புதன், 24 மார்ச், 2010

நக்ஸல் தலைவர் கானு சன்யால் தற்கொலை



சிலிகுரி,மார்ச் 23:​ நக்ஸலைட் இயக்கத்தைத் தோற்றுவித்த கானு சன்யால் ​(78) முதுமை,நோய் காரணமாக தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.​ சாரு மஜும்தார்,​​ ஜங்கல் சந்தால் என்ற இருவருடன் சேர்ந்து அவர் தோற்றுவித்த வன்முறை இயக்கம்,​​ முதல் சம்பவம் நடந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தை ஒட்டி ""நக்ஸலைட் இயக்கம்'' என்றே பெயர் பெற்றது.​ அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள்,​​ நில உடமையாளர்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட முன்வந்தனர்.​ அவர்களுக்குத் தலைமை தாங்கிய கானு சன்யால்,​​ சாரு மஜும்தார்,​​ ஜங்கல் சந்தால் மூவரும் பன்ஸிதேவா என்ற இடத்தில் இருந்த காவல் நிலைய அதிகாரி அமரேந்திரநாத் பைன் என்பவரை பழங்குடிகள் பயன்படுத்தும் வில்லையே ஆயுதமாகக் கொண்டு அம்பு எய்தி கொன்றனர்.​ 1967-ம் ஆண்டு மே 25-ம் தேதி இச் சம்பவம் நடந்தது.​ அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ​(மார்க்சிஸ்ட் -​ லெனினிஸ்ட்)​ என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக கொல்கத்தாவில் ஷாஹித் மினார் என்ற இடத்தில் 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பகிரங்கமாக அறிவித்தார் சன்யால்.​ அன்றைய தினம் விளாதிமிர் லெனின் பிறந்த நாளாகும்.​ வன்முறைத் தாக்குதல்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் என்று அந்தக் கட்சி அறிவித்தது.​ பாட்டாளி வர்க்கத்தின் எதிரி என்று தங்களால் அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளை நக்ஸல்கள் படுகொலை செய்தனர்.​ இயக்கச் செலவுகளுக்காக வங்கிகளைத் தாக்கி பணத்தைக் கொள்ளை அடித்தனர்.​ ஆயுதசாலைகளில் புகுந்து துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் எடுத்துச் சென்றனர்.​ ​​ 1970 ஆகஸ்ட் மாதம் கானு சன்யால் கைது செய்யப்பட்டார்.​ அதையொட்டி பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.​ பிறகு 1977-ம் ஆண்டு அப்போது முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜோதிபாசுவின் பரிந்துரைப்படி கானு சன்யால் விடுதலை செய்யப்பட்டார்.​ ​ 1972-ல் சாரு மஜும்தாரும் பிறகு ஜங்கல் சந்தாலும் இறந்த பிறகு நக்ஸல் இயக்கம் வலுவிழந்தது.​ ​​ சிறையிலிருந்து 1977-ல் விடுதலையான கானு சன்யால் கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் அமைப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தினார்,​​ பிறகு அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ​(மார்க்சிஸ்ட் -​ லெனினிஸ்ட்)​ உடன் இணைத்தார்.​ புரட்சிகர சிந்தனை கொண்ட பல இயக்கங்கள் அதில் இணைந்தன.​ அதன் அமைப்புச் செயலராக கானு சன்யால் செயல்பட்டார்.​ திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த கானு சன்யாலுக்கு முதுமை காரணமாக சிறுநீரக பாதிப்பும் இதர வியாதிகளும் வந்தன.​ எனவே வலி பொறுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று வடக்கு வங்காள காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.எல்.​ தம்டா நிருபர்களிடம் ​ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.​ குர்சியாங் என்ற ஊரில் 1932-ல் பிறந்த கானு சன்யால் படித்து முடித்ததும் நீதிமன்றத்தில் வருவாய்த்துறை கிளார்க்காகப் பணியில் அமர்ந்தார்.​ அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து,​​ சிலிகுரி நீதிமன்றத்துக்கு அப்போது வந்த மேற்கு வங்க முதலமைச்சர் பி.சி.​ ராய்க்கு கறுப்புக் கொடி காட்டினார்.அதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.​ ஜல்பாய்குரி சிறையில்தான் அவர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சாரு மஜும்தாரை முதல்முறை ​ சந்தித்தார்.​ ​​ சமீபத்தில் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த வன்முறைத் தாக்குதல்களை கானு சன்யால் கண்டித்தார்.​ இந்த வழிமுறையால் மக்களுக்கு நன்மை ஏற்படாது என்றே கருதினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக