திங்கள், 22 மார்ச், 2010

இந்த வாரம் கலாரசிகன்



சில வேளை சில கேள்விகள் சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. தவறு நேர்ந்துவிட்டது என்பதை ஒத்துக்கொண்டு திருத்துவது என்பது, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சாதிப்பதைவிடச் சிறந்ததாகத்தானே இருக்க முடியும்?எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி "குமுதம்' வார இதழில், "கம்பன் ஏமாந்தான்' என்கிற தலைப்பில் செம்மொழி மாநாடு பற்றி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பன்னாட்டு அறிஞர்கள் கூடும் ஒரு தமிழ் மாநாட்டில் கம்பனுக்கு இடமில்லாமல் போவது என்பது நிலவில் களங்கம்போலக் கண்ணை உறுத்துகிறதே...செம்மொழி மாநாடு என்பதால் சங்க இலக்கியம் மட்டும்தான் கருப்பொருள் என்று கொள்வதில் அர்த்தம் இல்லை. காரணம், சங்க இலக்கியம் என்று அறியப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார் தவிர ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, மூதுரை போன்றவை காலத்தால் 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவைதானே!உத்தரபுராணம் என்கிற வடமொழிக் காவியத்தின் தழுவலான 10-ஆம் நூற்றாண்டு சீவகசிந்தாமணி செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும்பொழுது, சாதியத்தை வலியுறுத்தும், பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறாத வளையாபதியும் குண்டலகேசியும் செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும்பொழுது கம்பகாவியம் மட்டும் புறந்தள்ளப்படுவது என்ன நியாயம்? அவர்களுக்கு கம்பன் மீதுள்ள கோபமெல்லாம், அவர் ராமகாதை எழுதிவிட்டாரே என்பதால்கூட இருக்கலாம்.சமய இலக்கியம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தமிழ் காப்பற்றப்பட்டிருக்காது. தமிழே காப்பாற்றப்படாமல் போயிருந்தால் சங்க இலக்கியம் காலத்தால் அழிந்துவிட்டிருக்கும் என்கிற கூற்றை முதல்வர் உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தான். ஆனால் உண்மை அதுதானே! இந்தச் சந்தர்ப்பத்தில் முனைவர் தெ.ஞானசுந்தரம் என்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். "தீ பரவட்டும்' என்று கூறி அறிஞர் அண்ணா, கம்பகாவியத்தை எரிக்கத் தலைப்பட்டபோது இலக்குவனார் ஒரு கடிதம் எழுதி, அதில், "ஒரு தமிழ்ப்புலவனின் தமிழ்க் கவிதையை எரிக்கிறீர்களே, நியாயமா?' என்று வருத்தப்பட்டாராம். கம்பனின் கருப்பொருளை மறந்துவிட்டு, அவரது தமிழையும் கவிதை நயத்தையும் ரசிக்கக்கூட முடியாது என்று முரண்டுபிடித்தால், தமிழ் அன்னை முகம் சுளிப்பாளே... தமிழ் மாநாடு முழுமைபெறாதே...இவர்களுக்கு கவிச்சக்ரவர்த்தி கம்பனைப் பிடிக்கிறதோ இல்லையோ கம்பனுக்குத் திருக்குறள் பிடிக்கும். சங்க இலக்கியம் பிடிக்கும். கம்பகாதை முழுவதும் பரவிக்கிடக்கின்றன அதற்கான சான்றுகள். ஆரண்ய காண்டம் சூர்ப்பனகை படலத்தில், முதல் பாடலில், கோதாவரி நதியின் பொலிவினை விளக்குவார் கம்பர். அதற்கு அவர் உவமை கூறுவது எதைத் தெரியுமா? சங்கத் தமிழை ஐயா, சங்கத் தமிழை!""புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்கு ஆகிஅவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவிசவி உறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் (218) மேலே குறிப்பிட்ட பாடலில் "அவிஅகத் துறைகள் தாங்கி' என்பது அகப்பொருள் இலக்கண வகைகளையும், "ஐந்திணை நெறி அளாவி' என்பது ஐந்திணை இலக்கணத்தையும் அல்லவா குறிப்பிடுகின்றன. சங்கத் தமிழை அல்லவா கம்பன் உவமையாக்குகிறான். அந்தக் கம்பனையா செம்மொழி மாநாட்டில் இருட்டடிப்பு செய்வது?"கம்பரசம்' எழுதி கம்பனை கடுமையாக விமர்சித்த அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு கம்பனுக்குத் தரவேண்டிய உரிய இடத்தை அளித்ததுடன், சென்னை கடற்கரையில் சிலையும் வைத்து அந்தக் கவிச்சக்ரவர்த்தியின் புகழ்பாடத் தவறவில்லை. செம்மொழி என்கிற சாக்கில் கம்பனுக்குக் கதவு சாத்தப்பட்டால் தமிழ்மொழி அதை ஏற்றுக்கொள்ளுமா?முதல்வரின் பார்வையில் இருந்து எதுவுமே தப்பாதே... இது எப்படித் தப்பியது? தெரிந்துதான் கம்பனை அவர் தவிர்த்தாரா? எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு செம்மொழிக் கொடியேற்றி குதூகலிக்க வேண்டும் என்று கனவுகாணும் செம்மொழி மாநாட்டுத் தலைவர் கம்பனை மட்டும் அகற்றி நிறுத்த முற்பட்டால், நஷ்டம் கம்பனுக்கல்ல... செம்மொழி மாநாட்டுக்குத்தான்.காலம் கடந்துவிடவில்லை. கம்பனுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்படும் என்கிற நம்பிக்கை இன்னும் பொய்த்துவிடவில்லை. அதையும் மீறி கம்பன் புறக்கணிக்கப்பட்டால் கம்பகாவியம் சொல்லுமே அதுபோல், "விதியின் பிழை' வேறென்ன?******சமய இலக்கியம் பற்றிய பேச்சு வந்தபோது சட்டென நினைவுக்கு வந்தது இன்னொரு விஷயம். யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ சமயம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, தமிழர்தம் பண்பாடு, தமிழனின் கட்டடக்கலை, தமிழனின் இசைநுட்பம், தமிழனின் கலை உணர்வு என்று எதுவுமே இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதுதான் உண்மை.தமிழன் உயர்ந்த நாகரிகமும், பண்பாடும் உள்ளவனாக மட்டுமன்றி, தலைசிறந்த பொறியியல் நுண்ணறிவும் பெற்றிருந்தான் என்பதற்கு நமது கோயில்கள் சாட்சி பகர்கின்றனவே... வானளாவிய கட்டடங்கள் பற்றி மேலை நாட்டினர் இப்போது பேசுவதை, எந்தவித விஞ்ஞான உதவியும் இல்லாத காலத்தில் தமிழன் பெற்றிருந்ததன் எடுத்துக்காட்டுகள்தானே நமது ஆலய கோபுரங்கள்.நமது மிகப்பெரிய குறைபாடு எதையுமே முறையாக ஆவணப்படுத்தாததும், இருப்பதைப் பாதுகாக்கத் தவறியதும். கூத்துமரபு, இசைமரபு, சிற்ப - ஓவிய மரபு, கட்டடக்கலை மரபு ஆகியவை குறித்த விரிவான பதிவுகள் தமிழில் இல்லை என்கிற உண்மையை நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும். தமிழகத்தின் ஓவியக்கலை மரபு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. சங்ககாலத்தில் நமது முன்னோர்கள் ஓவியக்கலையில் கொண்டிருந்த ஒப்பற்ற ஈடுபாட்டை சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றன. பிற்காலத்தில் பல்லவ, பாண்டிய மன்னர்களும், சோழப் பேரரசர்களும் ஏராளமான ஓவியங்களைத் தீட்டச் செய்து அந்தக் கலையைப் போற்றி வளர்த்தனர். ஓவியக் கலையில் உயர்ந்த நிலைகளை விளக்கும் சித்தன்னவாசல், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்கள், அஜந்தா ஓவியக்கலை மரபுகளின் தொடர்ச்சியாகவும் இணையாகவும் கருதத்தகுந்தவை.இன்று எஞ்சியிருப்பவை ஒருசில பாறை ஓவியங்களும், ஆலயங்களில் காணப்படும் சுவரோவியங்களும்தான். இந்த எஞ்சியுள்ள சுவரோவியங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் "தாவரங்கள், மக்கள் மற்றும் சூழலிய மையம்' என்கிற அமைப்பு பாரதிபுத்திரனை சுவரோவிய ஆவணத்திட்ட முதன்மை ஆய்வாளராகக் கொண்டு ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. ஓவியங்களை ஆவணப்படுத்துவது, எஞ்சியுள்ளவற்றைப் பாதுகாப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை மையத்தின் குறிக்கோள்கள்.தமிழகச் சுவரோவியங்கள் குறித்த கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை "சித்திரமாடம்' என்கிற தலைப்பில் தொகுத்து பாரதிபுத்திரன் புத்தகமாக்கியிருக்கிறார். சுவரோவியங்கள் பற்றிய முழுமையான ஆவணப்பதிவு மட்டுமல்ல, சராசரி ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகளை உள்ளடக்கிய அற்புதமான தொகுப்பு இது. பாரதிபுத்திரனுக்கு நாம் நன்றிகூறக் கடமைபட்டிருக்கிறோம்.******கவிஞர்களில் இரண்டு வகை. கவிதை எழுதுபவர்கள் ஒருவகை. கவிதையாகவே வாழ்பவர்கள் இன்னொரு வகை. இவற்றில் இரண்டாம் வகை கவிஞர் தமிழ் இயலன்' என்கிற சூரிய சந்திரனின் அணிந்துரை என்னை நிமிர்ந்து உட்காரவைத்தது. தபாலில் வந்திருந்த "தேடித் திரிகையில்' என்கிற கவிதைத் தொகுப்பின் பின் அட்டையில் இருந்த கவிஞர் தமிழ் இயலன் பற்றிய குறிப்பு எனது ஆர்வத்தை மேலும் அதிகரித்தது."தமிழ் இயலன், தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்று மொழிகளிலும் முதுகலைப் பட்டம் பெற்று தனித்தன்மை பெற்றாலும், தமிழ்த்தன்மை மாறாதவர். தன் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயிற்றுவிக்கும் தமிழ்த் துணிச்சல் மிக்கவர் என்பதுதான் அந்தக் குறிப்பு. தமிழ் இயலனின் மூன்றாவது தொகுப்புதான் "தேடித் திரிகையில்'. அதில் முதல் கவிதை "கிறுக்கல்கள்' படித்து முடித்தேன். அவை கிறுக்கல்கள் அல்ல. மனதில் நிலைத்துவிட்ட செதுக்கல்கள்.சபிக்கப்பட்டசெங்கற்களால்நிரம்பியவைகுழந்தைகளின்கிறுக்கல் இல்லாதவீட்டுச்சுவர்கள்பிஞ்சு விரல்கள்அஞ்சிக் கிடக்கும்இல்லங்களில்பிகாசோ மறுபடியும்புதைக்கப்படுகிறான்சுவர் மறுத்தாலும்தாள் கொடுத்தாவதுகிறுக்க விடுங்கள்வெளிப்படட்டும் மனம்வெற்றியடையட்டும் திறன்குறுக்கே நிற்காதீர்கள்கிறுக்கர்களே!
கருத்துக்கள்

கம்பரின் இலக்கியத்தை முழுமையாகக் கருத்தூன்றிப் படித்தால் ஒருவர் புலவராக ஒளிவிடலாம். ஆனால், கம்பரைப்பற்றிக் கட்டுரை அளிக்க விரும்புபவர்கள் தமிழ் இலக்கியம், ஒப்பிலக்கியம், சமயமும் தமிழும் என்னும் பொருண்மையிலான அரங்குகளில் கட்டுரை அளிக்கத் தடையில்லையே! எனினும் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்னும் பொருளில் தலித் இலக்கியம் என்னும் தலைப்பிலான அமர்வும் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் தலைப்பிலான அமர்வும் செம்மொழி இலக்கியங்கள் அல்லவே! எனவே, இவ்விரு அமர்வுகளை நீக்கி விட்டுச் செம்மொழி இலக்கியங்களும் காப்பியங்களும் என்னும் அமர்வைச் சேர்க்கலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டின் பொழுது அவர் பேரறிஞர் அண்ணாவிற்குக் கம்ப இராமாயணத்தை எரிக்கக் கூடாது என எழுதிய மடலுக்குத் திராவிட நாடு இதழில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நான்கு வாரம் மறுமொழி எழுதினாலும் பின்னர் ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்திற்காக இலக்கியத்தை எரிப்பது என்னும் அளவுகோலைக் கையிலெடுத்தால் இலக்கியங்களே இருக்கா என்னும் உண்மையை ஒப்புக் கொண்டு பரவ விரும்பிய தீயை அணைத்ததை ஒரு வரியிலேனும் பொருத்தமாக நினைவு கூர்ந்ததற்குப் பாராட்டுகள். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 1:17:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக