திங்கள், 22 மார்ச், 2010

தலையங்கம்: ஏன் இந்தத் தயக்கம்?



காலாவதியான மருந்துகளை மீண்டும் புதிய தேதி அச்சிட்டு, மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்ததாக அண்மையில் சென்னையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காவல்துறை அறிவிப்பும், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் நடவடிக்கையும் சரியானதாக இருந்தாலும்கூட, இதில் வெளிப்படாத அல்லது மறைக்கப்படும் ரகசியங்கள் பல இருக்கவே செய்கின்றன.இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வழக்க முறை பற்றிக் குறிப்பிடுகையில், கொடுங்கையூர் அருகே குப்பைமேட்டில் கொட்டப்படும் மருந்து மாத்திரைகளை எடுத்துவந்து அதன் மீது புதிதாகத் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகளை அச்சிட்டு, புத்தம் புதிதாக (அதாவது, மருந்துக் கடைக்காரர்களே ஏமாறுகிறவிதத்தில்) மருந்துக் கடைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலங்களைக் கடந்து செயல்படும் கும்பல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதைப் போல மாத்திரைகள் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில்கூட கிடைப்பதில்லை என்கிறபோது, இந்த மோசடிப் பேர்வழிகளுக்காக மட்டும் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது என்பது முதல் தகவல் அறிக்கைக்கு வேண்டுமானால் வலு சேர்க்குமே தவிர, வெறும் வாதத்திற்குக் கூட எடுபடாது. இத்தகைய மாத்திரை, மருந்து, டானிக்குகளை குறிப்பிட்ட கும்பல் ஒவ்வொரு மருந்துக்கடைக்கும் சென்று, சேகரித்து வந்து, குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வைத்து, இவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதிகளை மாற்றி அச்சிடுதல் அல்லது புதிய லேபிள் ஒட்டுதல் ஆகிய பணிகளைச் செய்து, மீண்டும் மறுசுழற்சிக்காக மருந்துக்கடைகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பதும்கூட, செலவுமிக்க நடைமுறைதான். மோசடி செய்பவர்களுக்கு இதில் அதிக லாபம் கிடைக்காது.காலாவதியான மருந்துகளை மீண்டும் சந்தைக்கு அனுப்புவதை, மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்துக்கான மாநில அளவில் அல்லது தென்னிந்திய விற்பனை உரிமை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமே செய்ய முடியும். அவர்களை அடையாளம் காண்பதும் அரசுக்கு எளிது. அத்தகைய நபர்கள் யார் என்று கண்டறிவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்தான் இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வாக அமையுமே தவிர, வெறுமனே எல்லா மருந்துக்கடைகள் மீதும் சந்தேகத்தின் பலனைத் திருப்பிவிடுவதால் பயனில்லை.தமிழ்நாட்டில் 42,000 மருந்துக் கடைகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் குறிப்பிடுகிறார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் நகர்ப்புறங்களில் இருப்பவை. நகர்ப்புறங்களில் இருக்கும் 90 விழுக்காடு கடைகள் கணினி மூலம் ரசீதுகள் வழங்குபவை. கணினி திரையில் மருந்துகளின் இருப்பு மட்டுமன்றி, அவற்றின் காலாவதி தேதிகளும் தெரியும் வகையில் மென்பொருள் உள்ளன. காலாவதியான மாத்திரைகளை மருந்துக்கடைக்காரர்கள் தனியே பிரித்து வைப்பதும், அவற்றை தமக்கு விநியோகம் செய்த மொத்தக் கொள்முதல் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து அதற்கான தொகையைப் பெறுவதும் நடைமுறையில் உள்ளது. மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக் கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும் மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்? நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன? பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது? எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின்பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப்படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத்துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்? 42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே? அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?
கருத்துக்கள்

ஒவ்வொரு மாத்திரையிலுமே கெடுநாள் பதிவாகும் வரையில் இல்லையே என்ற மக்கள் உணர்வை வெளிப்படுத்தியதுடன் மோசடியின் மூல வித்து என்னவாக இருக்கும் என்றும் புரிய வைத்துள்ளீர்கள். இது வாலாயமான ஒன்றாக இருந்து ஏதோ வர வேண்டியது வராததால் தர வேண்டியதைத் தர வலியுறுத்தும் வகையில் இம் மோசடி பிடிபட்டிருக்கலாம். காலக் கெடு ஆன மருந்து மாத்திரைகளை மறு பயன்பாட்டிற்கு வராத வகையில் உடனே அழிப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். போலி மருந்துகள உலவினால் அதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு என அறிவிக்க வேண்டும். ஆசிரியவுரை எழுதியவருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 2:35:00 AM

politician/government officials/police they are basterds just for few dollars they are ready to give their mothers also.yes. Instead of honest loyalty to our nation they lending it to bribe it means they lending thier mothers.basterds

By ali
3/22/2010 12:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக