ஆய்வு தகவல்களை தமிழில் அறியலாம்!



சென்னை,​​ மார்ச் 23: இணையதளத்தில் வானிலை ஆய்வு குறித்த தகவல்கள் தமிழில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.​ இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வேளாண்மைப் பிரிவின் இயக்குநர் மற்றும் செயலர் ஆர்.​ அசோகன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:​ சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பிரத்யேக இணையதளத்தில் இப்போது அனைத்து வகையான முன்னறிவிப்பு தகவல்களும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றன.இதற்கு முன்பு தினமும் 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை ஆய்வு குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன.​ இப்போது செயற்கைக் கோள்கள்,​​ கணினி மற்றும் டாப்ளர் ரக ரேடார் உள்ளிட்ட நவீனத் தொழில் நுட்ப சாதனங்களின் உதவியுடன் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.​ வானிலை ஆய்வு மையங்களின் தகவல் தொடர்பு வசதிகள் மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட பின் உடனுக்குடன் வானிலை ஆய்வு தகவல்களை இணையதளத்தில் வெளியிட இயலும்.​ உடனடி வானிலை அறிவிப்பு:​​ இந்த இணையதளத்தில் இன்னும் 2 மாதங்களுக்குள் விவசாயிகளுக்கான வட்டார மற்றும் மண்டல அளவிலான வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் தமிழில் இடம் பெறும்.​ இதன் மூலம் 5 நாள்களுக்கு முன்னதாகவே வானிலை எச்சரிக்கை தகவல்களும் வெளியிடப்படும்.​ இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள வெப்பநிலை,​​ காற்றின் வேகம்,​​ மழையளவு குறித்த தகவல்களும்,​​ மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை தகவல்களும் தமிழில் வெளியிடப்படும்.​ இதைத்தொடர்ந்து "டாப்ளர்' ரேடார் மூலம் எடுக்கப்படும் படங்கள்,​​ செயற்கைக் கோள் படங்கள்,​​ நிலநடுக்கம்,​​ மழைப்பொழிவு குறித்த புள்ளி விவரங்களும் இணையதளம் மூலம் தமிழில் வெளியாகும் என்றார் அசோகன்.
கருத்துக்கள்

பாராட்டுகள். விரைவில் இப்பணியைத் தொடங்கி இடையீடின்றித் தமிழில் தாருங்கள். பிற மத்திய அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும்இதனைப் பின்பற்றித் தத்தம் துறை சார்ந்த தகவல்களைத் தமிழில் அளிக்க முன்வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/24/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக