வெள்ளி, 26 மார்ச், 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்தத் தடையும் இல்லை: மதுரை வழக்கறிஞர்கள் கருத்துமதுரை,மார்ச் 25: நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்று சட்டம் இல்லை; தமிழில் வாதாடத் தடையும் இல்லை என்பதுதான் பெரும்பாலான வழக்கறிஞர்களின் பொதுவான கருத்து.இது தொடர்பாக வழக்கறிஞர்களின் பல்வேறு சங்கத்தினர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் (எம்.பி.எச்.ஏ.ஏ.) கு.சாமிதுரை: உயர் நீதிமன்றக் கிளையில் தமிழில் வாதிடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், தமிழில் வாதிடுவதற்கு வழக்கறிஞர்களிடையே வரவேற்பு உள்ளது. சட்டத்துறையைப் பொறுத்தவரை மொழி ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது. ஆனாலும், சில வார்த்தைகள் குறிப்பாக முன்ஜாமீன் என்பதற்கு தமிழில் "எதிர்பார்ப்பு பிணை மனு' என்று குறிப்பிட வேண்டும். இதுபோன்ற சில வார்த்தைகள் பொதுமக்களுக்குப் புரியாமல் போய்விடுகிறது. சட்டத்துறை தொடர்பாக, தமிழில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் வாதாடுவதன் மூலம், தங்களது வாதத்தை தைரியமாக முன்வைக்க முடியும் என்ற நம்பிக்கை வழக்கறிஞர்களிடம் உள்ளது. இது வரவேற்கத்தக்கது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவி ஜே. நிஷாபானு: தற்போது கணினி, இன்டர்நெட் என்று உலகமயமாக்கல் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் மட்டுமே உயர் நீதிமன்றத்தில் வாதிடவேண்டும் என்பது ஒரு வட்டத்துக்குள் அடைக்கப்படுவது போன்றது. வழக்குகள் தொடர்பாக தமிழில் வாதிடுவதும், ஆங்கிலத்தில் வாதிடுவதும் வழக்கறிஞர்கள் விருப்பமாக இருக்கவேண்டும் என்றார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் மணவாளன்:தமிழில் வாதிடும் முறைக்கு வழக்கறிஞர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. கட்சிக்காரரும் தமிழர், வழக்கறிஞரும் தமிழர், நீதிபதியும் தமிழர் என்றபோது வாதிடும் மொழியும் தமிழாக இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். தமிழில் வாதாடும் முறையால், குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் தங்குதடையின்றி வாதிட்டு கருத்துக்களை எடுத்துவைக்க முடியும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார்:தமிழில் வாதிடுவதால் உயர் நீதிமன்றக் கிளையில் வாதிட, அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதிடும் வழக்கறிஞர்கள் வாங்கும் கட்டணம் அதிகமாக இருக்கும். தமிழில் வாதாடினால் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்ற எண்ணம் கட்சிக்காரர்களிடம் உள்ளது.மேலும், ஒரு வழக்கில் தமிழில் வாதிடும்போது வழக்கறிஞர் எடுத்துரைக்கும் வாதத்தை சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் எளிதில் புரிந்துகொள்ள வழியேற்படும் என்றார்.
கருத்துக்கள்

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் பிழைப்பு நடத்திக் கொண்டு ஆதாய்ம் அடைந்துதமிழுக்கு எதிராகக் கருத்துதெரிவிக்கும் நிசா பானு போன்றவர்கள் வேறு நாட்டிற்குச் சென்று விடலாம். உடனே உணர்வுள்ள வழக்குரைஞர்கள் தலைமைப் பதவியில் இருந்துதூக்கி எறிய வேண்டும். விரைவில் அனைத்துநீதி மன்றங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலை வருவதாக! சட்டக் கதிர் முதலான தமிழ் இதழ்களையும் சட்டத் தமிழ்க் கலைச் சொற்களையும் படித்து எளிய இனிய தமிழில் வாதாடி நீதி மன்றங்களில் அறம் வழங்க ஆவன செய்வார்களாக! நின்று போன தீர்ப்புத் திரட்டு இதழை மீண்டும் வெளியிடுவார்களாக! அரசு முழு ஒத்துழைப்பு நல்குவதாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக