வெள்ளி, 26 மார்ச், 2010

இலங்கையில் மொழி மாறும் பெயர்ப் பலகைகள்



தஞ்சாவூர், மார்ச் 24: இலங்கையில் போருக்குப் பின்னர் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் இருந்த பெயர்ப் பலகைகள், சிங்கள மொழியில் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன என்றார் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் கலாநிதி மு.கணேசமூர்த்தி தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கையில் தமிழ் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: இலங்கையில் ஆரம்பக் காலங்களில் தமிழ் நல்ல முறையில் இருந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உளளன. ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்கள் கவிதை வடிவில் இருந்த இலக்கியங்களை, உரைநடை வடிவில் மாற்றி, தமிழ்த் தொண்டாற்றினர். தமிழில் கற்பிக்கும் முறை ஒன்றாம் வகுப்பு முதல் பல்கலை. பட்டப் படிப்பு வரை இருக்கிறது. அறிவியல் பாடங்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பது அங்கு அரிதாக இருக்கிறது. சில அறிவியல் மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் தமிழ் கலைச் சொற்கள் தவறான அர்த்தங்களில் இருந்தது தெரியவந்து, அவற்றை மாணவர்கள் பின்பற்றக் கூடாதென எதிர்ப்பு கிளம்பியது. எனவே, அத்தகைய தமிழ்ப் புத்தகங்களை மாணவர்களிடம் பரிந்துரை செய்வதை பேராசிரியர்கள் குறைத்துக் கொண்டனர். இலங்கையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தகங்களையும் நல்ல மொழிபெயர்ப்பில் தயாரித்து, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். ஐ.ஏ.எஸ். தேர்வுகளையும், அரசுப் பொதுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத இலங்கையில் வாய்ப்புள்ளது. நிர்வாகத் துறையில் தமிழைக் கற்கும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இச்செயல், அரசு நிர்வாகத் துறையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் முயற்சியாகவும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. எனினும், இதன் மூலம் தமிழைக் கற்று, நம் பண்பாட்டையும், உணர்வுகளையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும் வாய்ப்பு சிங்களர்களுக்கு கிடைக்கலாம் என்ற நப்பாசையும் தமிழர்களிடேயே உள்ளது. இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் உச்சரிப்பிலும், வட்டார வழக்கு மொழியிலும் மாற்றம் இருக்கவே செய்கிறது. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் தமிழறிஞர்கள் வசித்து வருகின்றனர். கொழும்புத் தமிழ்ச் சங்கம், விவேகானந்த சபை போன்ற அமைப்புகள் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கும் நடைமுறைகளை இன்னமும் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சிக்கு நிறுவன ரீதியிலான கட்டமைப்பு இலங்கையில் உள்ளது. இலங்கை வானொலி தமிழுக்கு ஆற்றியச் சேவை அளப்பரியது. அச்சு ஊடகங்களும் நல்ல தமிழைப் பயன்படுத்தி வருகின்றன. நல்ல தமிழைக் கற்பிக்கும், கற்கும் சூழலும் அங்கு நல்ல முறையிலேயே உள்ளது. போர் நடைபெற்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவக் கட்டமைப்புகள் இன்னமும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்றார் கணேசமூர்த்தி. இந்தக் கருத்தரங்குக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர் இரா. கலியபெருமாள் தலைமை வகித்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பொருளியல் துறைப் பேராசிரியர் ஆ. அருள்ராஜ் மேலாண்மைத் துறையில் தமிழ் என்ற தலைப்பிலும், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் வி. பாரி தமிழ்நாட்டில் தமிழ் என்ற தலைப்பிலும் பேசினர். முன்னதாக மாணவி சு. மகாலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் நா. பெரியசாமி நன்றி கூறினார்.
கருத்துக்கள்

இந்தியாவின் மூளை இலங்கையில் செயல்படாத பொழுது அங்கே அத்தனைக் கொடுமைகளுக்கும் இடையில் தமிழ் இருந்தது. ஆனால், தமிழின அழிப்பையே தலைமைக் கொள்கையாகக் கொண்ட இந்திய மூளை செயல்பட்டதும் எங்கும் சிங்களம் என்பதே இலங்கை அரசின் மூச்சாயிற்று.எரிபொருள் நிலையம், நுகர் பொருள் கடை, அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற இடங்களிலான பெயர்ப்பலகைகள் சிங்களத்தில் மட்டுமே மாற்றியமைக்கப்பட்ட படங்கள் தினமணியிலும் பலஇணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன என்பதை அறிந்தும் மும்மொழிப் பெயர்ப்பலகை எனக் கூசாது பொய்யையே எழுதும் அறிவாளிகளைக் கடவுளே மன்னிப்பீராக! விரைவில் ஈழம் மலரும்! சிங்கள ஆதிக்கம் அங்கே ஒழியும்! வெல்க தமிழ் ஈழம்! வெல்க ஈழ மக்கள் இந்திய மக்கள் நட்புறவுகள்! ஒழிக கொல்லரசுகள்! அமைக நல்லரசுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:21:00 AM

தமிழில் மட்டும் எழுதப்பட்டிருந்த பெயர் பலகைகளை பிழை திருத்தப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் என வெளி நாட்டில் இருந்துவரும் சுற்றுலா பயனிகள் மற்றும் தமிழ் படிக்கத்தெறியாத சிங்களவர்களும் படித்து தெறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் மூன்று மொழியிலும் பெயர்பலகையினை மாற்றியமைத்திருக்கிறார்கள் இதை கூடவா ஒரு பிரச்சினையாக கருதி கருத்து எழுதுவது அடக் கடவுளே இந்த ஐந்தறிவு (மடையர்களை) மனிதர்களை எதை கழட்டி அடிப்பது..? விளங்கீரும்டா சாமி

By இந்திய தமிழ் வேங்கைகள்
3/25/2010 9:27:00 PM

எங்கே Ravi, தேசநேசன் போன்றோரை காணவில்லை?. இலங்கையில் அமைதி திரும்புகின்றதென்பது இப்படித்தானா?

By Ganesan AS
3/25/2010 5:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக