Last Updated :
சென்னை, மார்ச் 25: தமிழ்-ரஷிய கலாசார உறவை வளர்க்கும் புதிய முயற்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரம்பரிய நட்புறவு நிலவி வருகிறது. குறிப்பாக ஒன்றுபட்ட சோவியத் யூனியன் இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல், அறிவியல், கலாசாரம் என அனைத்து துறைகளிலும் மிகுந்த ஒத்துழைப்பும், நட்புறவும் நிலவியது.அதிலும் குறிப்பாக தமிழ்}ரஷிய கலாசார உறவில் சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ரஷிய அரசியல், அறிவியல், இலக்கிய நூல்கள் ஏராளமானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ரஷிய மொழி கற்பதற்காக இங்கிருந்து ஏராளமானோர் அந்நாட்டு அரசு சார்பில் மாஸ்கோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென தனித்துறை ஏற்படுத்தப்பட்டது.1987}ம் ஆண்டு சோவியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான இந்திய படைப்பாளிகளும், குறிப்பாக தமிழகத்திலிருந்து அதிக படைப்பாளிகளும் பங்கேற்றனர்.சோவியத் யூனியன் பிரிந்த பின், இத்தகைய உறவில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த சூழலில், தமிழ்}ரஷிய கலாசார உறவை வளர்ப்பதற்கான புதிய முயற்சிகள் இப்போது தொடங்கியுள்ளன.ரஷிய கலைவிழா: இந்திய}ரஷிய கலாசார நட்புறவுக் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் மே மாதம் தமிழகத்தில் ரஷிய கலைவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 25 ரஷிய கலைஞர்கள் தமிழகம் வர உள்ளனர். பாலே நடனம், ரஷிய நாட்டுப்புற நடனம், ஜிம்னாஸ்டிக், மேஜிக், பாரம்பரிய ரஷிய இசைக் கருவிகள் மூலம் இசை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சென்னையில் தொடங்கி, பின்னர் மாமல்லபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை, ஊட்டி ஆகிய நகரங்களில் ரஷிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். ரஷியாவில் திருவையாறு: இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 25 கலைஞர்கள் ரஷியா செல்ல உள்ளனர். சீர்காழி சிவசிதம்பரம் தலைமையிலான இக்குழுவினர் "ரஷியாவில் திருவையாறு' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.திரைத்துறையில் உறவு: சோவியத் யூனியன் இருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனம்பாள், முதல் மரியாதை, வேதம் புதிது என பல தமிழ்த் திரைப்படங்கள் ரஷிய மொழியில் "டப்பிங்' செய்யப்பட்டன. குறிப்பாக "தண்ணீர், தண்ணீர்' திரைப்படம் ரஷியாவில் 360 பிரதிகள் பிரிண்டிங் செய்யப்பட்டது. பின்னர் இதிலும் தேக்கம் ஏற்பட்டது.இப்போது தமிழ்த் திரைப்படங்கள் ரஷிய மொழியில் டப்பிங் செய்வது மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக "இந்திய}ரஷிய திரைப்பட பரிமாற்றக் குழு' என்ற அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது."இப்போது சந்திரமுகி படம் டப்பிங் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அசல், புன்னகை மன்னன் ஆகிய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு, ரஷியாவில் விரைவில் திரையிடப்பட உள்ளன.மேலும், இந்த அமைப்பின் மூலம் ரஷிய திரைப்பட பிரிவு விரைவில் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. அதன் பின்னர் ஏராளமான ரஷிய மொழி திரைப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்படும்' என்று இந்திய}ரஷிய நட்புறவுக் கழக பொதுச் செயலாளர் பி. தங்கப்பன் தெரிவிக்கிறார்.வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் தமிழக மாணவர்களுக்கு ரஷிய மொழியை கற்பிக்கவும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன், தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவை யாவும் தமிழ்}ரஷிய கலாசார உறவில் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*