ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு என இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அதை ஐபிஎல் ஏலம் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் 'அடுத்த வாரிசாக'த் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பில் ஏற்கெனவே 8 அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக 2 அணிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. பூனா அணியை ரூ.1,702 கோடிக்கு சகாரா நிறுவனமும், கொச்சி அணியை 5 நிறுவனங்கள் இணைந்த ரெண்டீஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. கடந்த முறை மும்பை அணியை சுமார் 800 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததுதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. இப்போது ஏலத்தொகை இரு மடங்காக எகிறியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த அணிகள் இரண்டு நிறுவனங்களுக்கும் சொந்தம்! அசுர வேக கிரிக்கெட்டாகக் கருதப்படும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் புரட்டி எடுத்துள்ளது என்னவோ உண்மைதான். அதற்காக கிரிக்கெட்டை இப்படிக் கோடிகளில் புரட்டி எடுப்பதுதான் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ஏற்கெனவே இதுபோன்ற கவுன்டி கிளப் அணிகள் உள்ளன. ஆனால், இதுபோல் ஆயிரம் கோடிக்கு அணிகள் அங்கு விற்பனை செய்யப்பட்டதில்லை. உலகம் முழுவதும் விளையாடப்படும் கால்பந்து போட்டிகளுக்கான அணிகள் கூட இத்தனை பெரிய தொகைக்கு ஏலம் போனதில்லை. ஐபிஎல் ஏலத்தைப் பார்க்கும்போது குதிரைப் பந்தயத்தில் குதிரைகளை நம்பி பணத்தைக் கட்டுவதுதான் நினைவுக்கு வருகிறது. அங்கு நிஜ குதிரைகள்... இங்கு கிரிக்கெட் குதிரைகள். ஐபிஎல் போட்டிகளால் கிரிக்கெட் வளர்ச்சியடையும் என்று வாதிடுவோர் உள்ளனர். ஆனால், அணிகளை ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள், பிரபலங்களுக்குக் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கமெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் மோகத்தைப் பயன்படுத்தி இதைப் புதுவிதத் தொழிலாகச் செய்து பார்த்தால் என்ன என்று நினைப்பதாகவே தோன்றுகிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு சுமார் 20 போட்டிகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் வந்த பிறகு சீசனுக்கு 50 போட்டிகளில் விளையாடுகின்றனர். ஆண்டுக்கு 100 போட்டிகளைத் தாண்டுகிறது. பணத்தை அள்ளித்தரும் ஐபிஎல் போட்டிகளே போதும் என, தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களே கருதும் சூழ்நிலை திணிக்கப்பட்டு வருகிறது. தேசிய அணியில் இடம்பெற்றால் கௌரவம் என்ற மனநிலையை ஐபிஎல் படிப்படியாக கபளீகரம் செய்து வருகிறது. ஏற்கெனவே ஆண்டுக்கு 50 லட்சம், 25 லட்சம், 15 லட்சம் என காண்ட்ராக்ட் பேசப்பட்டு லட்சத்தில் புரளும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த ஐ.பி.எல். கோடிகளை அள்ளிக் கொடுக்கிறது. இந்த வேளையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி அணியின் நிலையைப் பார்க்கும்போது வேதனையே ஏற்படுகிறது. அண்மையில் சம்பள பாக்கி, சிறப்பாக விளையாடியதற்கான ஊக்கத்தொகை உள்பட தலா நான்கரை லட்சம் ரூபாய் தரக் கோரி இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 22 பேரும் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மொத்தமே 1 கோடி ரூபாய்தான். அதுகூட கைவசம் இல்லாமல் தவித்தது இந்திய ஹாக்கி சங்கம். பின்னர், அணியின் ஸ்பான்சரான சகாரா நிறுவனம் தந்த நிதியை வைத்து பிரச்னையைச் சமாளித்தது. தேசிய விளையாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம் இது. இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் வறட்சியில் வாடும்போது கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இந்தப் பணமழை? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. அது ஒரு தனி அமைப்பு. அந்த அமைப்பின் இப்போதைய சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடிகளில். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற 'கம்பெனி', இந்திய அணி என்கிற பெயரில் கிரிக்கெட் அணியை வைத்துள்ளதே முரண்பாடானது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். விளையாட்டுக்கும் அது பொருந்தும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை இந்திய அரசே ஏற்று, கிரிக்கெட்டால் கிடைக்கும் பணத்தை மற்ற விளையாட்டுகளை மேம்படுத்தப் பயன்படுத்தினால் என்ன? கிரிக்கெட் இந்திய விளையாட்டு அல்ல; நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இல்லாதது அவமானகரமானது. இந்திய கிரிக்கெட் அணி ஏதாவது ஒரு கோப்பையை வென்றுவிட்டால் நாடாளுமன்றம் பாராட்டுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனர். மீடியாக்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டு புளகாங்கிதம் அடைகின்றன. கிரிக்கெட்டை போலவே மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு தாருங்கள் என நாடாளுமன்றமோ, குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சொல்வதில்லையே ஏன்? சம்பள பாக்கி கேட்கிறது ஹாக்கி; கோடிகளில் கொழிக்கிறது கிரிக்கெட். இந்தியாவின் ஏழை, பணக்கார வர்க்கம் போலவே இதுவும் இந்திய விளையாட்டின் இருமுகங்கள். மாற வேண்டும் இந்நிலை.
கருத்துக்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த விளையாட்டுத் துறை மூலமாக மாநில அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அணிகள் இடையேயான போட்டிகள் மூலம் இந்திய அணி மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வந்தால் விடிவு பிறக்கும். ஆனால், ஏலம் எடுத்துள்ள நிறுவனங்களையும் போக்கையு்ம் பார்க்கும் பொழுது அதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை என்பது புரிகிறது. எனவே, அரசு ஏதேனும் வகையில் கட்டுப்படுத்தினாலன்றி விடிவு பிறக்காது. விளையாட்டு ஆர்வலர்களின் குரலை எதிரொலித்த இராசாராமிற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 2:50:00 AM
3/25/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *