திங்கள், 22 மார்ச், 2010

தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கை

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

“தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு” என்பதை இனப்பிச்சினைக்கான தீர்வுத்திட்டமாக தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்மொழிகிறது.

அத்துடன், கொள்கை அடிப்படைகளில் இருந்து வழுவாது தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்ப் புத்திஜீவிகள், சட்டவல்லுனர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடைய ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடனேயே தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போகும் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட அரசியல் முன்னகர்வுகளை த.தே.ம.மு மேற்கொள்ளும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திருகோணமலை நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை வெளியிட்டுவைக்க, திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும், நகரசபையின் தலைவருமான சண்முகராஜா கௌரிமுகுந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்பொழுது அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்களான பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன், புதிய வேட்பாளர் கலாநிதி விஜயரட்ணம் ஜோன் மனோகரன் கெனடி, மற்றும் திருகோணமலை வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கையின் முழு விபரம்:

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2010
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்
தேர்தல் அறிக்கை

அன்புக்குரிய தமிழ் பேசும், சகோதர சகோதரிகளே!

தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத்தீவில் தனக்கெனத் தனியானதோர்; தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் முதலில் தனது இறைமையை இழந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1833 இல் முழு இலங்கைத்தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது.

பின்னர் 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.

1957 ம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, மொழியுரிமைப் பறிப்பு, மற்றும் கல்வி, தொழில், பண்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட இனரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவற்றினால் தமிழ் இனத்தின் தனித்துவத்திற்கும் வாழ்விற்கும் விடுக்கப்பட்ட இன அழிப்பு அச்சுறுத்தலின் விளைவாக எமது தாயகத்தில் எமது விவகாரங்களை நாமே தீர்மானிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் இனத்தின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் சிங்கள அரசுகளினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டன.

பாதுகாப்பற்ற தமிழ் மக்கள் மீது 1956, 1958 ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட அரச வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. 1972 ல் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனம், தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நிலையில் தமிழ் இனம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய வரலாற்று நிற்பந்தத்திற்குள் தள்ளப்பட்டது.

1976 ம் ஆண்டு மே மாதம் 14 ம் நாள், தமிழரின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ அரசை நிறுவுவதென தீர்மானித்தன.

1977 ம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்லில் தமிழீழ இலட்சியத்தினை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழினத்தின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அமோகமான ஆதரவை அளித்ததன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டது.

தமிழ் இனத்தின் வாழ்வையும் தனித்துவத்தையும் பாதுகாக்கவும், அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு தமிழ் தேசிய இனம் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அளப்பரிய உயிர்த்தியாகங்கள் ஊடாக விடுதலைப் புலிகளால் இலங்கைத்தீவில் ஏற்படுத்தப்பட்ட இராணுவச் சமநிலை ஊடாக 2002ம் ஆண்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டது.

அவ்வேளையில் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய இனத்தின் தாயக நிலப்பரப்பின் 70 வீதத்தை தொடர்ச்சியாகத்; தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கு ஓர் அரச நிர்வாகத்திற்குச் சமமான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பை நடாத்தி ஓர் நடைமுறை அரசினைத் தம்வசம் கொண்டிருந்தனர். இவ்வாறான சூழ்நிலையிலும் 2002 ம் ஆண்டில் உருவான சமாதான சூழல் ஊடாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், கௌரவமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை அடைந்து கொள்ளுவதற்காக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். இந்த அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளால் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை(ISGA) வரைபு முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் சமாதான வழிமுறையூடாக தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எதனையும் முன்வைக்க விரும்பாத பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் காலத்தை இழுத்தடித்து தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தி தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழிப்பதிலேயே முனைப்புக்காட்டின. 2005 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுத் தலைமையானது சமாதானக் கதவுகளை முற்றாக மூடியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான யுத்தத்தை தீவிரப்படுத்தியது. மூன்று வருடங்கள் இடைவிடாது ஓய்வின்றி மேற்கொண்ட கொடூர யுத்தம் மூலம் விடுதலைப் புலிகளது இராணுவ பலத்தை அழித்தது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்ததத்தின்; பொழுது இலங்கை அரச படைகளின் தாக்குதல்களில் 50,000 திற்கும் அதிகமான அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கணிப்பிட்டுள்ளன. 500,000 வரையான மக்களது பொருளாதாரமும் சொத்துக்களும் முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டனர்.

கடந்த 35 ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் 40,000 திற்கும் அதிகமான இளைஞர்களும், 150,000 திற்கு அதிகமான தமிழ் மக்களும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

சிறீலங்கா ‘அரசு’ என்பதனை முற்றிலும் நிராகரித்து இலங்கைத் தீவில் தனித் தமிழீழ அரசு ஒன்றின் உருவாக்கத்திற்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேச – பிராந்திய சக்திகளினால் மிகப் பெரும் சவாலைச் சந்தித்தது. தனிநாட்டை உருவாக்கும் போராட்டம் இந்திய மற்றும் மேற்குலக நலன்கள் சார்ந்த அணுகுமுறையால் தடைப்பட்டது. மேற்குலகம் தனது செல்வாக்கிற்கு உட்படாதவகையில் இலங்கைத் தீவில் இரண்டு அரசு உருவாக்கம் பெறுவதை விரும்பவில்லை.

இரு அரசுகள் இலங்கைத் தீவில் உருவாவது இந்திய நலன்களுக்கு எதிரானது என்பதே அதன் கொள்கை வகுப்பாளர்களால் உச்சரிக்கப்பட்டுவந்த மந்திரமாகும். ஏற்கனவே குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள தனது எல்லைப்புறத்தில் புதியதொரு அரசு தோன்றுவது சிக்கலானது என்கின்ற அச்சத்தினை இந்தியா வெளிப்படுத்தி வந்தது. இலங்கைத்தீவு இரண்டாக உடைவதைத் தடுத்து அதை தனது செல்வாக்குக்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. பிராந்திய வல்லரசான இந்தியா இந்த புதிய அரசு உருவாக்கத்தினை முற்றிலும் நிராகரித்து அதற்கான ஒரே சாத்தியமான வழியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியது.

மறுபுறம் மேற்குலக அணியின் சமகாலப் போக்கானது அரசுகளை உடைத்து புதிய அரசுகளை உருவாக்குதல் என்னும் அணுகுமுறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது. சிறீலங்கா அரசினை உடைப்பதிலும் பார்க்க அதனை மறுசீரமைத்து (state reformation) தாரளவாத சனநாயக வழிச்செல்லும் நாடாக உருவாக்குவதே அதனது புவிசார் நலன்களை கையாள்வதற்கான வியூகமாக கருதியது. இது சந்தைவழிப் பொருளாதாரம், பல்தேசியக் கம்பனிகளின் செல்வாக்கு என்பனவற்றின் ஊடாக இலங்கைத் தீவினை மேற்குலக அச்சில் இயங்கும் தரப்பாக உருமாற்றும் என்று மேற்குலகு நம்புகின்றது.

சீனா போன்ற பிற உலக சக்திகள் ‘அரசு’களை தாங்கிப்பிடிக்கும் உலகப் போக்கினைக் கொண்டுள்ளது. எனவே இந்தப் புறச்சூழலானது விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போரினை மிகுந்த இடரிற்குள் தள்ளியது.

2009 மே-18 இற்குப் பிற்பட்ட காலத்தில் – அதாவது தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் மேற் கூறிய பல்வேறு அக – புறச் சூழல்களால் அழிக்கப்பட்ட பலவீனமான காலகட்டத்தில் – தமிழ் மக்கள் முன்பாக பலவித அரசியல் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தாரளவாத சனநாயக மேற்குலகினை கையாள்வதற்காகவென பின்வரும்; வேலைத்திட்டங்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் முன்பாக முன்வைக்கப்படுகின்றன:

1. சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு உருவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு.
2. நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உருவாக்கப்பட்டுவரும் மக்கள் அவைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள்.

மறுபுறம், தாயகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைமைகள் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்பனவற்றை கைவிட்டு – வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முற்பட்ட – தோல்வியடைந்த பழைய அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தமிழ்த் தேசியததிற்கான மக்கள் முன்னணி இரு தேசங்களின் கூட்டான – ஒரு நாடு என்கின்ற நடைமுறைச் சாத்தியமான கோட்பாட்டினை முன்வைக்கின்றது.

சில தமிழ் அரசியல் கட்சிகள் 2009 மே-18 ற்குப் பின்னர் தமிழ் மக்களைத் தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி அவர்களது அடிப்படை அரசியல் கொள்கைகளை கைவிட்டு (35 வருடங்களுக்கு முன்னர் முயற்சி செய்து தோல்வியடைந்த) அதிகாரப்பகிர்வு பாதையையில் பயணிக்க தொடங்கியுள்ளன. இவ்வாறான நிலைப்பாட்டை வலியுறுத்துபவர்கள், இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களின் தனித்துவமான இறைமையை நாம் வலியுறுத்துவதனை கடும்போக்கு என்று விமர்சிக்கின்றனர்.

தமிழ் மக்களின் நலன்கள் அவர்களது சுயநிர்ணய உரிமை (இது தேசிய இனம் தனது தலைவிதியை தானே நிர்ணயிக்கும் உரிமை என்கின்ற விரிவான தளத்தில் உள்ளது என்பதுடன் அது தேசிய இனத்தின் உரிமைக்கான எல்லைகளை மட்டுப்படுத்த முயலவில்லை), பாதுகாப்பு, பொருளாதார செயற்பாடுகள் என்பனவற்றினை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்கின்ற அலகு பாதுகாக்கப்பட்டு, அதனது அரசியல் – பொருளாதார – பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உருவாக்கப்படும் இறுதித் தீர்வே தமிழ் மக்களின் அடிப்படையான தேவையாகும்.

இதனை சிறீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள ‘அரசு’ என்ற முறைக்குள் அடைய முடியாது. ஏனெனில், தமிழர்களை இந்தியாவின் தொடர்ச்சியாகப் பார்க்கும் மகாவம்ச மனநிலையில் சிங்கள தரப்பானது செயற்படுகின்றது. அது தமிழர்களை அச்சத்துடன் பார்க்கின்றது. இதனால் தமிழ்மக்களின் விட்டுக் கொடுப்புக்கள் அனைத்துமே தமிழ் மக்களை அழிக்கவே சிங்களதரப்பால் பயன்படுத்தப்படும் என்கின்ற வரலாற்று அனுபவமும் வெளிப்படையாகவுள்ளது. தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை அச்சத்துடன் பார்க்கும் சிங்கள தேசமும், சிங்கள ஆதிக்கத்தினை அச்சத்துடன் பார்க்கும் தமிழ்த் தேசமும் ஏதோவொரு புள்ளியில் சந்தித்தாலே முரண்பாடு களையப்படும்.

இந்தப் பின்னணியில் இலங்கைத் தீவின் இனச்சிக்கலை தணிப்பதற்கான வழிகளில் ஒன்றாக இருதேசங்கள் ஒரு நாடு என்கின்ற கோட்பாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினராகிய எம்மால் முன்வைக்கப்படுகின்றது. நாம்; சிங்கள தேசத்தின் நலன்களையும், சர்வதேச நலன்களையும், இந்திய நலன்களையும் கவனத்தில் எடுக்கும் அதே வேளையில் தமிழ் மக்களின் தேசிய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுடைய தமிழ்த்; தேசம் (nation) எனும் அந்தஸ்த்து காப்பாற்றப்படல் வேண்டுமென்பதிலும் அவ்வந்தஸ்த்து சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

தாயக நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, பண்பாடு, பொருளாதாரம், தொடர்ந்தேர்ச்சியான வரலாறு என்பவற்றுடன் பிரிந்து செல்லும் உரிமையுள்ள அலகினை தேசம் என்று வகுக்கலாம். அது அரசு அதிகாரத்தினை தனித்தோ, கூட்டாகவோ வைத்திருக்கும் தார்மீக அரசியல் உரிமையினைக் கொண்டதாகும். அதுவே ஒரு இனத்தின் நீண்டகால அரசியல், பொருளாதார மேம்பாட்டிற்கும், பாதுகாப்புக்குமான வழியாகவும் அமையும். அத்துடன் இலங்கை எனும் அரசு(நாட்டு)க்குள் சிங்கள தேசத்தின் சமபங்காளிகளாக தமிழர்; தேசம் இயங்கும் உரிமை வேண்டும் என்பதே இதன் அடிப்படை தர்க்கமாகும். இங்கு அரசின்(நாட்டின்) இறைமை, நலன்கள் என்பன இரு தேசங்களினதும் நலன்களின் கூட்டாக வெளிப்படும். இரு தேசங்கள் ஒரு நாடு என்ற ஏற்பாடானது இந்தியா கொண்டுள்ள, இலங்கை அரசு உடைவது பற்றிய பீதிக்கும், மேற்குலகின் தாரளவாத சனநாயக பொறிமுறை பற்றிய எதிர்பார்ப்பிற்கும் முரணற்றதாகும். இது இலங்கைத் தீவில் ஸ்திரநிலையை தோற்றுவிக்கும் அதேவேளையில் இரு தேசங்களினதும் உறவுகள் வளர்க்கப்படுவதற்கான சூழலை உருவாக்கும் நவீனத்துவமான சிந்தனையாகும்.

இதற்கு மேலதிகமாக பிராந்திய நலன்களின் அடிப்படையில் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சர்வதேச சக்திகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கு காரணம் ஸ்ரீலங்காவின் வெளிவிவகாரச் செயற்பாடுகள் சில வல்லரசு சக்திகளின் நலன்களுக்கு விரோதமான போக்கை கொண்டுளமையாகும்.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தமது அடிப்டை கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமிழர்களது பிரச்சினையை கையில் எடுக்கும் பொழுது தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும்.

தீர்வுத் திட்டம்

மேற் கூறிய தர்க்கத்தின் அடிப்படையில் “தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு” என்பதை இனப்பிச்சினைக்கான தீர்வுத்திட்டமாக தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்மொழிகிறது.

தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் செயல்முறை

கொள்கை அடிப்படைகளில் இருந்து வழுவாது தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்ப் புத்திஐPவிகள், சட்டவல்லுனர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடைய ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடனேயே தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போகும் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட அரசியல் முன்னகர்வுகளை த.தே.ம.மு மேற்கொள்ளும்.

சர்வதேச சமூகத்தின் பொறுப்பு

தமிழர் தாயகத்தில் 2006 – 2009 மே வரை இடம் பெற்ற இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்த மனிதாபிமானத் தலையீடு என்ற அடிப்படையில் கூட தலையிடுவதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டது. அதற்கு அது கூறிய காரணம் விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாத அமைப்பு’ என்றும் அவ்வாறான அமைப்புக்கு எதிராக ஒரு ‘அரசு’ செயற்படுவதற்கு எதிராக செயற்பட முடியாதெனவும் கூறி அமைதியாக இருந்தது.

தமிழ் இனத்தின் பாதுகாப்புக் கவசங்கள் அழிக்கப்பட்டுள்ள இன்றய நிலையிலும் கூட தமிழ் பேசும் மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ண உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், ஆகிய அடிப்படையிலான கொள்கைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐனநாயக ரீதியாக போராட முற்படும் தமிழ் மக்களின் போராட்டத்தை மீண்டும் நசுக்கவே அரசு முயல்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக் கவசம் இன்றி நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ள தமிழ் தேசத்தினை பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு (moral Responsibility) சர்வதேச சமூகத்திற்கு உண்டு.

தோல்வியடைந்த அரசாக சர்வதேச அமைப்புக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்ரீலங்கா அரசினால், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை நோக்கிய எமது ஐனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் நசுக்கபடுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்தற்கு உண்டு. எமது ஐனநாயக ரீதியான அரசியல் போராட்டத்தினை நோக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும், அப்போராட்த்திற்கு அவர்களது ஆதரவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.

அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கம்;

அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தனிமனிதனுடய பேச்சுச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்ற வகையில் ஸ்ரீலங்காவின் அரசியல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள 1983 ம் ஆண்டின் 6 ம் திருத்தச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழர் தயாகத்தில் திட்டமிட்ட சனத்தொகை விகிதாசார மாற்றம்

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்திலுள்ள சனத்தொகை விகிதாசாரத்தினை திட்டமிட்ட முறையில் மாற்றியமைப்பதும், தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டை துண்டிப்பதுமான சிங்களப் பேரினவாதத்தின் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்த்தல்.

முஸ்லிம் மக்கள்

தமிழ் தேசியத்திற்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது தெளிவானதும், திட்டவட்டமானதுமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரு தரப்பாக இருந்து எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடாகும்.

தமிழர்களை போலவே முஸ்லிம்களும் தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும், தமிழர் தாயகததில் தமிழர்களுடன் இணைந்து வாழ்பவர்கள் என்ற அடிப்படையிலும், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் தங்களின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கின்ற உரிமையும், பொறுப்பும் முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு உண்டு.

பரந்துபட்ட தமிழ்த் தேசியத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இருக்கவும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்குள் இவ்விரு சமூகத்தினரும் பலியாகாமல் இருக்கும்படியான ஒற்றுமையை வலியுறுத்தி செயற்படுவோம்.

உடனடி மனிதாபிமானத் தேவைகள்

கடந்த 30 ஆண்டுகாலத்தில் தமிழ்த் தேசத்தினை இல்லா தொழிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் சிதைக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களது வாழ்வையும், பொருளாதாரத்தினையும் சமாந்தரமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டியது அவசரமான, அவசியமான தேவையாக உள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பே தங்களது பொருளாதார, பண்பாட்டுத் தனித்துவங்கைளை பேணும் வகையில் தமது புவியியல் பிரதேசத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்கட்டுமானம் போன்ற பணிகளுக்கு தலைமை தாங்க வேண்டுமென்ற கோட்பாடு சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ் பேசும் தரப்புக்கே இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் மனிதப் பேரவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகளை கையாளுவதற்கான வேலைத்திட்டங்களை தமிழ், முஸ்லீம் தரப்புக்கள் இணைந்து தலைமை தாங்க வேண்டும்.

மேற் கூறிய திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றபோது அந்தந்தப் பிரதேச மக்களின் முழுமையான பங்களிப்புடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகாளக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தல்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக் கட்டிடங்கள், குடிமனைகள், ஆகியவற்றில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தினரை வெளியேற்றவும் பொது மக்களது பாவனைக்கு அனுமதிக்கவும் நடவடிக்கை எடுத்தல்.

தமிழ் மக்களின் அச்சமற்ற இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற ஸ்ரீலங்கா அரச படைகள் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து விலக்கிக் கொள்ள(withdrawal) உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

35 ஆண்டுகாலத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு காரணமாக இருந்த ‘அவசர காலச்சட்ட விதிகள்’, ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என்பவற்றை நீக்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுத்தல்.

அரசியல் கைதிகள்

சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பின் அடிப்படையிலான விடுதலையை பெற்றுக் கொடுக்க பாடுபடுதல்.
சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு புறம்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

காணாமல் போனவர்களது பிரச்சனை தொடர்பில் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்தல்.

தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள், கைதுகள், பயமுறுத்தல்கள், ஆட்கடத்தல் என்பனவற்றை தடுத்து நிறுத்தப் பாடுபடுதல்.

இனப் படுகொலைக்கு எதிராக நீதிபெறல்

தமிழ் மக்கள் மீது இனப் படுகொலை, மற்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. இந்தக் குற்றங்கள் தொடர்பாக நீதி விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என்பதுடன் அவ்வாறான விசாரணைகளுக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளளோம்.

தமிழ்த் தேசத்தின் பொருளாதார அபிவிருத்தி

அபிவிருத்திக் கொள்கைகளின் அடிப்படைகள்

தமிழ் தேசத்திலுள்ள அரைவாசிப் பகுதியினராகிய பெண்களின் மறைந்துள்ள ஆளுமையை வெளிக் கொணர்ந்து அவர்களை அரசியல், சமூக, பொருளாதார, அபிவிருத்தி நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க வாய்ப்பளித்தல்.
தமிழ்த் தேசத்தின் சமூகக் கட்டமைப்புக்களில் புரையோடிப் போயுள்ள சாதியக் கருத்தியலையும் நடைமுறைகளையும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தல்.

எமது தாயகத்தின் அபிவிருத்தித் திட்டங்களை சூழல்ச் (பௌதீக, உயிரியல், தாவர வளங்கள்) சமநிலையை பேணும் வகையில் மேற்கொள்ளல்.

எமது தேசத்தின் பண்பாட்டுத் தனித்துவங்களையும், பாராம்பரியங்களையும் காலத்திற்கேற்ப பேணும் வகையில் அபிவிருத்தியை மேற்கொள்ளல்.

தமிழர் தாயகம் செல்வம் கொழிக்கும் கடல் வளத்தையும், வளமான விவசாய நிலப்பரப்பையும், கனிம வளங்களையும் கொண்டதாய் உள்ளது. இந்த வளங்களை எமது மக்கள் வேலை வாய்ப்பும், உயர்ந்த மட்ட வருவாயும் பெறும் வகையில் உச்சமாகப் பயன்படுத்துதல். அதற்கான தந்திரோபாயத்தையும் கால எல்லையையும் வகுத்து தமிழ்த் தேசத்தின் நலன்களை முன்னிறுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளல்.

பிற சக்திகள் எமது தாயகத்தின் வளங்களை சந்தையூடாகவோ அல்லது அரச அதிகாரத்தினூடாகவோ எமது தேசத்திற்கு பாதகமான முறையில் பயனபடுத்துவதனை அனுமதிக்க முடியாது. எங்கள் மண்ணில் எங்கள் காலில் நின்று பேண்தகு அபிவிருத்தியை(sustainable development) ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை படிப்படியாக உயர்த்துதல்.

கொழும்பை மையப்படுத்தியதாக அல்லாத தமிழர் தாயகத்தை மையப்படுத்திய பொருளாதார கட்டுமானத்தை ஊக்குவித்தல். கொழும்பில் இருந்து தாயகப்பகுதியை நோக்கிய பொருளாதார நகர்வை ஊக்குவித்தல்.

எமது தேசத்தின் அபிவிருத்தியின் இலக்குகளையும், நெறி முறைகளையும், திட்டமிடுவதற்கும், செயற்படுத்துவதற்குமாக கல்விமான்கள், சிந்தனையாளர்கள், துறைசார் வல்லுனர்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசத்தின் அனைத்து தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் உட்பட்ட பரந்த பிரதிநிதித்துவத்தினை கொண்ட அதிகாரசபை ஒன்றை உருவாக்கப் பாடுபடுவோம்.

புலம்பெயர் மக்களது பங்களிப்பு

அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது ஒவ்வொரு கட்டத்திலும் இறுதி முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் எமது தேசத்தின் பிரிக்க முடியாத அங்கமானதும், மிக முக்கியமான வளமாகவும் இருக்கின்ற புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் ஆலோசனைகள் பெறப்படும்.

சிறீலங்காவின் இனவழிப்பு நடவடிக்கைகளால் பேரிழப்பைச் சந்தித்த எம்மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய உழைப்பதோடு அவர்களை நீண்டகாலத்தில் அவர்களது சொந்தக் கால்களில் நிற்க வைப்பதற்கான வேலைத் திட்டத்தை புலம்பெயர் உறவுகளின் துணையோடு திட்டமிட்டு மேற்கொள்வோம்.

தமிழர் தாயகப் பிரதேசத்தின் வேலைவாய்ப்பு, பொருண்மிய மேம்பாடு மற்றும் வளங்களை பாதுகாக்கும் விடயங்களில் நீண்டகால நலன்களின் அடிப்படையில் புலம்பெயர் மக்களின் முதலீட்டை பொருத்தமான இடங்களில் ஊக்குவிப்போம்.

போர் அனர்த்தங்களால் உடல் உள ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உடனடி நீண்ட, கால மருத்துவ தேவைகளை எதிர் நோக்கும் எமது உறவுகளுக்கு அத்தியாவசிய தேவைகளை புலம் பெயர் உறவுகளின் துணையோடு மேற்கொள்ளுதல்.

நீண்டகால பொருளாதாரத் தடையாலும் போராலும் பாதிக்கப்பட்ட கடற்றொழில், விவசாயம், சிறு கைத் தொழில், வர்த்தகம், போக்குவரத்துச் சேவை, போன்ற தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு பாதிப்படைந்தவர்களுக்கு உரிய நட்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு அவர்கள் தமது தொழில்களை மீளத் தொடங்குவதற்கான ஊக்குவிப்புக்களை புலம் பெயர் மக்களின் உதவியோடு மேற்கொள்ளுவோம்.

பல்லாயிரமாகிவிட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினதும்(woman headed families), தாய் தந்தையரை இழந்து நிர்க்கதிக்குள்ளாகி நிற்கும் எமது பிஞ்சுகளினதும் எதிர்கால மேம்பாட்டிற்கான வழிவகைகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள எமது மாணவர்களின் கல்வித் தராதரத்தை மேம்படுத்த புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளுடன் அவர்கள் வாழும் நாடுகளினதும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களினதும் உதவிகளைப் பெற்று உழைப்போம்.

தமிழக மக்களுடனான உறவுகள்

தமிழக மக்களுடன் இணைந்து எமது மக்களது நீதியான அரசியல் சமூக பொருளாதார மேன்மைக்காக பாடுபடுவோம். தமிழக உறவுகளின் துணையுடன் இந்தியாவின் ஏனைய மாநில மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் சமூக அமைப்புக்களுடனும் உறவை வளர்த்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிக் கொணர்ந்து நீதியான தீர்வை அடைய அவர்களது ஆதரவை பெற உழைப்போம்.

எமது மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை. எமது மக்களின் நலன்களுக்கு மேற்குறித்த அந்தஸ்த்து அடைப்படையானது. நாம் சிங்கள தேசம், இந்தியா உட்பட்ட சர்வதேச சமூத்தின் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, எமது தேசத்தின் நலன்கள் பேணப்படும் வகையில் சிங்கள தேசத்துடனும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனும் ஆரோக்கியமான இராஐதந்திர உறவுகளை கட்டியெழுப்ப விரும்புகின்றோம்.

மேற் கூறப்பட்ட தீர்மானங்களை பூரணமாகச் செயல்வடிவில் சாதிக்கும் நோக்குடன் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினராகிய நாம் உறுதியுடன் உழைப்போம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஒரே கொடியின்கீழ் ஒன்றிணைந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எமக்கு அமோக ஆதரவை வழங்க வேண்டுமென தமிழ் பேசும் மக்களை நாம் உரிமையுடன் அறைகூவி அழைக்கின்றோம்.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
19-03-2010

(Visited 38 times, 6 visits today) }
You can leave a response, or trackback from your own site.

மேலதிக செய்திகள்
மார்ச் 19th, 2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக