வியாழன், 25 மார்ச், 2010


தலையங்கம்: 'தீ'யவை தீய ​பயத்தலால்...கொல்கத்தா நகரில் பார்க் வீதியில் உள்ள 150 ஆண்டு பழமை வாய்ந்த 7 மாடிக் கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர்.​ இன்னும் பலரைக் காணவில்லை என்ற நிலையில்,​​ தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.​ காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.கொல்கத்தாவில் இதுபோன்ற பல அடுக்கு மாடிகளில் தீ விபத்துகள் நடப்பது வழக்கம்தான் என்றும்,​​ 2008-ம் ஆண்டு முதலாக இதுவரை இதுபோன்ற 10 தீ விபத்துகளில் பலஅடுக்கு மாடிகளில் நடந்துள்ளன என்பதற்காக இத்தகைய தீ ​ விபத்துகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.​ ஏனென்றால்,​​ இதுபோன்ற தீ விபத்துகள் பரவலாக எல்லா இடங்களிலும் நடந்துகொண்டே இருக்கின்றன.​ கடந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற தீ விபத்தில்,​​ வெளியேற வழியின்றி மாடியில் சிக்கிக்கொண்ட 9 பேர் இறந்தனர்.இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுவதற்கும் பலர் இறந்து போவதற்கும் காரணம்,​​ முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வடிவமைப்பு,​​ புதிய பாணி என்ற பெயரில் பொறியியல் வல்லுநர்கள் கட்டும் கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யாதிருத்தல்,​​ பழமையான கட்டடம் ஆகியவைதான்.கொல்கத்தாவில் தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் இரண்டு மாடிகள் அரசின் முறையான அனுமதியைப் பெறாமல் கட்டடப்பட்டவை என்பதும்,​​ பின்னாளில் இந்த அத்துமீறல் வரன்முறைப்படுத்தப்பட்டது என்றும் தற்போது சொல்லப்படுகிறது.​ குறைந்தபட்சம் வரன்முறை செய்து அங்கீகாரம் அளித்த நேரத்திலாவது,​​ இந்தக் கட்டடத்தில் தீவிபத்து நடைபெற்றால் என்ன நேரும்,​​ உள்ளே எத்தனை ​ பேர் இருப்பார்கள்,​​ அவர்கள் தப்பிச்செல்லப் போதுமான வழிகள் உள்ளதா,​​ வெளியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரக்கூடிய வழிகள் உள்ளதா என்றெல்லாம் ஆய்வு செய்த பின்னர்தான் அந்த அத்துமீறலை வரன்முறை செய்திருக்க வேண்டும்.​ ஆனால் அதிகாரிகள் தங்கள் நாற்காலியில் இருந்த இடத்திலேயே அனுமதி வழங்கியதால்தான் இன்று 24 பேர் இறந்திருக்கிறார்கள்.இந்த அனுமதியை வழங்கியவர்கள் யார் என்று ஆய்வு செய்ய வேண்டிய மேற்குவங்க முதல்வர்,​​ நிருபர்களிடம் கூறுகையில்,​​ எங்களால் முடிந்ததைச் செய்துவிட்டோம்.​ இனிமேல் கட்டடம் கட்டியவர்கள்தான் பொறுப்பு என்று சொல்லும்போது,​​ வியப்பாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.​ சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் கடைகள் பலவும் முறையான அனுமதியின்றி மேல்மாடிகள் உயர்த்தப்பட்டவை.​ ரங்கநாதன் தெருவில் ஒரு தனியார் கடையில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு,​​ சென்னையில் உள்ள எத்தனை கடைகளில் தீயணைப்புத் துறையினரும்,​​ மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு நடத்தி அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடங்களை முடக்கினார்கள்?​ கேட்டால் நீதிமன்றத் தடை என்கிற பதிலும்,​​ அரசு சட்டமியற்றி முறைப்படுத்திவிட்டது என்கிற பதிலும் கிடைக்கும்.​ அதுவா தீர்வு?அடுத்த விபத்து நடக்கும்போது இதுபற்றிப் பேசுவார்கள்.​ பின்னர் மீண்டும் மறக்கப்படும்.​ இன்று கட்டடப்படும் பல கட்டடங்கள்,​​ ஷாப்பிங் மால்,​​ பலஅடுக்குமாடிக் கடைகள் என பலவும்,​​ புதிய தொழில்நுட்பம்,​​ புதிய பாணி என்ற பெயரில் காற்று புகாதபடி,​​ ஜன்னல்கள் இல்லாமல் குளிரூட்டு வசதியை மட்டுமே கொண்டிருப்பவை.​ மின்தடை ஏற்பட்டால் இந்தக் கட்டடங்களில் உள்ளே இருக்கவும்கூட முடியாது.​ அப்படியான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால்,​​ தீயினால் கருகிச் சாவோரைக் காட்டிலும்,​​ வெறும் புகையினால் மூச்சடைத்து இறந்துபோவோர்தான் அதிகமாக இருப்பார்கள்.​ ஒரு கட்டடத்தில் தீ விபத்து நேர்ந்தால்,​​ இரண்டு நிமிடங்களில் எல்லோரும் வெளியேறும் வகையில் வழி அமைக்க வேண்டும் என்பதை யாருமே வலியுறுத்துவதில்லையே,​​ ஏன்?மேலும்,​​ இத்தகைய விபத்துகள் நடக்கும்போது,​​ அக்கட்டடத்தின் தன்மை,​​ தீயின் தீவிரம்,​​ தீ பரவிய விதம் குறித்து பெரிய அளவுக்கு விவாதங்கள் நடப்பதில்லை.உலக வர்த்தக மையத்தின் மாடி மீது,​​ அல்காய்தா தீவிரவாதிகளின் விமானங்கள் மோதியபோது,​​ கட்டடம் முழுதுமே சரிந்து கீழே அமர்ந்ததற்குக் காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்க பொறியாளர்களிடையே பெரும் சர்ச்சையும் விவாதங்களும் நடைபெற்றன.​ விமானம் மோதி,​​ எரிந்து வெடித்த வெப்பத்தில் கட்டடம் உள்ளடங்கிய நிலையில் அமுங்கியதற்குக் காரணம்,​​ விமானத்தில் இருந்த பெட்ரோல் முழுவதும் எரிந்தபோது ஏற்பட்ட 650 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால்,​​ கட்டடத்தைத் தாங்கிய இரும்புத்தூண்கள் உருகியதுதான் என்றும்,​​ அதனால் கிடையாது என்றும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது.​ ​இந்தியாவில் அத்தகைய விவாதங்கள் நடப்பதில்லை.​ ஏனென்றால்,​​ அத்தகைய விவாதங்களால் தவறு யாருடையது என்பது வெளிப்பட்டுவிடுமே!​ சில அரசியல் கட்சிகளுக்கு சங்கடமாக இருக்குமே!​ சில அதிகாரிகளும்,​​ அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டி வருமே...!மேலும்,​​ பழமையான கட்டடங்களில் இத்தகைய விபத்து நடக்கும்போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்படவே செய்கின்றன.​ இன்று இந்தியாவில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு மேலும் உயரமான புதிய கட்டடம் கட்டி,​​ பணம் பார்ப்பது என்பது எல்லாத் தரப்பினரிடத்திலும் ஒரு நோய் போல தொற்றிக்கொண்டிருக்கிறது.​ பழமை என்பது பண்பாட்டுச் சின்னம் என்கிற எண்ணம் இருப்பதில்லை.​ தனி நபர் என்றால் மிரட்டி வெளியேற்றலாம்.​ ஆனால் இப்படியான பலஅடுக்கு வணிக வளாகங்களில் கடைக்காரர்களும்,​​ குடியிருப்போரும் நீதிமன்றம் செல்வதால்,​​ அவர்களை வெளியேற்ற முடிவதில்லை என்கிறபோது....இப்படியாக திடீரென்று தீ புறப்படுகிறது.​ திடீரென்று மின்கசிவு ஏற்படுகிறது.​ ​இத்தகைய நிகழ்வுகளில் வெறுமே கடைகள் மட்டுமே காலியாவதில்லை.​ சில உயிர்களும் பலியாகின்றன என்பதால்,​​ இந்தத் தீ விபத்துகளை ஒரு குற்றப் பார்வையுடன் அணுகவும்,​​ விசாரிக்கவும் வேண்டும்.​ இதை வெறும் தீ விபத்து என்பதாக மட்டுமே முடிந்துபோக விடுதல் கூடாது.மேலும்,​​ ஒவ்வோர் அடுக்கு மாடிக் கட்டடங்களையும் மறுஆய்வுக்கு உட்படுத்தவும்,​​ தீ விபத்து நேரிட்டால் வெளியேறும் வழிகளை ஏற்படுத்துவதை கட்டாயமாக்குவதும் எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டிய கடமை.​ அதைச் செய்யாதவரை தீ விபத்துகள் தொடரும்.​ பலர் இறந்துகொண்டேதான் இருப்பார்கள்.
கருத்துக்கள்

தீ நிகழ்வுகளைக் குற்றப் பார்வையுடன்அணுக வேண்டுமம் என்பதும் ஒவ்வோர் அடுக்கு மாடிக் கட்டடங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் மிகச் சரியான கருத்துகள். ஆனால் அரசியல் செல்வாக்கால் இவற்றைத் தடுப்பர். எனவே, மறு ஆய்வுச் சான்றிதழ் பெற்று அதனைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அவசரச்சட்டம் கொணர வேண்டும். இத்தகைய சான்றிதழ் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொது மக்கள் செல்ல வேண்டும். பிற வற்றைப் புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இனி வருங்காலங்களில் இத்தகைய தீ நேர்ச்சிகளைத் தவிர்க்கலாம்; ‌நேர்ந்தாலும் உயிர்ப்பலிகளிலிருந்து மீளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக